இலங்கையின் பொருளாதாரச் சீரழிவுக்கு வித்திட்ட ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாகப் போராடிவருகின்றனர். நாட்டில் அந்நியச் செலாவணி முற்றிலும் தீர்ந்துபோன நிலையில், வெளிநாட்டிலிருந்து எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் நிலவிவருகிறது. இதனால் இலங்கையில் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அவர் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தார்.

மக்களின் போராட்டம் படிப்படியாகக் குறைந்துவிடும் என்று கோத்தபய ராஜபக்சே எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் கோத்தபய ராஜபக்சே பெட்டி, படுக்கைகளுடன் கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், தற்போது சபாநாயகருடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கோத்தபய வரும் 13-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சபாநாயகர் அறிவித்திருக்கிறார். போராட்டம் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கும்போது எப்படி கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. பாதுகாப்புப்படையினர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் சோதனை செய்தபோது, போலி பீரோ ஒன்று இருந்தது. அந்த பீரோ வழியாகப் பதுங்குகுழிக்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பதுங்குகுழிக்கான கதவு மிகவும் பாதுகாப்பாக, யாராலும் திறக்க முடியாத இரும்பால் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பதுங்குகுழி வழியாக வீட்டுக்குப் பின்புறமிருக்கும் ஹார்டனுக்குச் சென்று, அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பதுங்குகுழிக்குள் செல்ல லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டிருந்திருக்கிறது. கோத்தபய வீட்டில் சோதித்தபோது கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைப் போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். போராட்டக்காரர்களின் கையில் சிக்கிய கோத்தபய ராஜபக்சே வீடு இப்போது சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். விக்ரமசிங்க ராஜினாமா செய்யும் வரை இங்கேயேதான் இருப்போம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.