Published:Updated:

தம்பி ஜனாதிபதி... அண்ணன் பிரதமர்...

ஒற்றைக் குடும்பத்தின் கைகளுக்குள் செல்கிறதா இலங்கை?

பிரீமியம் ஸ்டோரி
வரும் ஏப்ரல் 21-ம் தேதி, இலங்கையில் ‘ஈஸ்டர் குண்டு வெடிப்பு’ சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவிருக்கிறது. அதற்கடுத்த நான்காம் நாள் ஏப்ரல் 25-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

மார்ச் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் பலவும் பரபரப்பாக களத்தில் இறங்கியிருக்கின்றன.

கடந்த 2019, நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி ஜனாதிபதி ஆனார் கோத்தபய ராஜபக்சே. சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைத்த பெரும்பான்மை வாக்குகளே கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றியைத் தேடித் தந்தன. தமிழர்கள், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசா பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சிங்களப் பெரும்பான்மை வாக்குகளுக்கு முன்பு அவை எடுபடவில்லை. தோல்விக்குப் பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

மகிந்த ராஜபக்சே மீண்டும் இடைக்காலப் பிரதமரானார். அவருடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் அவர் காபந்து பிரதமராக தொடர்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளே அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும். இன்றைய நிலைமையில், இலங்கையின் அதிகார பீடத்தை ராஜபக்சே குடும்பமே முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அது தொடர வேண்டும், ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ராஜபக்சேக்கள் குறியாக இருக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்புவரை,

‘இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் நான் உழைப்பேன்’
என்று சொன்னார் கோத்தபய ராஜபக்சே.

ஆனால், வெற்றி பெற்றதும் ‘பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத எதையும் செய்ய மாட்டேன்’ என்று அந்தர் பல்டி அடித்தார். அதுமட்டுமல்ல... போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். ‘போரின்போது காணாமல்போன மக்கள் அனைவரும் இறந்துவிட்டனர்’ என்று ஐ.நா பிரதிநிதியிடம் தெரிவித்தார். சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தமிழில் தேசியகீதம் ஒலிப்பதை நிறுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்துவிட்டார் கோத்தபய.

ராஜபக்சேக்களின் அடுத்த இலக்கு, 220 உறுப்பினர்கள்கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது. முந்தைய ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் 18-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அமைந்த ரணில்-சிறிசேன கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதிக்கான அதிகாரத்தைக் குறைக்கும் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அந்த அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டன. ஆனால் இப்போது, ‘19-வது சட்டத்திருத்தத்தை நீக்க வேண்டும்’ என ராஜபக்சேக்கள் வெளிப்படையாகவே சொல்லிவருகின்றனர்.

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

“ஜனாதிபதி தேர்தலில் ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் விவாதப் பொருளாக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பில் இலங்கை அரசு தோற்றுவிட்டதாக ராஜபக்சேக்கள் பிரசாரம் செய்தனர். அதே யுக்தியை தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கையாள்வார்கள். ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் எழுப்பப்பட்ட சிங்களப் பேரினவாத அலையின் நீட்சியாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் ராஜபக்சேக்கள் கட்டமைப்பார்கள்” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் நிலாந்தன்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டுபோன பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, உட்கட்சிப் பூசல்களால் பலவீனமாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல் திட்டம் எதுவுமின்றி தவித்துவருகிறது.

ரணில்-சஜித் இடையே தீர்வு எட்டப்படாத நிலையில், சஜித்தை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவும் முடிவாகியுள்ளது. தமிழர்கள் தரப்பில் தமிழ்த் தேசிய கூட்டணி ஒருபுறமும், முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் புதிய கூட்டணி மறுபுறமுமாக தமிழர்களுக்கான நம்பிக்கை உடைந்து கிடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழர்களுக்கான தீர்வு குறித்து ராஜபக்சேக்கள் மௌனம் காத்தே வருகின்றனர். மாறாக, முந்தைய ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட பெயரளவிலான சில நடவடிக்கைகளையும் நிறுத்தி, திருத்திவருகின்றனர். ‘தமிழர்கள் கேட்கும் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட மாட்டாது, வளர்ச்சியே தமிழர்களுக்கான தீர்வு’ என்று தன்னுடைய இந்திய வருகையின்போதே கோத்தபய தெளிவுபடுத்திவிட்டார். இந்தியாவைப் போலவே அதிகாரக் குவிப்பையே ராஜபக்சேக்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் சீன உறவும் உலகறிந்தது. இலங்கையின் அடையாளமே சீனமயப்பட்டுவிடும் அளவுக்கு இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றியிருக்கிறது.

2015-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தன்னை வீழ்த்த இந்தியாவின் ‘ரா’ அமைப்பு வேலை செய்ததாக மகிந்த ராஜபக்சே வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ராஜபக்சேக்களின் அதீத சீனப்பற்றும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு கோத்தபய முதலில் வருகை புரிந்தது இந்தியாவுக்குத்தான். இலங்கைக்குச் சென்று அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டுப் பிரதிநிதியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான். கோத்தபயவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, தமிழிலும் ட்வீட் செய்திருந்தார். `தமிழர்களின் பிரச்னையை இந்தியா கவனத்தில் வைத்திருக்கிறது’ என்பதை ராஜபக்சேக்களுக்கு சொல்லாமல் சொல்லும் செய்தியாகவே அது பார்க்கப்பட்டது.

இந்தியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்பும் ராஜபக்சேக்கள், அதேநேரம் சீனாவின் நட்பையும் கைவிட விரும்பவில்லை. ராஜபக்சேக்களின் இந்த இரட்டைக் குதிரை சவாரி எடுபடுமா, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுவார்களா, வீழ்ச்சியிலுள்ள எதிர்க்கட்சிகளால் எழுச்சி பெற்று ராஜபக்சேக்களின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியுமா, நிராகரிக்கப்பட்டுவரும் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா... என எழுகின்ற ஏராளமான கேள்விகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

கடந்த மற்றும் நிகழ்கால இலங்கை அரசியல் போக்கை வைத்து பார்த்தால், இன்னலில் தவிக்கும் தமிழர்களுக்கு இது இன்னொரு தேர்தல் மட்டுமே. அவர்களிடம் எந்த நம்பிக்கையும் மிச்சமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு