Published:Updated:

இலங்கையே பற்றி எரிந்தாலும் கோத்தபய மட்டும் பதவியைப் பற்றிக்கொண்டிருப்பது எப்படி?!

இலங்கை

இலங்கையே பற்றி எரிந்தாலும் கோத்தபய பதவியைப் பற்றிக்கொண்டிருப்பது எப்படி, ஏன்... உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணக் களத்தில் இறங்கினோம்!

இலங்கையே பற்றி எரிந்தாலும் கோத்தபய மட்டும் பதவியைப் பற்றிக்கொண்டிருப்பது எப்படி?!

இலங்கையே பற்றி எரிந்தாலும் கோத்தபய பதவியைப் பற்றிக்கொண்டிருப்பது எப்படி, ஏன்... உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணக் களத்தில் இறங்கினோம்!

Published:Updated:
இலங்கை

இலங்கையில் அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் 50 நாள்களைக் கடந்துவிட்டது. இலங்கையைக் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவைத்த ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரி கடந்த ஏப்ரல் 9-ம் தேதி கொழும்பு கால் ஃபேஸில் தொடங்கியது இந்தத் தொடர் போராட்டம். குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் (கோட்டா கோ ஹோம்) என கோஷமிட்டு வெயில், மழை , குளிர் என எதையும் பொருட்படுத்தாமல், சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை உலகம் அறிய நடத்திவந்தனர் இலங்கை மக்கள். அறவழியில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டம் சரியாக ஒரு மாதத்தைக் கடக்கும்போது, அதாவது கடந்த மே 9-ம் தேதியன்று பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்களால் வன்முறைக்களமாக மாற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

அன்றைய தினம், மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்து கலந்துரையாடிய அவரின் ஆதரவாளர்கள், நேரடியாக கால் ஃபேஸ் இடத்துக்குச் சென்று அங்கு போராட்டம் நடத்திவந்த மக்களைச் சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்வினையாற்றும்விதமாக போராட்டக்கள மக்கள், ராஜபக்சேவின் பூர்வீக வீடு உட்பட அவரின் ஆதரவாளர்கள், குடும்பத்தினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதையடுத்து, ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாதுகாப்பு தேடி குடும்பத்தோடு கொழும்பைவிட்டு தமிழர் பகுதிக்குத் தப்பிச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகும் இலங்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை; தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துவந்தபடியால், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடமும், ஐ.நா., ஐ.எம்.எஃப்-பின் நிதி உதவிகளையும் எதிர்ப்பார்த்தபடியே இலங்கை அரசாங்கம் நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கிறது. அதேசமயம், அனைத்து அதிகாரமும் கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே போராடும் மக்களின் பிரதான கோரிக்கையாக இருப்பதால், மக்கள் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

இந்த நிலையில், கடந்த மே 29-ம் தேதியுடன் கோத்தபய அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் 50 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்துக்கு வெளியே மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, `கோத்தபய உடனடியாகப் பதவி விலக வேண்டும்!' என கோஷமிட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் பேரணியாக வந்த மக்கள்மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும், தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் போர்க்களமாகக் காட்சியளித்தது.

இலங்கை
இலங்கை

பிரதமர் மாற்றம், பொது ஊரடங்கு, தீவிர காவல்துறை கட்டுப்பாடுகள் என அனைத்தையும் தாண்டி, அதிபர் பதவி விலகும் வரை தங்கள் போராட்டம் நீடிக்கும் என உறுதியாக உள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள். அதேசமயம் எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் பதவியைவிட்டு விலகாமல் பிடிவாதமாக இருந்துவருகிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கையே பற்றி எரிந்தாலும் கோத்தபய பதவியைப் பற்றிக்கொண்டிருப்பது ஏன் உள்ளிட்ட கேள்விகளுடன் இலங்கை அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான நிலாந்தனை தொடர்புகொண்டோம்.

``உண்மையில் இந்த அறவழிப் போராட்டத்தைக் கண்டு, அரசியல்வாதிகளோ, ஆளுங்கட்சியினரோ அஞ்சவில்லை. போராட்டம் ஒருபுறம் அதுபாட்டுக்கு நடக்கிறது, இவர்களும் தங்கள்பாட்டுக்கு அரசை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை அதன்போக்கில் விட்டால், அது காலப்போக்கில் நீர்த்துவிடும் என அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகியதற்குக் காரணம் இந்த போராட்டத்தால் அல்ல; ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் அவரின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறையும், அதற்கு மக்கள் ஆற்றிய எதிர்வினையால் ஏற்பட்ட விளைவுகளாலும்தான் ராஜபக்சே பதவி விலகினார். அதன் பிறகு, ரணில் பிரதமரானபோதும் நிலைமை சீரடையவில்லை;

நிலாந்தன்
நிலாந்தன்

மேலும், இப்போது அரசாங்கத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்கெனவே வெவ்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள்தான். பொறுப்புகள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கின்றன. எனவேதான், அதிபருக்கான அதிகாரத்தைக் குறைக்கும் 21-வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் விடயத்திலும்கூட, ஆளுங்கட்சியினர் அதிபருக்கான அதிகாரத்தை முழுமையாகக் குறைப்பதற்குத் தயாராக இல்லை. பிரதி சபாநாயகர் பிரிவிலும் ஆளுங்கட்சி ரணிலுக்கு எதிராகத்தான் வாக்களித்தது. எனவே, பிரதமர் ரணில் ஆளுங்கட்சியை மீறிச் செயல்பட முடியாதவராகவே இருக்கிறார்.

கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்க
கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்க
Twitter

மிக முக்கியமாக, இலங்கையைப் பொறுத்தவரை பிரதமருக்கான அதிகாரத்தைவிட அரசியலமைப்பின்படி அதிபருக்கான அதிகாரம்தான் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, ஒன்று அதிபர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பின்படி விலக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்படி விலக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் அவர்மீது குற்றப்பிரேரணை கொண்டு வர வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லாததால், யாப்பின் ஊடாக அவரை விலக்குவது கடினம். எனவேதான் அவர் விலகாமல் இருக்கிறார்.

மேலும், பதவில் இருப்பதுதான் தனக்கு பாதுகாப்பு என கோத்தபய நினைக்கிறார். அவர் ஒரு தொழில்சார் அரசியல்வாதி அல்ல; ராணுவ நிர்வாகத்தின்கீழாக வந்தவர். எனவே ஒரு நிர்வாகியாக இருந்த அவரால் ஒரு தொழில்சார் அரசியல்வாதியைப்போல சிந்திக்க முடியாது. மேலும், இனப்படுகொலை விவகாரத்தில் தமிழ்மக்களால் குற்றம்சாட்டப்படும் இரண்டு ராஜபக்சேக்களில் கோத்தபயவும் ஒருவர். தன்மீது போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், அவர் அதிபர் பதவியில் இருப்பதன் மூலம் தன்னை மன்னிப்புக்குரிய இடத்தில் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறார். அதிபராக இருப்பதால் தனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறார்.

நிலாந்தன்
நிலாந்தன்

ஏற்கெனவே அவர் அமெரிக்காவின் இரட்டை பிரஜையாக இருந்தவர். ஒருவிதத்தில் அப்போது அது அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது. அமெரிக்கா கோத்தபயமீது போர்க் குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை; ஆனால் இப்போது அதிபரான காரணத்தால் அந்த பிரஜா உரிமையைத் துறந்துவிட்டார். அதேசமயம் கோத்தபயவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, யுத்தத்தை முன்னெடுத்த முன்னாள் படைத்தளபதியான சவேந்திர செல்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்திருக்கிறது. இவ்வாறான சூழலில், அதிபர் பதவியைவிட்டு விலகினால் தனக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து, விலக மறுக்கிறார்" என நிலாந்தன் கருத்து தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism