அரசியல்
அலசல்
Published:Updated:

மாகாண இணைப்பில் புதின்... நேட்டோ இணைப்பில் ஜெலன்ஸ்கி... தீவிரமடையும் ரஷ்யா - போர்!

ஜெலன்ஸ்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெலன்ஸ்கி

ஏற்கெனவே ரஷ்யா வசமிருந்த சில முக்கியப் பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்தது, ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

நீண்டுகொண்டே செல்லும் ரஷ்யா - உக்ரைன் போரில், கடந்த வாரம் உக்ரைனின் நான்கு மாகாணங்களைத் தங்களுடன் இணைத்து அதிரடிகாட்டியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தன் பங்குக்கு, நேட்டோவில் சேருவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கிறார். இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காததால், நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துகொண்டேயிருக்கிறது. என்ன நடக்கிறது ரஷ்யா - உக்ரைன் போரில்?

மாகாண இணைப்பில் புதின்... நேட்டோ இணைப்பில் ஜெலன்ஸ்கி... தீவிரமடையும் ரஷ்யா - போர்!

நான்கு மாகாணங்களை இணைத்த புதின்!

உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜப்ரோஷியா ஆகிய நான்கு மாகாணங்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா. தலைநகர் மாஸ்கோவில் நடந்த கோலாகல விழாவில், இந்த இணைப்பு குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்த இணைப்பு தொடர்பாக, அந்த நான்கு மாகாணங்களிலுள்ள மக்களிடமும் ரஷ்யா தரப்பிலிருந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. செப்டம்பர் 22-ல் தொடங்கிய இந்த வாக்கெடுப்பில், `ரஷ்யாவுடன் இணைய விருப்பமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 27-ல் முடிவடைந்த வாக்கெடுப்பில், ஜப்ரோஷியா பகுதியில் 93 சதவிகிதம் பேரும், கெர்சனில் 87 சதவிகிதம் பேரும், லுஹான்ஸ்க்கில் 98 சதவிகிதம் பேரும், டொனட்ஸ்க்கில் 99 சதவிகிதம் பேரும் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அமெரிக்காவும் ஐ.நா-வும், `ஒருபோதும் இந்த இணைப்பை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்’ என்று கருத்து தெரிவித்திருக்கின்றன.

போலி வாக்கெடுப்பு!

2014-ம் ஆண்டில், உக்ரைனின் தீபகற்பப் பகுதியான கிரீமியாமீது படையெடுத்தது ரஷ்யா. அப்போதும் இதே போன்று வாக்கெடுப்பு நடத்தி, கிரீமியாவை ரஷ்யாவோடு இணைத்துக்கொண்டார் புதின். இந்த நிலையில் தற்போது, மேலும் நான்கு மாகாணங்களை ரஷ்யா இணைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. “ரஷ்யக் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தினால், முடிவு அவர்களுக்குச் சாதகமாகத்தான் வரும். இது போலியான வாக்கெடுப்பு” என மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. `ஜி-7’ நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ``ரஷ்யாவின் இந்தப் பொது வாக்கெடுப்பு ஐ.நா சாசன விதிகளை மீறுவதாகும். ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளையே ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக அபகரிக்கப்பார்க்கிறது’’ என்று குறிப்பிடடப்பட்டிருக்கிறது. `லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் அதிகமிருக்கின்றனர். மற்ற இரண்டு மாகாணங்களிலும் மிரட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

மீண்டும் நேட்டோ!

இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உக்ரைன், நேட்டோவில் சேர முடிவெடுத்ததுதான் ரஷ்யப் படையெடுப்புக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ரஷ்யாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நேட்டோவுடன் இணைவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தில் கையெழுத்திட்டிருக்கிறேன். இதன் மூலம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்’’ என்று அறிவித்திருக்கிறார். உக்ரைனின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், ``ரஷ்ய அதிபராக புதின் இருக்கும் வரை உக்ரைன், அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாது. புதிய அதிபர் வந்த பிறகே பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்று ஜெலன்ஸ்கி கூறியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தடுத்து நிறுத்தப்பட்ட ஐ.நா தீர்மானம்!

உக்ரைன் மாகாணங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. ஆனால், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்களித்து, அந்தத் தீர்மானத்தைத் தடுத்துவிட்டது ரஷ்யா. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் தொடர்பாக ஐ.நா-வில் பேசிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ், ``மனித உயிர்களை பலி கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது. வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரே பதில் கலந்துரையாடல் மட்டுமே’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மாகாண இணைப்பில் புதின்... நேட்டோ இணைப்பில் ஜெலன்ஸ்கி... தீவிரமடையும் ரஷ்யா - போர்!

ரஷ்யாவுக்குச் சறுக்கல்!

ஏற்கெனவே ரஷ்யா வசமிருந்த சில முக்கியப் பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்தது, ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. அதைச் சரிக்கட்டவே உக்ரைனின் நான்கு மாகாணங்களைத் தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷ்யா முடிவுசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யா வசமிருந்த மற்றொரு முக்கிய நகரமான லைமனை மீட்டெடுத்து, அங்கும் தங்கள் நாட்டுக்கொடியை ஏற்றியிருக்கிறது உக்ரைன். மேலும், அந்த நகரம் முழுவதுமிருந்த ரஷ்யக் கொடிகளை அகற்றும் காணொளிகளும் வெளியிடப்பட்டன. சுமார் 5,000 ரஷ்ய வீரர்களைச் சுற்றிவளைத்த உக்ரைன் ராணுவம், பல ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், நகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறது. இதனால் ரஷ்யா தனது படையினரை அங்கிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. இதுவரை லைமன் நகரைப் போக்குவரத்து நிலையமாகப் பயன்படுத்திவந்த ரஷ்ய ராணுவத்துக்கும் இது பெரும் சறுக்கலாக அமைந்திருக்கிறது.

இப்போதைக்குப் போர் முடிவுக்கு வருவதற்கான சிறு அறிகுறியும் இல்லை!