Published:Updated:

`கடுமையான கட்டுப்பாடு; கட்டாய தனிமனித இடைவெளி’ - தைரியமாகத் தேர்தலை நடத்தும் தென்கொரியா #Corona

தென்கொரியா
தென்கொரியா

கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மிகத் தைரியமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி வருகிறது தென்கொரியா. இன்று அங்கு வாக்கு பதிவு நடைபெறுகிறது.

மனித குலத்தை அச்சுறுத்தும் சில மிக மோசமான விஷயங்களில் தற்போது முதல் இடம் பிடித்திருப்பது கொரோனா வைரஸ்தான். ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த உலகத்தையும் அடக்கி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்த வைரஸுக்கு இது வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இந்தக் கண்ணுக்குத் தெரியாத கிருமிக்கு எதிராகப் புவியே போர் தொடுத்து வருகிறது. தன்னைப் பற்றி வேறு எதையுமே சிந்திக்கவிடாமல் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என அனைவரது வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தக் கொடூர கொரோனா.

கொரோனா
கொரோனா

வைரஸின் பிடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து நாடுகளும் தங்கள் முக்கிய பணிகளை ஒத்திவைத்துள்ள இந்த நேரத்தில் தைரியமாக மக்களைத் திரட்டி தேர்தல் நடத்தி வருகிறது தென் கொரியா. ஆம் இன்று தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சீனாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் அதற்கு அடுத்தபடியாகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்த நாடு தென் கொரியா. பிப்ரவரி மாத தொடக்கத்தில் சீனாவும் தென் கொரியாவும்தான் வைரஸ் பிடியில் சிக்கியிருந்தன. அப்போது பிற நாடுகள் இதைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தன.

`மெர்ஸிலிருந்து கற்ற பாடம்; 20,000 பேருக்குச் சோதனை!’ - கொரோனாவை அடக்கிய தென்கொரியா

ஆனால், தற்போது அந்த இரு நாடுகளும் வைரஸில் இருந்து மீண்டுவிட்ட நிலையில் மற்ற நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. தென் கொரியாவில் வைரஸ் உறுதியானது. அதைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு அதிரடியான மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது அந்நாட்டு அரசு. பிப்ரவரியில் மூடப்பட்ட தென் கொரிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,591 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆகவும் உள்ளது. மார்ச் மாதத்துக்குப் பிறகு, தென் கொரியாவில் பெரிதாக யாரும் வைரஸால் பாதிக்கப்படவில்லை. ஒரே வாரத்தில் மோசமான நாட்டு நிலைமையை அதைவிட வேகமாகச் செயல்பட்டு மீட்டுள்ளது தென் கொரிய அரசு.

தென்கொரியா
தென்கொரியா

அங்கு வைரஸ் அச்சம் தணிந்துள்ள நிலையில், தற்போது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 35 கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருந்தும் அங்கு ஆளும்கட்சியாக உள்ள குடியரசு கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் ஐக்கிய கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.

தென்கொரியா முழுவதும் உள்ள பெரிய கூடங்களில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வாக்குச் சாவடி வாயிலில் கட்டாயம் கை கழுவ வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு வரும் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, சாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தென் கொரியா முழுவதும் சுமார் 43.9 மில்லியன் மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.

தென்கொரியா
தென்கொரியா

இதுவரை தென் கொரியாவில் ஒருபோதும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதில்லை. 1952-ம் ஆண்டு நடந்த கொரிய போரின்போதும் அங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. கொரோனா அச்சத்தால் தற்போது நடக்கும் தேர்தலுக்கு நேரடி பிரசாரங்கள் எதுவும் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் மட்டுமே பிரசாரம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு