Published:Updated:

கிறிஸ்துமஸ் தீவில் சிறை; இலங்கை அச்சுறுத்தல்! - ஆஸ்திரேலிய அரசால் அல்லல்படும் தமிழ்க் குடும்பம்

`சட்டவிரோதமாக வந்தவர்களுக்கும் பாதுகாப்பு கோரி வந்தவர்களுக்கும் அளிக்கப்படும் `புகலிட விசா'வில் இருவரும் ஆஸ்திரேலியாவில் சிறிய சிறிய வேலைகளைச் செய்துகொண்டு தங்கியுள்ளனர்.

Tamil family Priya and Nadesalingam
Tamil family Priya and Nadesalingam ( twitter )

தமிழ்க் குடும்பம் ஒன்று குடியேற்ற உரிமை கேட்டு போராடி வருவது, ஆஸ்திரேலியாவின் `ஹாட் டாப்பிக்'காக உள்ளது. இலங்கையில் இருந்து தப்பித்து வெவ்வேறு வருடங்களில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தவர்கள், நடேசலிங்கம் - ப்ரியா தம்பதி. குயின்ஸ்லேண்டில் உள்ள பிலோயெலா என்ற நகரில், சிறிய வேலைகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் இவர்களுக்கு கோபிகா, தருணிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, கோபிகாவுக்கு நான்கு வயதும் தருணிகாவுக்கு இரண்டு வயதும் ஆகிறது.

Priya and Nadesalingam
Priya and Nadesalingam

இதற்கிடையே, விசா முடிவடையும் காலம் நெருங்கிய நேரத்தில் நடேசலிங்கம் - ப்ரியா தம்பதி தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதி கேட்டு அந்நாட்டு அரசிடம் முறையிட்டனர். ஆனால், அவர்களின் புகலிட கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆஸ்திரேலிய அரசு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தம்பதியின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து அவர்களைக் கைதுசெய்தது. சுமார் ஒரு டஜன் அதிகாரிகள் பலவந்தமாகத் தம்பதியையும் குழந்தைகளையும் கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தனர். இந்தச் சம்பவம்தான் இந்த விவகாரத்தில் `திருப்புமுனை'யாக இருந்தது.

யார் இவர்கள்?

இலங்கையில் இருந்து தப்பித்து 2012-ல் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தார் நடேஸ் என்ற நடேசலிங்கம். இவர் சென்ற அடுத்த ஆண்டு, ப்ரியாவும் ஆஸ்திரேலியா சென்றார். நடேஸ், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், ப்ரியா இலங்கைப் போரில் கணவரை இழந்தபின் இந்தியாவில் சிறிதுகாலம் தங்கியிருந்தவர், பின்னர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். `சட்டவிரோதமாக வந்தவர்களுக்கும் பாதுகாப்புக் கோரி வந்தவர்களுக்கும் அளிக்கப்படும் `புகலிட விசா'வில் இருவரும் ஆஸ்திரேலியாவில் சிறிய சிறிய வேலைகளைச் செய்துகொண்டு தங்கியுள்ளனர்.

Tamil family Priya and Nadesalingam
Tamil family Priya and Nadesalingam

இந்த விசா, தஞ்சம் புகுந்தவர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கி ஐந்து ஆண்டுகள் படிப்பு மற்றும் வேலைபார்ப்பதற்காகக் கொடுக்கப்படுகிறது. இந்த விசாவில் செல்பவர்கள், ஆஸ்திரேலிய அரசால் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாழ முடியும். இப்படியான ஒரு தருணத்தில் சந்தித்த இருவரும்,  2014-ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு 2015-ல் மூத்தமகள் கோபிகாவும்  2017-ல் இளைய மகள் தருணிகாவும் பிறந்துள்ளார்கள்.

இந்நிலையில், இளைய மகள் தருணிகா தாயின் வயிற்றில் இருக்கும்போதே பிரியாவுக்கு விசா காலாவதியாகிவிட்டது. இதையடுத்து, மீண்டும் விசாவுக்காக விண்ணப்பித்துள்ளார். எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால், விசாவுக்காக அவரால் பிரிஸ்பேன் செல்ல முடியாத சூழ்நிலை. இதனால் அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் போனில் விசாவுக்காகப் பேசியுள்ளார்.

``எனது கணவர் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர். எனது குடும்பத்தில் எனது தம்பி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்துள்ளார். இதனால் நான் மீண்டும் இலங்கை சென்றால், கணவரின் செயல்பாட்டால் என்னை இலங்கை அதிகாரிகள் குறிவைப்பார்கள்.

