இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் ராஜபக்சேவை ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், அவரை பதவி விலக அதிபர் கோத்தபய கேட்டுக்கொண்டிருந்தார். நாளுக்கு நாள் கடுமையான மின் தட்டுப்பாடு, எரிபொருள், காஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் இலங்கை மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் இன்று கடுமையான தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் கலவரம் மூண்டது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, நாடு முழுவதும் அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகிந்த ராஜபக்சே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பிவைத்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.