Published:Updated:

இலங்கை: பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்குத் தடை... நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

இலங்கை முழுவதும் மாடுகளை வதை செய்வதற்கான தடைச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் பொதுஜன பெரமுன கட்சி தீவிரம் காட்டிவருகிறது.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது கட்சி நாடாளுமன்றக் குழுவுடன், பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் சட்டம் குறித்து விவாதித்திருக்கிறார். இந்த விவாதத்துக்குப் பிறகு, இலங்கையில் பசுக்களை வெட்டுவதற்குத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றக்குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் பசுக்களை இறைச்சிக்காகக் கொல்வதற்கான தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், ஊடக அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா பேசுகையில், பிரதமர் ராஜபக்சே, இறைச்சிக்காகக் கால்நடை கொல்லப்படுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று முன்மொழிந்ததாகவும், இந்தச் சட்டம் எப்போது சமர்ப்பிக்கப்படும் என்பது அவருக்குத்தான் தெரியும் என்றும் கூறியிருந்தார்.

நீண்டநாள்களாக புத்த பிட்சுகள் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடை செய்யக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவந்தனர். இதற்காகப் போராட்டங்களையும் நடத்திவந்தனர்.

மாடுகள் வதை தடை
மாடுகள் வதை தடை

பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்திவந்த சூழலில், தற்போது தடைச் சட்டம் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. விரைவில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

இறைச்சி சாப்பிடுவோருக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு