இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் என மக்களுக்கு பயந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இருப்பினும் மக்கள் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் இருவரும் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில் நாடு தப்பிய கோத்தபய ராஜபக்சே தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை, இலங்கை சபாநாயகருக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து, இலங்கையின் இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உட்பட 14 பேர் நாட்டைவிட்டு வெளியேற கொழும்பு நீதிமன்றம் ஏற்கெனவே தடைவிதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேற உச்ச நீதிமன்றமும் தடைவிதித்திருக்கிறது. மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 28-ம் தேதி வரை மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சே தன்னுடைய பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.