Published:Updated:

எல்லையில் சிக்கிய தென் கொரிய அதிகாரி; சுட்டுக்கொன்று எரித்த வட கொரியப் படை! - நடுக்கடல் அதிர்ச்சி

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

தென் கொரிய அதிகாரி ஒருவர், வட கொரியப் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, வட கொரியாவில் கொரோனா பரவல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்துவந்தது. வட கொரிய அதிபர் கிம், கொரோனா அச்சத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை போன்ற தகவல்களும் வெளியாகின. என்றாலும், அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத காரணத்தால், உண்மைநிலை தெரியாமல் இருந்துவந்தது.

கிம்
கிம்

சீனாவுடன் மிக நெருக்கமான வர்த்தகத் தொடர்பிலிருக்கும் வட கொரியாவில், கொரோனா இல்லை என்பதை உலக நாடுகள் ஏற்க மறுத்துவந்தன. இந்தநிலையில் வட கொரியாவுக்குள் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதாகக் கூறி, தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, சீன எல்லையில் கண்டதும் சுடும் உத்தரவை வட கொரியா பிறப்பித்திருப்பதாக, தென் கொரியாவிலிருக்கும் அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அப்ராம்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

வட கொரியா: கொரோனா பரவல்... சீன எல்லையில் கண்டதும் சுட உத்தரவு?! - அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்

சீனாவில், கொரோனா பரவல் ஆரம்பித்த காலகட்டத்திலேயே வடகொரியா அதன் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. எல்லை மூடல், கடத்தல் பொருள்களுக்கான தேவையை அதிகரித்திருக்கிறது. இதனால், பலர் எல்லைகளில் பொருள்களை கைமாற்றி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில் சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கான பகுதியை, புதிய `இடையக மண்டலமாக’ ​​அறிமுகப்படுத்தி, அந்தப் பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள்மீது, வட கொரியாவின் SOF, SF படைகள், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வடகொரியா வழக்கம்போல் இந்த விவகாரத்திலும் அமைதி காத்தது.

வட கொரியா
வட கொரியா

இந்தநிலையில், தென்கொரிய அதிகாரி ஒருவர், வட கொரிய பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கடல் எல்லையாகச் செயல்படும் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதி அருகே கடந்த 21-ம் தேதி தென் கொரிய மீன்வள அதிகாரி ஒருவர் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி கண்காணிப்புப் படகில் வட கொரிய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

47 வயதான அந்த அதிகாரி காணாமல்போனதாக நம்பப்படும் 24 மணி நேரத்தில் வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டார். கொரோனா தடுப்புக் கவசங்கள் அணிந்திருந்த வட கொரிய அதிகாரிகள், தென் கொரிய அதிகாரியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதுடன், நடுக்கடலிலேயே அவர்மீது எண்ணெயை ஊற்றி, தீ வைத்து சாம்பலாக்கியிருக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருக்கிறது தென் கொரியா.

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள்
வடகொரியா - தென்கொரியா அதிபர்கள்

சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் வட கொரியப் படைகள் இப்படிச் செய்திருக்கலாம் என்று தென் கொரியாவின் ராணுவம் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.`வட கொரியப் படையின் இது போன்ற அட்டூழியங்களை எங்கள் ராணுவம் கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வடகொரியா விளக்கமளிக்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை தண்டிக்கவும் வேண்டும்’ என தென் கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் யங்-ஹோ கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு