`தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!'- இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் முடிவடையவுள்ள நிலையில், தான் தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளார் சஜித் பிரேமதாசா.

இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அந்த நாட்டில் 8-வது அதிபர் தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 12,845 வாக்குச்சாவடிகளில் 80% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

நேற்று மாலை ஐந்து மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மாலை ஆறு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருந்தாலும் அங்கு மிகப் பெரிய கட்சிகளாக உள்ள புதிய ஜனநாயக முன்னணி கட்சி மற்றும் இலங்கை பொதுசன முன்னணி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. தபால் வாக்குகளிலும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் இலங்கை பொதுசன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்தார். அதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் புதிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி புதிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுசன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
ஆனால், ஒரு மணி நேரத்துக்குள் ஒரு லட்சம் வாக்குகளை சமன் செய்து புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட சுமார் 37,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் கோத்தபய ராஜபக்சே.
நேற்று இரவு முதல் சஜித் பிரேமதாசாவும் கோத்தபய ராஜபக்சேவும் தொடர்ந்து மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தனர். இன்று காலை 9 மணி வரை ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்த சஜித் தற்போது பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அதேபோல் காலை வரை பின்னால் இருந்த கோத்தபய ராஜபக்சே 9 மணிக்கு மேல் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது சஜித்தை விட 1.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் ராஜபக்சே.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுள்ளார். ஆனால், மற்ற இடங்களில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மணிக்கு மணி முடிவுகள் தொடர்ந்து மாறி வருவதால் மொத்த அரசியல் தலைவர்களும் இறுதி முடிவுக்காக பரபரப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!
இலங்கை அதிபர் தேர்தலில் பின்னடைவில் இருந்த கோத்தபய ராஜபக்சே இன்று காலைமுதல் தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வந்தார். தற்போதைய நிலவரப்படி ராஜபக்சே 28,02,737 வாக்குகளும், சஜித் 25, 19,140 வாக்குகளும் பெற்றுள்ளனர். சஜித்தை விட 2,83,597 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் ராஜபக்சே.

இந்நிலையில் இலங்கையில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் முடிவடையவுள்ள நிலையில், தான் தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளார் சஜித் பிரேமதாசா. மேலும் வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் சஜித்.