Tamil family Priya and Nadesalingam
Tamil family Priya and Nadesalingam

எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று கோரித் தான் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரின் விசா கோரிக்கைக்கான மனுவை நிராகரித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாவுக்காக அவர்கள் முயற்சிசெய்ய, அது நிராகரிக்கப்பட்டே வந்தது. பின்னர், நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடரப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து பலவந்தமாகக் கைதுசெய்யப்பட்டனர். அதிகாரிகளால் அந்தக் குடும்பம் கைதுசெய்யப்பட்ட வீடியோ, ஆஸ்திரேலிய மக்களிடம் வைரலாகப் பரவ, விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

பிலோயெலா மக்கள் உட்பட, பலரும் தமிழ்க் குடும்பத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வீதிக்கு வந்த போராட, அவர்களை நாடு கடத்தத் திட்டமிட்டனர் அதிகாரிகள். அதன்படி 15 மாதங்களாக மெல்போர்ன் தடுப்பு முகாமில் இருந்த அவர்களைக் கடந்த 30-ம் தேதி வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டனர். விமானம் புறப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் குடும்பத்தினர் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்தக் குடும்பத்தினர் இறக்கிவிடப்பட்டனர்.

protest for Tamil family Priya and Nadesalingam
protest for Tamil family Priya and Nadesalingam

`தொடர்ந்து, ஆஸ்திரேலிய மக்களிடம் அனுதாபம் பெறாமல் இருக்கவே, அவர்கள் கிறிஸ்துமஸ் தீவில் அடைக்கப்பட்டனர்' என்று அந்நாட்டு அமைச்சர் உளற, பின்னர் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், `இரண்டு வயது குழந்தையைப் பெற்றோரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற காரணத்தினால், ப்ரியா குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர். " மூத்த மகள் கோபிகாவுக்கு இந்த இடமே பிடிக்கவில்லை, அவள் பிலோயலா திரும்பவே விரும்புகிறாள். தருணிகா சரியான உணவு எடுத்துக்கொள்வதில்லை, பயத்துடனே இருக்கிறாள். இலங்கைக்குச் சென்றால், எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இலங்கை அரசு எங்களைக் கைது செய்யும். அதனாலேயே நாங்கள் பாதுகாப்பு கேட்கிறோம். எங்களை வாழ அனுமதியுங்கள்" என்று கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளது குறித்து கண்ணீர் வடிக்கிறார் ப்ரியா.

அதேநேரம், ``இவர்களைப் போல் 6,000 பேர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதில், இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து தங்க அனுமதித்தால், அவர்களும் இதேகோரிக்கையை முன்வைப்பார்கள். அது, எல்லைப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பொதுமக்கள், இந்தக் குடும்பத்துக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள் என்கிறார்கள். இந்த விவகாரம் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தது கிடையாது... நாட்டின் பாதுகாப்பு நலனைப் பொறுத்தது'' என்று விளக்கம் கொடுக்கிறார், அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன். 

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே பேசப்படும் நபர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். இவர்தான் ப்ரியா குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் தங்கவைப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் உட்பட, அந்நாட்டு மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tamil family Priya and Nadesalingam
Tamil family Priya and Nadesalingam

அவரின் தலையீட்டால்தான், அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன், கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டனர் என்கின்றனர். ஆனால், பிரதமர் ஸ்காட் மாரிசன் கருத்தையே தெரிவிக்கும் பீட்டர் டட்டனோ, ``இது வெறுப்பாக இருக்கிறது. ஏனென்றால்… அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களால் இங்கு தங்க முடியாது என்று தம்பதியினருக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம். இருந்தும் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டனர். தற்போது அந்தக் குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டு நாடு கடத்தும் முடிவை உணர்ச்சிப் பூர்வமாக தடுக்கப்பார்க்கிறார்கள்.

இந்தக் குடும்பத்துக்கு அனுமதி கொடுத்தால், பின்னால் உள்ள 6,000 குடும்பங்களுக்கு நீங்கள் எப்படி அனுமதி கொடுக்காமல் இருக்க முடியும்? இந்த வழக்கை வக்கீல்கள் தாமதப்படுத்தும் முயற்சி, தந்திரமான யுக்தி. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த வழக்கு தொடரும் என நினைக்கிறேன். வழக்கைத் தாமதப்படுத்துவதன் மூலமாக, அரசு மீது அழுத்தத்தை வைத்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சி வக்கீல்கள் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை நாங்கள் மாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

peter dutton
peter dutton

ப்ரியா- நடேசலிங்கம் குடும்பம் நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. எனினும், அவர்களின் எதிர்காலம் தற்போது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் கையில் உள்ளது. வரும் 18-ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில்தான், அவர்கள் நாடு கடத்தப்படுவார்களா இல்லையா என்பது தெரியவரும்.