Published:Updated:

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்தியர் வருவாரா?

லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்

70 ஆண்டுக்காலமாக இல்லாத அளவுக்கு அரசாங்கம் விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. பிரதமரானால் நீங்கள் அதைக் குறைப்பீர்களா?'

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்தியர் வருவாரா?

70 ஆண்டுக்காலமாக இல்லாத அளவுக்கு அரசாங்கம் விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. பிரதமரானால் நீங்கள் அதைக் குறைப்பீர்களா?'

Published:Updated:
லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களான நிதி அமைச்சர் ரிஷி சுனக், நல்வாழ்வுத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் சுமார் 50 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் இருக்கின்றனர்.

பிரிட்டனில் ஒரு பிரதமர் பதவி விலகும்போது புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை வித்தியாசமானது. ஆளுங்கட்சியில் குறைந்தபட்சம் 20 எம்.பி-க்கள் ஆதரவு உள்ள யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம். பல சுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும். எம்.பி-க்கள் வாக்களிக்க வாக்களிக்க, குறைந்த வாக்குகள் பெற்ற ஒவ்வொருவரும் ஒருவர்பின் ஒருவராக போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்
லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்

முதலில் 11 பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். 20 எம்.பி-களின் ஆதரவு தங்களுக்கு இல்லாததால், மூன்று பேர் ஆரம்பத்திலேயே போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளவர் எனக் கருதப்பட்ட நல்வாழ்வுத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் இந்த மூவரில் ஒருவர். சொல்லப்போனால் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்து முதலில் ராஜினாமா செய்த அமைச்சர் இவர்.

அந்த மூவரின் விலகலைத் தொடர்ந்து எட்டுப் பேர் களத்தில் இருந்தனர். போரிஸ் ஜான்சன் பிரதமரானபோது அவருடன் போட்டியிட்டுத் தோற்றுப்போன ஜெர்மி ஹன்ட், நதீம் ஜஹாவி, அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Suella Braverman, இதுவரை அரசுப் பதவி வகிக்காத காரணத்தால் எந்தச் சர்ச்சையிலும் சிக்காத Tom Tugendhat, ஆளும்கட்சியின் வலதுசாரி எம்.பி-க்களுடைய ஆதரவு பெற்றவர்கள் எனச் சொல்லப்பட்ட Kemi Badenoch, Penny Mordaunt மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் போட்டியில் இருந்த மற்ற ஏழு பேர். எட்டாவது நபராக எல்லோரையும்விடக் கூடுதல் வாக்குகள் பெற்று கடைசிவரை முன்னணியில் இருந்தார் ரிஷி சுனக்.

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்தியர் வருவாரா?

இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் மட்டும் போட்டியில் உள்ளனர். எம்.பி-க்கள் வாக்கெடுப்பு முடிந்து இப்போது சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த இருவரில் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒவ்வொரு சுற்றாகக் கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளர்கள் வெளியேறிய காலகட்டத்தில் அந்த வேட்பாளர்கள் பங்கேற்ற தொலைக்காட்சி விவாதங்கள் மிகவும் சுவாரசியமானவை.

சேனல் 4 என்ற பிரபல தொலைக்காட்சி சேனலில் கிருஷ்ணன் குருமூர்த்தி என்ற தொலைக்காட்சி நெறியாளர் அத்தனை வேட்பாளர்களையும் ஒருசேர வறுத்தெடுத்தார். ‘போரிஸ் ஜான்சன் நேர்மையானவர் என்று கருதுகிறீர்களா?' என நேரடியாக அத்தனை பேரிடமும் கேட்டார். ‘‘சில சமயம்'' என்று ஒருவர் பதிலளிக்க, ‘‘அவர் நேர்மையற்றவர்'' என்று சொல்ல டாம் என்ற ஒருவரைத் தவிர மற்றவர்கள் தயங்கினார்கள. அதே கேள்வியை நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடம் கிருஷ்ணன் குருமூர்த்தி கேட்டபோது யாருமே கை தூக்கவில்லை.

இன்னொரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்த வேட்பாளர்கள் அடித்துக் கொள்ளாத குறையாக விவாதம் செய்தனர். ஒவ்வொருவருக்கும் இன்னொருவரை ஒரு கேள்வி கேட்கலாம் என்ற வாய்ப்பு தரப்பட்டது. பெரும்பாலான கேள்விகள் ரிஷி சுனக் மீது வீசப்பட்டன.

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்தியர் வருவாரா?

‘‘70 ஆண்டுக்காலமாக இல்லாத அளவுக்கு அரசாங்கம் விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. பிரதமரானால் நீங்கள் அதைக் குறைப்பீர்களா?'' என்று ரிஷியிடம் கேட்கப்பட்டது. ‘‘பணவீக்கம் காரணமாக விலைவாசி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வரி குறைப்பு செய்ய மாட்டேன். அது நாட்டுக்கு நல்லதல்ல'' என்று ரிஷி பதில் சொன்னார். அத்தனை வேட்பாளர்களும் வரி குறைப்பு செய்வேன் என்று வாக்குறுதி தந்தபோது ரிஷி மட்டும் இப்படிச் சொன்னார். ‘‘பிரிட்டனைப் போல எந்த நாடும் இவ்வளவு வரி விதிக்கவில்லை. ரிஷி சுனக் வரிகளை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியதால்தான் நாடு துன்பப்படுகிறது'' என்று குற்றம் சாட்டினார் லிஸ் ட்ரஸ். ‘‘வரிகளைக் குறைப்பதுதான் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும்'' என்று அதற்கு பதில் சொன்னார் ரிஷி.

லிஸ் ட்ரஸ் இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்தாலும், இதற்கு முன்பு லிபரல் டெமாக்ரட் கட்சியில் இருந்தார். அதுகுறித்து விவாதங்களில் கேள்விகள் வரும்போது அவர் முகம் சிவந்து காட்டமாகிவிடுகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் சர்ச்சைக் குள்ளான இன்னொரு விஷயம், ரிஷி சுனக் மனைவியின் வரி தவிர்ப்பு விவகாரம் (இதுபற்றிய கட்டுரையை ஏப்ரல் மாதம் ஆனந்த விகடனில் எழுதியிருந்தோம்). ‘‘என் மனைவி தன் வருமானம் மற்றும் அது தொடர்பான வரிகள் பற்றித் தெளிவாக்கிவிட்டார். அவர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கி எத்தனையோ பேருக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். என் மாமனார் நாராயணமூர்த்தி, மாமியார் சுதா மூர்த்தி இருவரையும் பற்றி நான் மிகவும் பெருமை கொள்கிறேன்'' என்று ரிஷி சொன்னார்.

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்தியர் வருவாரா?

இந்த இருவரில் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் தபால் மூலம் நடைபெறும். இந்தத் தேர்தலில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும். கன்சர்வேட்டிவ் கட்சியில் உறுப்பினராக குறைந்தது மூன்று மாத காலம் இருந்தவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். கடைசி நேரத்தில் சேருபவர்கள் அல்லது சேர்க்கப்படுபவர்கள் வாக்களிக்க முடியாது.

ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் நாடு முழுவதும் பயணம் செய்து சுமார் 12 கூட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி, அவர்களிடமிருந்து கேள்விகளை நேரடியாக எதிர்கொள்வார்கள். இதில் 2 நேருக்கு நேர் மோதல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் ரிஷி சுனக் மட்டுமே அதிகபட்ச வாக்குகள் பெற்று அத்தனை சுற்றிலும் முன்னணியில் இருந்தார். ஆனால், அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பில் லிஸ் ட்ரஸ் தொண்டர்களால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவந்துள்ளது.

யார் பிரிட்டிஷ் பிரதமர் ஆவார் என்பதுதான் எல்லோர் முன்னும் இருக்கக்கூடிய மில்லியன் பவுண்ட் கேள்வி.

ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் என டெக்னாலஜி சகிதமாக பிரசாரத்தில் தூள் கிளப்புகிறார் ரிஷி. ஓர் அகதியாக தன்னுடைய குடும்பம் பிரிட்டன் வந்து, முன்னேறி, தான் இந்த நிலையை அடைந்திருப்பதாகத் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ரிஷி சுனக் வீடியோ பிரிட்டன் எங்கும் சுற்றிவருகிறது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

அதேநேரம், பெரும்பாலான பத்திரிகைகள் - குறிப்பாக Daily Mail - லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே, குறிப்பாக நகரத்திற்கு அப்பால் இருக்கும் தொண்டர்களிடையே சோஷியல் மீடியா பிரசாரங்களைத் தாண்டி பத்திரிகைகள் செய்யும் பிரசாரம் எடுபடும் என்று நம்பப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சித் தொண்டர்களில் சுமார் 58% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இளைஞர்கள் குறைவு.

ஒபாமா போன்ற ஒருவரை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்களுக்கு எத்தனையோ ஆண்டுகள் ஆயின. பிரிட்டிஷ் வம்சாவளி அல்லாத புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவரை - கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பிரதமராக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு செப்டம்பர் 5-ம் தேதி விடை தெரிந்துவிடும்.