Published:Updated:

இலங்கைச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

படங்கள்: எம்.ஆர்.சிவக்குமார்

இலங்கைச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

படங்கள்: எம்.ஆர்.சிவக்குமார்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையின் தற்போதைய நிலைக்கு யார் காரணம், என்ன காரணம்... இதிலிருந்து இலங்கை மீள்வதற்கான வழி என்ன என்பது குறித்து இலங்கை சென்று அந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறுவிதமான பதில்கள் வந்து விழுந்தன.

``இலங்கையின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?’’

விக்னேஸ்வரன், வடமாகாண முன்னாள் முதல்வர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்:

``1983-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்த அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 1983-ம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு உதவக்கூடாது என நினைத்தது ஜெயவர்த்தனே அரசு. அவர் நினைத்திருந்தால், போர்ச்சூழல் ஏற்படாமலே தமிழர்களுக்கு உதவியிருக்க முடியும். ஆனால், அவர் போரை விரும்பினார். அவருக்குப் பிறகு வந்தவர்களும் போரையே விரும்பினார்கள். போர் நடத்தச் சீனா உட்பட பல நாடுகளிலிருந்தும் அதிக அளவில் கடன் வாங்கப்பட்டது. தொடர்ந்து கனரக ஆயுதங்களை வாங்கிக் குவித்தார்கள். இதுபோன்ற ராணுவ ஆயுதங்கள் வாங்கும்போது ஆட்சியாளர்களுக்கு நிறைய கமிஷன் கிடைத்தது. தங்களது கமிஷனுக்காக ஆயுதங்களைத் தொடர்ந்து வாங்கி... தேசபக்தி, பாதுகாப்பு என்ற பெயரால் போரை நடத்தித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள். போர் முடிந்தபிறகும் கடன் வாங்கி ராணுவத்துக்குச் செலவழித்தார்கள். பின்னர், புதுக்கடன் வாங்கி பழைய கடனுக்கு வட்டி கட்டினார்கள். இப்படியாக தற்போது கடனைத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்படப்போகிறது எனப் நிபுணர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பே எச்சரித்தும், இந்த அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. கோத்தபய, அவர் சொகுசு வாழ்க்கையில் கவனம் செலுத்தினாரே தவிர மக்கள்நலனில் கவனம் கொள்ளவில்லை. இவையெல்லாம்தான் இலங்கை இந்த நிலைக்கு வரக்காரணம்.’’

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

மனோ கணேசன், கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர்:

``இலங்கையை ஆண்ட எல்லா அரசுகளும், கட்சிகளும் நாட்டின் தற்போதைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனாலும்கூட, ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியால்தான் இலங்கை கடன்கார நாடாக மாறிவிட்டது. அரசு நிதி பெருமளவில் வீணடிக்கப்பட்டது, பிழையான நிர்வாகம், ஊழல் இந்த மூன்றும்தான் முக்கிய காரணம்.’’

சுமந்திரன், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்:

``இலங்கையில் நீண்டகாலமாகப் போர் நடந்தது. போர் நடத்த இந்த அரசாங்கத்துக்கு அதிக அளவு நிதி தேவைப்பட்டது. அதனால், அதிகம் கடன் வாங்கினார்கள். ஆனால், திரும்ப எப்படி அதைச் செலுத்தப்போகிறோம் என்ற யோசனையில்லாமல், கவலையில்லாமல் கடன் வாங்கிச் செலவு செய்தார்கள். ஒரு கடனை அடைப்பதற்கு, மீண்டும் ஒரு கடனை வாங்குவதும், பின்னர் அதை அடைக்கக் கடன் வாங்கியதும்... அதையே வாடிக்கையாக்கியதும்தான் நாட்டின் இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம்.”

டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக் கடல் தொழில் அமைச்சர் :

``இது திடீரென்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. கடந்த காலங்களின் தொகுப்பே இந்தப் பொருளாதார நெருக்கடி. நாங்கள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்கூட்டியே திட்டமிட்டபோது துரதிர்ஷ்டவசமாக கொரோனாத் தொற்று ஏற்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கியதால், இப்படி ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டோம். இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களும் கஜானாவைக் காலி செய்து வைத்திருந்தார்கள். அதனால், கூடுதல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.’’

டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா

``இலங்கையின் கடன் எவ்வளவு?’’

விக்னேஸ்வரன்: ``இலங்கை திரும்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை தோராயமாக 52 பில்லியன் டாலர் என்கிறார்கள்.”

மனோ கணேசன்: ``நேர்முகக் கடன், மறைமுகக் கடன் எனப் பல வகையான கடன்களை இந்த அரசாங்கம் வாங்கியிருக்கிறது. அனைத்தையும் கணக்கிட்டுச் சொல்வது கடினம். ஆனால், நாடு திவால் ஆகிவிட்டது.”

சுமந்திரன்: ``எண்ணிக்கை அடிப்படையில் சொல்வது சிரமம். ஆனால், இலங்கை சரித்திரத்திலேயே ‘வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தவே முடியாது’ என ஏப்ரல் 18-ம் தேதி அறிவித்துவிட்டார்கள்.’’

டக்ளஸ் தேவானந்தா: ``கடன்கள் இருக்கின்றன. அவற்றை மறுப்பதற்கு இல்லை. ஆனால், கடன்களை ஒத்திப்போடும் வழிகளைக் கண்டறிந்துவருகிறோம். அதேபோல், வாங்கிய கடன்களுக்கான வட்டிகளைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறோம். விரைவில் கடன்களை அடைத்துவிடுவோம்.’’

``பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள என்ன தீர்வு?’’

விக்னேஸ்வரன்: ``வாங்கிய கடன்களை மறுகட்டமைப்பு செய்து, கடன் செலுத்தும் காலத்துக்கு அவகாசம் பெற வேண்டும். அதேநேரம் நாட்டில் ஏற்றுமதியை அதிகரித்து வெளிநாட்டுப் பண இருப்பை அதிகப்படுத்த வேண்டும். அதைச் செய்ய வேண்டும் என்றால், எரிபொருள் மற்றும் எரிவாயு விலையையும், உள்நாட்டுப் பொருள்களின் விலையையும் கூட்ட வேண்டும். விலை உயர்வு மக்களுக்குப் பெரும் சுமையாக மாறும். உள்நாட்டுப் பொருளாதாரத்தை லாபகரமாகச் செயல்படுத்தாவிட்டால், மீள்வது கடினம்.’’

மனோ கணேசன்: ``ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையே ராஜினாமா செய்ய வேண்டும். புதிய ஆட்சி அமைய வேண்டும். உலகத்துக்கு இலங்கையின் மேல் நம்பிக்கை வர வேண்டும். அதற்கு ஒரு திடமான, ஜனநாயக ஆட்சி இங்கு அமைய வேண்டும். அதை உருவாக்குவதற்கான அந்தஸ்து, தகுதி எல்லாமே எங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கிறது.”

சுமந்திரன்: ``சர்வதேச நாணய நிதியத்தை அணுகுங்கள் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் சொன்னோம். ஆனால், நிதி நிலைமை சரியாக இருக்கிறது. நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று பிப்ரவரி மாதம் வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது திடீரென எண்ணெய், எரிபொருள் வாங்குவதற்குக் காசு இல்லை எனக் கூறிக்கொண்டு அதே நிதியத்திடம் சென்று உதவி கோரியிருக்கிறார்கள். நிதியம் சொல்லும் நிபந்தனைக்கெல்லாம் உட்பட்டால் மீண்டும் இலங்கைக்குக் கடன் கிடைக்கும். மெல்ல மெல்ல பிரச்னைகளைச் சரி செய்யலாம்.’’

டக்ளஸ் தேவானந்தா: ``இந்தியா எப்படி 1990 காலகட்டத்தில் ஐ.எம்.எஃப்-பிடம் கடன் வாங்கி மீண்டு வந்ததோ அதேபோல இப்போது நாங்கள் ஐ.எம்.எஃப் உதவியை எதிர்பார்க்கிறோம். மேலும் உள்ளூர் உற்பத்தியைப் பெருக்கும் வழியில் ஈடுபட்டிருக்கிறோம். வீட்டுத்தோட்டம் முதல் வேளாண் நிலங்கள் வரை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். இதற்காகக் கட்டணமில்லாமல் உரங்களை வழங்கி வருகிறோம். விரைவில் மீண்டு வருவோம்.”

