Published:Updated:

``முள்ளிவாய்க்காலில் தொடங்குகிறேன் நாடாளுமன்றப் பயணத்தை..!’’ - காரணம் பகிரும் விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன், முதன்முறையாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

``முள்ளிவாய்க்கால் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் சின்னம். ஆகவே, இந்த நாடாளுமன்றப் பயணத்தை இங்கிருந்து தொடங்குவதே சரியெனப்பட்டது’’ என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியிருப்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 6-ம் தேதி காலை 7:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, இரவுக்குள் மொத்த முடிவுகளும் வெளியாகின. மொத்தமுள்ள 225 இடங்களில், `மொட்டு’ச் சின்னத்தில் போட்டியிட்ட, ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களைப் பெற்று, அபார வெற்றிபெற்றது. அதற்கு அடுத்ததாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சஜித் பிரேமதேசாவின் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.

ராஜபக்சே சகோதரர்கள்
ராஜபக்சே சகோதரர்கள்

அதேவேளையில், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழரசுக் கட்சி பத்து இடங்களையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக் கட்சிக்கு இரண்டு இடங்களும், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைத்திருக்கிறது. இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், இந்தக் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் முதன்முறையாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு இலங்கை அதிபரும், ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள்கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இந்தநிலையில், நாடாளுமன்றத்துக்குச் சென்று பதவியேற்றுக்கொள்வதற்கு முன்பாக, விக்னேஸ்வரன் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்த முள்ளிவாய்க்காலுக்கு வந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

அப்போது இந்தப் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,``முள்ளிவாய்க்கால் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் சின்னம். அதேநேரம் எங்கள் அழிவுக்கு ஒரு காரணம். ஆகவே, என்னுடைய நாடாளுமன்றப் பயணம் இங்கிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. இங்கு நிகழ்ந்த மரணங்களின் காரணமாகத்தான் சர்வதேச சமூகத்துக்கு எங்கள் மண்ணில் நிகழ்ந்த இனப்படுகொலை தெரியவந்தது. இந்த இனப்படுகொலையின் காரணம்தான் எங்களுடைய வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. நாம் எவ்வாறு வாழப்போகிறோம், எந்த மாதிரியான அரசியல் தீர்மானங்களைக் கோரப்போகிறோம் என்பதெல்லாம் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைச் சம்பவங்களின் எதிரொலியாகத்தான் இருக்கும்.

அந்த முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த இடத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குப் புறப்படுகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் இறந்த மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எங்களுடைய அரசியல் தீர்வுகள் அந்தவகையில்தான் முன்னெடுக்கப்படும். இங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்கு அரசு நிச்சயம் வருத்தப்படும் காலம் வரும். ஒருபோதும் எங்கள் தாயகம் அழிந்துவிடாது; தேய்ந்துவிடாது'' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு