இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ``பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயார்" என்று கூறினார். இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவருவதால், ஆட்சியை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி கட்சிக்குக் கூட்டணிக் கட்சிகள் வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெற்றுவருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இலங்கையில் முக்கியக் கட்சிகளான, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிகளும் ஆளும் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டன.

இந்த நிலையில், ராஜபக்சேவின் கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, ``எங்கள் கட்சி மக்கள் பக்கம் உள்ளது'' எனக் கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், ``மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும், மக்களுக்காக முன்னிற்கவும் இந்தக் கட்சி தயாராக இருக்கிறது'' என்றார்.
225 உறுப்பினர்களைக்கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவை. ஆனால் தற்போது 40-க்கும் மேற்பட்ட ஆளும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் தனித்துச் செயல்பட முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
