Published:Updated:

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

ஒரு போரை நிறுத்தவே நேற்று இரான் தலைவர் கொலை செய்யப்பட்டார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காசிம் - ட்ரம்ப்
காசிம் - ட்ரம்ப்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், நேற்று அமெரிக்க ராணுவப் படை ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் இராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

``வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரில், இரான் தளபதி காசிமைக் கொல்லும் முடிவு எடுக்கப்பட்டது. உலகின் எந்த மூலையில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்” என அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் இராக் தாக்குதலுக்கு விளக்கமளித்திருந்தது.

இரானின் சக்தி வாய்ந்த தலைவர் காசிம் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் தக்க பதிலடி வழங்கப்படும் என இரான் நாட்டின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கிடையில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். நேற்று ஃப்ளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சமீபகாலமாக இராக்கில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் வீரர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஓர் அமெரிக்கக் குடிமகன் உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனுடன் பாக்தாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் சுலைமானியின் வழிகாட்டுதலின்படியே நடந்துள்ளன.

`ட்ரம்ப் சொன்னபடியே செய்தோம்!’- இரானின் முக்கியத்  தலைவரைக் கொன்ற அமெரிக்கா

அப்பாவி மக்களின் மரணத்தையே தன் ஆர்வமாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தார் சுலைமானி. அவர் டெல்லி முதல் லண்டன் வரை நடக்கும் பயங்கரவாத சதிகளுக்குப் பங்காற்றியுள்ளார். சுலைமானியின் பல அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் இன்றும் நினைவில் வைத்து மதிக்கிறோம். தற்போது அவரின் பயங்கரவாத ஆட்சி முடிந்துவிட்டது என்பதில் ஆறுதல் கொள்வோம்.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்கா நேற்று செய்ததை நீண்ட காலத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். சமீபத்தில், இரான் அரசை எதிர்ப்பவர்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு சுலைமானி தலைமை தாங்கினார். அவரால் 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தினாலேயே சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரவே நேற்று நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், போரை உருவாக்க அல்ல. இரான் நாட்டு மக்கள் சிறந்த பாரம்பர்யமும் அதிக ஆற்றலும் கொண்டவர்கள். அவர்கள் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.