சுமந்திரன்
சுமந்திரன்

``கோத்தபய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’’

விக்னேஸ்வரன்: `` `கோத்தா கோ ஹோம்…’ என்ற முழக்கத்தால் கோத்தபய சூழப்பட்டி ருக்கிறார். அவர் பதவியிலிருந்து இறங்கினால் கைதுசெய்யப்படலாம். அதனால், பதவியைத் தக்க வைக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார். நாடு திவாலானதற்கு இவர் மிக முக்கிய காரணம். 2019-ம் ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிக வரிச்சலுகைகளை அவர் ஆதரவாளர்களுக்கு வாரி வழங்கினார். அதனால், அரசாங்கத்துக்கு வருமானம் குறைந்தது. அடுத்து ஒரே நாளில் செயற்கை ரசாயனங்களுக்குத் தடை விதித்தார். இது விவசாயத்தைப் பெருமளவில் பாதித்தது. 20-வது சட்டத்திருத்தத்தின் மூலம் சக்தி வாய்ந்த மனிதர் என்ற போர்வையில் நினைத்ததை எல்லாம் செய்தார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் மோசம்.’’

மனோ கணேசன்: ``சிங்கள மக்களை ஏமாற்றி, வரலாற்றைத் திருத்திச்சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சீனாவின் கைக்கூலிகளாக, கையூட்டு பெறுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியில் பெட்ரோல், மருந்துகள், மின்சாரம் என எதுவுமே இல்லை. எதிர்காலத்தில் தண்ணீர் இல்லை என்ற நிலைமை வரப்போகிறது. பிரதமரைவிடச் சக்தி வாய்ந்தவராக கோத்தபய இருக்கிறார். அவரது அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். இந்தக் கோத்தபய அரசு வீழ வேண்டும் அல்லது வீழ்த்தப்படும்.”

சுமந்திரன்: ``இந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால்தான் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வரிச் சலுகைகளைத் தாராளமாக வழங்கினார்கள். இதனால், அரசாங்கத்துக்கு வரும் 25 சதவிகித வருவாய் குறைந்தது. 33 சதவிகிதம் பேர் இனி வருமான வரி கட்டத்தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. இப்படிப் பல பொருளாதாரத் தவறுகளால்தான் இலங்கை இந்த நிலைமைக்கு வந்தது.’’

டக்ளஸ் தேவானந்தா: ``இங்கு சிறுசிறு பிரச்னைகள் இருக்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. இந்த ஆட்சியில் விலைவாசி அதிகம் என்கிறார்கள். அதைவிட அண்டை நாடுகளில்தான் விலைவாசி அதிகம். இந்தியாவின் விலையேற்றத்தையும் இலங்கையின் விலையேற்றத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவின் விலையேற்றம்தான் மிக அதிகம். ரஷ்யா - உக்ரைன் போரால், பல நாடுகளிலும் எரிபொருள் விலை கூடியிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறிக்கொண்டேதான் போகிறது. இது இங்கு மட்டும் நடக்கும் பிரச்னை அல்ல. எதிர்க்கட்சிகள்தான் மக்களைத் திசை திருப்பிப் போராடத் தூண்டுகின்றன. இந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராடு பவர்களுக்கும் வெளிநாடு களிலிருந்து பணம் வருகிறது.’’

மனோ கணேசன்
மனோ கணேசன்

``போருக்குப் பிறகு தமிழக மக்களின் வாழ்வு எப்படி மாறியிருக்கிறது?’’

விக்னேஸ்வரன்: ``மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. போர் முடிந்து 13 வருடங்களுக்குப் பிறகும் வட கிழக்கில் ராணுவம் நிலைபெற்றிருக்கிறது. தெற்கிலிருந்து சிங்கள மீனவர்களை அழைத்துவந்து தமிழ் மீனவர்கள் பாரம்பர்யமாக மீன் பிடிக்கும் இடங்களில் விட்டிருக்கிறார்கள். புத்த பிக்குகள் மூலம் தமிழ் மக்கள் காணிகளை எடுத்து அங்கு பௌத்த சின்னங்களைப் பொறிக்கிறார்கள்.”

