Published:Updated:

புதிய அமெரிக்கா, புதிய கனவுகள், புதிய சவால்கள்!

ஜோ பைடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ பைடன்

ஆப்ரோ அமெரிக்கரான அவரால் இரண்டு நிமிடங்கள் சேர்ந்தாற்போல் பேசமுடியவில்லை. பேசும்போதே குரல் தழுதழுத்து, தேய்ந்து, உடைகிறது. அழவும் செய்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் வாழ்வு திரும்பக் கிடைந்துவிட்டதைப் போல் பலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். முழு தேசத்துக்கும் விடுதலை கிடைத்துவிட்டதைப் போல் தங்கள் தேசியக் கொடியைக் காற்றில் அசைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘நான் இன்னமும் இறக்கவில்லை; பிழைத்து வந்துவிட்ட என்னைப் பார்’ என்று ஜனநாயகம் தன் இரு கரங்களையும் நீட்டி அமெரிக்கர்களைக் கட்டியணைத்துப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘நம் கண்முன்னால் ஒரு புதிய வரலாறு உருவாகிக்கொண்டிருக்கிறது’ என்கிறார் ஹிலாரி கிளின்டன். அமெரிக்க மகளிர் குடியுரிமை பெற்று 100 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஒரு பெண்... முதல் முறையாகத் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒருவர்... முதல் முறையாக ஒரு ஆப்ரோ அமெரிக்கர் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு பெண் என்பதால் ஹிலாரி கிளின்டனைக் கடுமையாகவும் மோசமாகவும் கடந்த தேர்தலில் கிண்டலடித்த ட்ரம்பை மட்டுமல்ல, ‘என் வாக்கை ஒரு பெண்ணுக்குச் செலுத்தமாட்டேன்’ என்று முகம்சுளித்த பல அமெரிக்க ஆண்களின் காதுகளைப் பிடித்துத் திருகியிருக்கிறது கமலா ஹாரிஸுக்குக் கிடைத்துள்ள வெற்றி.

ஜோ பைடனின் வெற்றியை, அதைவிட முக்கியமாக டொனால்டு ட்ரம்பின் தோல்வியை அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே ஏன் எதிர்நோக்கியிருந்தது என்பதற்கான விடையை சி.என்.என் அரசியல் விமர்சகர் வான் ஜோன்ஸ் அளிக்கிறார். ஆப்ரோ அமெரிக்கரான அவரால் இரண்டு நிமிடங்கள் சேர்ந்தாற்போல் பேசமுடியவில்லை. பேசும்போதே குரல் தழுதழுத்து, தேய்ந்து, உடைகிறது. அழவும் செய்கிறார்.

புதிய அமெரிக்கா, புதிய கனவுகள், புதிய சவால்கள்!

‘நான் மட்டுமல்ல, பலரும் விடுதலை அடைந்ததைப் போல் உணர்கிறோம். இனி ஒரு முஸ்லிமோ பக்கத்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தவரோ அமெரிக்க அதிபர் என்ன நினைப்பாரோ, என்ன செய்வாரோ என்று ஒவ்வொரு கணமும் அஞ்சிக்கொண்டிருக்கவேண்டிய நிலை இருக்காது. ஒரே ஒரு ட்வீட் மூலம் உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இனவெறியைக் கிளப்பி உங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் அதிபர் இனி இங்கே இல்லை. அமெரிக்கா மாறப்போகிறது.’

46ஆவது அதிபராகப் பதவியேற்றுக்கொள்ளவிருக்கும் பைடன், பிளவுண்ட ஓர் அமெரிக்காவை, உடைந்து காயப்பட்டுப்போயிருக்கும் ஓர் அமெரிக்காவை, நோயுற்றிருக்கும் ஓர் அமெரிக்காவை ஆள்வதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கு முன்னால், அமெரிக்கர்களைக் காப்பதற்குமுன்னால் அவர் ஒன்றைச் செய்தாகவேண்டும். தன்னை அவர் காத்துக்கொள்ளவேண்டும். ட்ரம்ப் வீசியிருக்கும், அடுத்தடுத்து வீசப்போகும் எண்ணற்ற வழக்குகளை அவர் முதலில் முறியடிக்கவேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை விரைவில் பத்து மில்லியனை எட்ட இருக்கிறது. வேறெங்கும் இல்லாதபடிக்கு இதுவரை 2,30,000 பேர் அமெரிக்காவில் உயிரிழந்திருக்கிறார்கள். ‘முகக்கவசம் அணியுங்கள், கூட்டம் கூடாதீர்கள்’ என்று ஆனா ஆவன்னாவிலிருந்து அவர் தொடங்கியாகவேண்டும். அறிவியல் கண்ணோட்டமற்ற ஓர் அதிபரின் கொடுந்தவறுகளை அவர் உடனடியாகச் சரி செய்தாகவேண்டும். விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கி மருத்துவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவது தொடங்கி ஒரு போரை அவர் முன்னெடுக்கவேண்டியிருக்கிறது.

உலக சுகாதார மையம், யுனெஸ்கோ, மனித உரிமைகள் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் ட்ரம்ப் முறித்துப்போட்ட உறவைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் முதல் ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்வரை பலவற்றைப் புதிய கண்களைக் கொண்டு ஆராயவேண்டும்.

புதிய அமெரிக்கா, புதிய கனவுகள், புதிய சவால்கள்!

ஆனால் பைடனால் இவற்றையெல்லாம் செய்து முடிக்கமுடியுமா என்னும் சந்தேகத்தையும் இதே தேர்தல் முடிவுகள் நமக்குக் கடத்துகின்றன. டெமாக்ரடிக் கட்சி எதிர்பார்த்ததைப் போல் முழு அமெரிக்காவும் ட்ரம்பைக் கைகழுவிவிட்டு பைடனுக்குப் பின்னால் ஒன்று திரண்டுவிடவில்லை. மாறாக, கடந்த தேர்தலைவிட அதிக எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் ட்ரம்புக்கு இந்தமுறை வாக்களித்திருக்கிறார்கள். மிஷிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் கடந்தமுறை ஹிலாரி வென்றதைக் காட்டிலும் அதிக ஓட்டுகளை பைடனால் பெறமுடிந்தது உண்மை என்றாலும் ட்ரம்போடு இறுதிக்கணம் வரை சில மாகாணங்களில் அவர் போராடிக்கொண்டிருந்தார்.

யார் புளோரிடாவை வெல்கிறாரோ அவருக்கே வெள்ளை மாளிகை சொந்தம் என்று சொல்லப்படுவதுண்டு. 2008 தேர்தலில் ஒபாமா வென்றெடுத்த புளோரிடாவை ட்ரம்பிடம் இழந்துவிட்டார் பைடன். க்யூப அமெரிக்கர்கள், ஹிஸ்பானியர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் புளோரிடாவை பைடனின் டெமாக்ரடிக் கட்சி தவறவிட்டது அவர்களுக்கு நிச்சயம் பேரிழப்பு.

எங்கே தவறு செய்தோம், ஏன் சறுக்கினோம், ஏன் இறுதிக்கணம் வரை ட்ரம்போடு முட்டி மோதிப் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை பைடனும் அவர் கட்சியும் நிச்சயம் அலசி ஆராய்ந்தே தீரவேண்டும்.

ட்ரம்பின் இனவாதம் உலகப் புகழ்பெற்றது என்றபோதும் புளோரிடா மட்டுமன்றி விஸ்கோன்சின், ஒஹையோ, பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் ஆப்ரோ அமெரிக்கர்களும் (12%) ஹிஸ்பானியர்களும் (14%) கடந்த தேர்தலைவிட அதிக அளவில் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ட்ரம்ப் வெளியேறிவிட்ட பிறகும் ட்ரம்பின் அமெரிக்கா அங்கேதான் இருக்கப்போகிறது என்னும் உண்மையை பைடன் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்? ட்ரம்ப் வீழ்த்தப்பட்டுவிட்டாலும் அமெரிக்க மண்ணில் நிலைகொண்டுவிட்ட ட்ரம்பிசத்தை என்ன செய்வது?

புதிய அமெரிக்கா, புதிய கனவுகள், புதிய சவால்கள்!

ட்ரம்பால் இந்தத் தோல்வியை இயல்பாக ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். என்னவாவது செய்து பைடனைத் தடுக்கமுடியுமா என்று தனது சட்ட வல்லுநர்களைப் போட்டு இன்னமும் அவர் துளைத் தெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

டெட்ராய்ட், பிலடெல்பியா இரண்டு மாகாணங்களிலும் ஓட்டு எண்ணிக்கை முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர் சொன்னது பொய் மட்டுமல்ல. இரண்டுமே அதிக எண்ணிக்கையில் ஆப்ரோ அமெரிக்கர்கள் வாழும் பகுதி என்பதையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் அவருடைய குரூர முகம் வெளிப்படும்.

ஆம், ஆச்சர்யமூட்டும் வகையில் ட்ரம்ப் அதிக ஓட்டுகளைப் பெற்றிருப்பது உண்மையே. கடந்த முறை ஹிலாரி கிளின்டனுக்கு நேர்ந்ததும் இதுவேதான், இல்லையா? டிரம்பைவிட அதிக மக்கள் ஓட்டுகள் கிடைத்தும் ‘எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுக்களின் ஓட்டுகள் குறைந்ததால்தானே ஹிலாரி இதே ட்ரம்பிடம் தோற்றார்? கடந்த முறை ட்ரம்பை எந்தத் தேர்தல் அமைப்புமுறை பதவியில் அமர்த்தியதோ அதுதானே இந்தமுறை அவரைத் தோற்கடிக்கவும் செய்திருக்கிறது. அப்போது சரியாகச் செயல்பட்ட அமைப்பு இப்போது சீர்கெட்டுவிட்டதா? கடந்தமுறை இனித்தது இப்போது கசக்கிறதா?

துணை அதிபராகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு டெக்சாஸ் ‘சிறப்பான வரவேற்பை’ அளிக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே டிரம்பின் மகன் ட்விட்டரில் தன் ஆதரவாளர்களுக்கு சமிக்ஞை காட்டியிருக்கிறார். தேர்தல் பிரசாரத்தின்போது வெறியோடு ஜோ பைடனின் வாகனத்தைச் சுற்றி வளைத்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா குறித்துத் தேவையற்ற அச்சத்தைப் பரப்பிவருகிறார் என்று அரசு சுகாதாரத் துறை அதிகாரியான டாக்டர் ஆண்டனி ஃபௌசியை ட்ரம்ப் அவமானப்படுத்தினார் என்றால் அவர் ஆதரவாளர்களோ ஒருபடி மேலே போய், ஃபௌசியின் தலையை வெட்டியெடுத்து வெள்ளை மாளிகைக்கு வெளியில் காட்சிப்படுத்தவேண்டும் என்று கொக்கரிக்கின்றனர்.

புதிய அமெரிக்கா, புதிய கனவுகள், புதிய சவால்கள்!

கொரோனா காரணமாக பெரும் எண்ணிக்கையில் குவிந்த தபால் ஓட்டுகளை மூன்று தினங்களாக எண்ணிக்கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்களைக்கூட இழிவாகத் தாக்கியிருக்கிறார் ட்ரம்ப். அவர் கண்ணசைத்தால் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றன பல இனவெறிக் குழுக்கள். ட்ரம்பிடமிருந்தும் அவர் ஆதரவாளர்களிடமிருந்தும் அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவேண்டிய பெரும் பொறுப்பு கூடுலாக பைடனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ட்ரம்ப் விரும்பிப் பார்க்கும் ஒரே சானல் வலதுசாரி ஆதரவோடு இயங்கும் ஃபாக்ஸ் நியூஸ். ட்ரம்ப் தோல்வியடைந்துகொண்டிருப்பது தெரிந்ததும் அதில் செய்தி வாசிக்கும் ஒரு பெண்ணை வைத்து ஓர் அறிவிப்பைச் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறார்கள். ட்ரம்ப் காதுகளில் விழவேண்டும் என்னும் ஒரே நோக்கத்தோடு அவரோடு பேசும் வகையில் வெளியான அறிவிப்பு அது. ‘ஒருவேளை நீங்கள் தோற்றுவிட்டால் தயவு செய்து அடம் பிடிக்காமல், நாகரிகமாக வெள்ளை மாளிகையைக் காலி செய்து வந்துவிடுங்கள். உங்களுக்கும் உங்கள் பதவிக்கும் அதுதான் அழகு!’ கையில் வெடிகுண்டோடு நின்று மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கரவாதியைக் கெஞ்சிக் கூத்தாடி வழிக்கு வரவழைப்பதைப் போல் ஓர் அதிபரோடு போராடுவதென்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.

‘நடந்து முடிந்திருப்பது அநீதியான தேர்தல்’ என்னும் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்ததன்மூலம் ட்ரம்ப் சாதித்திருப்பது ஒன்றுதான். பைடனுக்கு அமெரிக்கர்கள் வழங்கியுள்ள வெற்றிக் கோப்பையில் கொஞ்சம் நஞ்சை ட்ரம்ப் சேர்த்திருக்கிறார். நேருக்கு நேர் நின்று தோற்கடிக்க முடியாததால் பைடனின் முதுகில் குறுவாளைச் செருகியிருக்கிறார் ட்ரம்ப்.

ஜனவரி 20ம் தேதிதான் பைடனால் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்ளமுடியும். அதுவரை ட்ரம்ப்தான் நீடிப்பார். வெளியேறுவதற்கு முன்பு இன்னும் என்னென்ன சேதங்களெல்லாம் சாத்தியமோ அனைத்தையும் அவர் ஏற்படுத்தக்கூடும். வெள்ளை மாளிகையிலிருந்து என்னவெல்லாம் சாத்தியமோ அனைத்து ஆதாயங்களையும் திரட்டிக்கொள்வதில்தான் அவருடைய கவனமெல்லாம் இருக்கும்.

ட்ரம்ப் ஏற்படுத்திய பாதிப்புகளையும் இனி ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளையும் சரிசெய்வதென்பது அசாத்தியமான ஒரு பெரும்பணி. வெள்ளை மாளிகையிலிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவிலிருந்தும் அவர் கசடுகளை அகற்றியாகவேண்டும். அதை பைடனோ கமலாவோ மட்டுமல்ல, ஜனநாயகத்தின்மீது அக்கறைகொண்டிருக்கும் ஒவ்வொரு அமெரிக்கரும் சேர்ந்துதான் செய்தாகவேண்டும்.