இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதற்குக் காரணமான அரசு பதவி விலக வேண்டுமென சிறுவர்கள் தொடங்கி பொதுமக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அனைவரும் கூறிவருகின்றனர். உலகமே உற்று நோக்கும் விஷயமாக இலங்கைப் பிரச்னை பெரிதாகியிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அரசாங்க கொறடா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ''இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே எந்தச் சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார். 6.9 மில்லியன் மக்கள் அதிபருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