மனோ கணேசன்: ``ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததும், `நான் சிங்கள மக்களால் தேர்வு செய்யப்பட்டவன்' என வெளிப்படையாக அறிவித்தார். இவர் எப்படி எல்லா மக்களுக்குமான ஆட்சியைத் தருவார்? தமிழர்கள் நசுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.”

சுமந்திரன்: ``போருக்குப் பிறகு தமிழர்களின் வாழ்வில் நிறைய தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழ்நிலை இருந்துகொண்டே இருக்கிறது. குடும்பத்துக்கு வருவாய் கொண்டு வரும் ஆண்கள் குறைவு. தொழில் வாய்ப்பும் குறைவு. தனியார் முதலீடுகளும் குறைவு. இந்தப் பொருளாதார பாதிப்புகளால் தமிழ் மக்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.’’

டக்ளஸ் தேவானந்தா: ``தமிழர்கள் வாழ்க்கை சிறப்பாக மாறியிருக்கிறது. ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காகவும், திருட்டைத் தடுப்பதற்கும்தான். சில இடங்களில் காணி பிரச்னைகள் மட்டுமே இருக்கின்றன. அதையும் நாங்கள் சரி செய்துகொண்டே இருக்கிறோம்.”

``கொழும்பில் நடக்கும் போராட்டம்போல், இலங்கையின் வட கிழக்கில் போராட்டங்கள் நடைபெறவில்லையே... அதற்குக் காரணம் என்ன?’’

விக்னேஸ்வரன்: ``இந்த நிலத்தில் 30 வருடங்களாகப் பிரச்னைகள் நடந்திருக்கிறது. எரிபொருளோ, மின்சாரமோ… அப்படி எந்தவித அத்தியாவசியப் பொருள்களும் இல்லாத சூழ்நிலையில் மக்கள் இங்கு நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். கொழும்பில் உள்ளவர்களுக்கு மின்சாரம் இல்லாததெல்லாம் புது அனுபவம்.”

மனோ கணேசன்: ``போர்ச் சூழ்நிலையில் வாழப்பழகிய மக்கள், இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் இயல்பு கொண்டவர்கள் தமிழ் மக்கள். ‘நாங்கள் தொடக்கத்திலிருந்தே ராஜபக்சே ஆட்சி வேண்டாம் என்றுதானே சொல்லிவந்தோம். நீங்கள்தான் ராஜபக்சே ஆட்சி வேண்டும் என்றீர்கள். இப்போது நீங்களே போராடுங்கள்’ என்பதுதான் வட கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் எண்ணம்.”

சுமந்திரன்: ``போர்க்காலத்திலேயே அதற்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். கொழும்பில் எட்டு மணி நேர மின்வெட்டு எனப் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் வடகிழக்குத் தமிழ்மக்கள் 20 வருடங்களாக மின்சாரமே இல்லாமல, பெட்ரோல், டீசலே இல்லாமல் வாழ்ந்தார்கள். அந்த ஞாபகம் எல்லாம் இன்னும் அந்த மக்களுக்கு இருக்கிறது. அடுத்து அங்கு தற்சார்புப் பொருளாதாரமும் இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்ற உறவினர்கள் பணம் அனுப்புவதால் தமிழ் மக்கள் தாக்குப்பிடிக்கிறார்கள்.’’

டக்ளஸ் தேவானந்தா: ``சென்னையில் மெரினா பீச் போல... கொழும்பில் உள்ள காலி முகத்திடல் வழக்கமாகக் கூட்டம் சேரும் இடம். பொழுதுபோக்கிற்காகக் கூட்டம் சேரும். அவர்களையெல்லாம் போராட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்கிறது என்று சொல்வதே பொய். ஜெ.வி.பி என்ற அமைப்பினரும், வெளிநாட்டினரும் செய்யும் சதி இது. இவர்கள் போராட்டம் நடத்தி ஆட்சியைக் கலைத்து என்ன செய்யப்போகிறார்கள்? மீண்டும் தேர்தல் நடந்து நாங்கள் வெற்றிபெற்று வந்துவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? வட கிழக்கில் பாதிப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டதால், அங்கே போராட்டங்கள் இல்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism