இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை பெரும் இன்னலில் மூழ்கடித்துள்ளது. இதனால், பொதுமக்களும் போராட்டங்கள் மூலம் அரசுக்கெதிராக தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இதில் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் இலங்கையிலிருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர் என தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, கடந்த வியாழனன்று மின்னஞ்சல் மூலம், தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பிவைத்தார்.

இதனை சட்ட ரீதியிலான பரிசீலனைக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு, கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் பதவி ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையைத் தொடங்குவது தொடர்பான கூட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. இதில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, கோத்தபாய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதத்தை வாசித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், ``இலங்கையின் நிதி நெருக்கடியானது எனது அதிபர் பதவிக்கு முன்னிருந்தே, பல வருட தவறான பொருளாதார நிர்வாகத்தில் வேரூன்றியிருந்தது. மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று, இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து பணம் அனுப்புதல் ஆகியவற்றை வெகுவாகக் குறைத்தது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, அனைத்துக் கட்சி அல்லது ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது உட்பட, அதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுத்தேன் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை" என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த கூட்டத்தில், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக, அடுத்த செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடுவதாகவும், அதன் மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை நடத்தவிருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.