2019-ல் அதிபர் ராஜபக்சே ஆட்சி இலங்கையில் அமைந்த பிறகு, 2020 கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. தற்போது அந்த நெருக்கடியைவிடவும் மிகக் கடினமான பொருளாதார வீழ்ச்சியை இலங்கை எதிர்கொண்டுவருகிறது. இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.

இதனால் பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலையுர்வைச் சந்தித்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின்தடையும் ஏற்பட இலங்கையின் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இத்தகைய இன்னல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை மக்கள், அதிபர் ராஜபக்சேவைப் பதவி விலகக் கோரி போராட்டங்களின் மூலம் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி சுமார் 5,000 பேர் நேற்று (வியாழன்) மாலை முதல் நள்ளிரவு வரை, ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில், போலீஸாரின் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின.

இதன் விளைவாக கொழும்பு நகர் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.