Published:Updated:

பல ஆயிரம் தமிழர்கள் இறந்துபோனதாக அறிவிப்பு... மீட்பு நடவடிக்கைக்கு இலங்கை முற்றுப்புள்ளி!

கோத்தபய
கோத்தபய

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான கோத்தபயவின் அறிவிப்பால் இலங்கைத் தமிழர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களின் உறவினர்கள் தவித்து வந்தனர். காணாமல் போனவர்கள் பற்றி முறையாக விசாரிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துவந்தது. காணாமல் போனவர்களை இலங்கை அரசு ரகசிய சிறைகளில் அடைத்து வைத்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துவந்தனர்.

உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போர்

இந்த நிலையில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஐ.நாவின் வசிப்பிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கருடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்தது. அப்போது கோத்தபய ராஜபக்சே ஐ.நா பிரதிநிதியிடம், ``இலங்கையில் 27 ஆண்டுகளாக நடந்த போரில் மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அவர்கள் போரில் இறந்துவிட்டனர்' எனத் தெரிவித்ததாக இலங்கை அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயத்தில் இலங்கை அரசுப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. பலவந்தமாகப் பலரை காணாமல்போகச் செய்தன. நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் எனப் பல்வேறு போர்க் குற்றங்களை மேற்கொண்டனர்.

பெரியார், செருப்பு மாலை, ரஜினி கருத்து... 1971 சேலம் ஊர்வலத்தில் என்ன நடந்தது?

தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சே உள்நாட்டுப் போரின்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். உள்நாட்டுப் போர் சமயங்களில் நடைபெற்ற போர்க் குற்றங்களில் அவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

2009-ல் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் முடிவில், ஐக்கிய நாடுகள் சபை இரு தரப்பினரின் அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் சுட்டிக்காட்டியது. குறிப்பாகப் போரின் இறுதிக்கட்டங்களில் இலங்கை அரசு மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள், தமிழர்கள் காணாமல் போனதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஐ.நா வும் இலங்கையில் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பம்
காணாமல் போனவர்களின் குடும்பம்

காணாமல் போனவர்களின் நிலை குறித்து தெரிய வேண்டும் என அவர்களின் உறவினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து போராடிவருகின்றனர். ஆனால், இலங்கை அரசு அதில் மௌனமாகவே இருந்து வந்தது. காணாமல் போனவர்களின் நிலை பற்றி அறிய இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டமும் அரசியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர். சர்வதேச மன்றங்களிலும் இது தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இலங்கை அரசு ஐ.நா.விடம் ஒப்புக்கொண்ட 30/1 தீர்மானத்தின்படி காணாமல் போனவர்களின் நிலைபற்றியும் உள்நாட்டுப் போர்க்குற்றங்களைப் பற்றியும் நியாயமாக விசாரிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தது. அதன்படி இலங்கை அரசு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons) என்ற சுயாதீன அமைப்பை அமைத்தது. இந்த அமைப்பு காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை, அவர்களின் குடும்பங்களுக்கான உதவி ஆகியவற்றைச் செய்து தருவதற்காக அமைக்கப்பட்டது.

OMP
OMP

காணாமல் போனவர்களின் நிலைபற்றித் தெரியவில்லை என்றே இலங்கை அரசு தற்போது வரை தெரிவித்துவந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருமே இதே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதோடு ராஜபக்சே குடும்பம் மீண்டும் இலங்கையின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட பெயரளவிலான சீரமைப்பு நடவடிக்கைகளும் தொடருமா என்கிற சந்தேகம் எழுந்தது. தற்போது ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, `காணாமல் போனவர்கள் அனைவரும் புலிகளால் கடத்தப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள்’ என அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு இலங்கை அரசு வைத்துள்ள நிரந்தர முற்றுப்புள்ளியாகவே இது பார்க்கப்படுகிறது. இதனால், இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் பற்றிய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

- கௌஷிகா

பின் செல்ல