Published:Updated:

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை... இனி போர்க்குற்ற விசாரணை நடக்குமா?

இலங்கை உள்நாட்டுப் போர்
News
இலங்கை உள்நாட்டுப் போர் ( UN )

இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா-விடம் ஒப்புக்கொண்ட இரண்டு தீர்மானங்களில் இருந்து விலகப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது.

``இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் தொடர்பாக விசாரணை நடத்துவோம்'' என ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் ஒப்புக்கொண்ட தீர்மானத்திலிருந்து விலகப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதன்மூலம் இனி போர்க்குற்றம் தொடர்பான விசாரணை, காணாமல் போனவர்கள் நிலை பற்றிய அச்சம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் இருந்துவந்தன.

UN
UN

இந்த நிலையில், கடந்த 2015-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைந்த ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு ஐ.நா-விடம் பல விஷயங்களை ஒப்புக்கொண்டது. இது ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இடம்பெற்றன.

இதன்படி போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, போர்க்குற்றம் தொடர்பான நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், சர்வதேச விசாரணையை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகிறது. ஐ.நா தீர்மானத்தில் ஒப்புக்கொண்ட உள்நாட்டு விசாரணையே போதும் என்பதே இலங்கை அரசின் வாதமாக இருந்து வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மறுவாழ்வுக்காக பெயரளவிலான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் போர்க்குற்ற விசாரணை என்பது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. இந்த நிலையில், சரிவிலிருந்த ராஜபக்சேக்கள் செல்வாக்குப் பெற ஆரம்பித்தனர். ரணில் விக்ரமசிங்கே - மைத்திரிபால சிரிசேனா பொருந்தாக் கூட்டு விரிசல் பெற ஆரம்பித்தது. ராஜபக்சேக்கள் பக்கம் சாய ஆரம்பித்தார் சிரிசேனா. மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கி, நாடாளுமன்றத்தை முடக்கி இலங்கைத் தீவையே அதிர வைத்தார். போர்க்குற்றத்தைச் சந்திக்கிற சவேந்திர சில்வாவை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமித்து அடுத்த அதிர்ச்சியளித்தார். ஜனாதிபதி தேர்தல் கோத்தபய ராஜபக்சேவுக்கு வெளிப்படையான ஆதரவளித்து காட்சியில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.

ரணில் - சிரிசேனா
ரணில் - சிரிசேனா

ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே போர்க்குற்றம் எதிர்கொள்கிற ராணுவத் தளபதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்பதை கோத்தபய அறிவித்திருந்தார். ஜனாதிபதி ஆன பிறகு ஐ.நா தீர்மானத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். ரணில் விலகிக்கொள்ள மகிந்த இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பெரும்பான்மை மக்கள் விரும்பாத எதையும் செய்ய மாட்டேன் எனப் பேசினார். மிக சமீபத்தில் காணாமல் போன அனைவரையும் இறந்துவிட்டனர் அல்லது புலிகள் பிடித்துச் சென்றுவிட்டனர் என்று அறிவித்து அதிர்ச்சியைக் கிளப்பினார் கோத்தபய. சொந்தங்களை கண்ணெதிரே ராணுவத்திடம் ஒப்படைத்த ரத்த சாட்சியங்களாக இருக்கிறோம் என அவர்களின் குடும்பங்கள், காணாமல் போனவர்களுக்காகப் போராடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டபோதே அமெரிக்கா அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. தற்போது சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கடுமையாக ஆட்சேபித்து மகிந்த அறிக்கை வெளியிட்டிருந்தார். அதோடு இலங்கை அரசு ஒப்புக்கொண்ட 30/1, 40/1 ஐ.நா தீர்மானங்களிலிருந்து இலங்கை விலகிக்கொள்வதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா - மகிந்த ராஜபக்சே
சவேந்திர சில்வா - மகிந்த ராஜபக்சே

மேலும், அந்த அறிக்கையில், ``சர்வதேச விதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறது. முந்தைய அரசு செய்த வரலாற்றுத் துரோகத்தால் (ஐ.நா தீர்மானங்கள்) தான் மற்ற நாடுகள் நமது ராணுவத்தைச் சேர்ந்தவர்களைக் குறை கூறுகின்றன. நமது ராணுவத்தினர் மீது இல்லாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது. எங்கள் அரசு அந்தத் தீர்மானங்களிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது. மற்ற அனைத்துக் கட்சிகளுமே இதை ஆதரிக்கின்றனர் அல்லது மௌனம் காக்கின்றனர். இதன்மூலம் நாட்டை முன்னிலைப்படுத்தும் தேசப்பற்றுள்ளவர்கள் ஒருபுறமும் நாட்டுக்குத் துரோகம் இழைப்பவர்கள் மறுபுறமும் இருப்பதும் தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ராஜபக்சே செய்கின்ற நாடகமே இது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுக்கும் ராஜபக்சே அதே அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். இன்று எங்களை நாடகம் ஆடுகிறோம் என்று தெரிவிப்பவர்கள்தான் அன்று அந்தத் தீர்மானம் வருவதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்பதில் ராஜபக்சே தரப்பு குறியாக இருக்கிறது.

அறிக்கை
அறிக்கை

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தூண்டிவிடப்பட்ட சிங்களப் பேரின யுத்தவெற்றிவாத அலையை தக்கவைக்கும் முயற்சியே இது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். போர்க்குற்ற விசாரணைக்கான அடிப்படையே ஐ.நா-வில் இலங்கை ஒப்புக்கொண்ட இரண்டு தீர்மானங்கள்தான். தற்போது அதிலிருந்து விலகப்போவதாக இலங்கை அறிவித்துள்ள போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என்னவாகும் என்கிற கேள்வி தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.