இலங்கையில் கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து உள்ளன.
இந்த பொருள்களின் விலை உயர்வால் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்தது. கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் பிரதான சாலையில் இறங்கிக் கோஷமிட்டு டயர்களை கொளுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.

ரம்புக்கன, காலி, இரத்தின புரி, கண்டி, திகன, மாவநெள்ள, மகியங்கனை, மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. சாலை, ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கொழும்பு- பதுளை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர். போராட்டக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.