ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் கீழநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி இஸ்மாத் ஜமீல், தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி வீதம் 12 பேருக்கு ரூ.24 கோடி ரொக்கமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இது இந்திய மதிப்பில் தலா ஒரு கோடியாகும். இதையடுத்து இந்த வழக்கை மே 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இலங்கை நீதிமன்ற உத்தரவிற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 19-ம் தேதி தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட மீனவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதேபோல, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த மீனவர்களை வரும் 21-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை நீதிமன்றம் இவ்வளவு பெரிய தொகையை தமிழக மீனவர்கள் பிணைக்கு உத்தரவிட்டிருப்பது, மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இதுகுறித்து தேசிய பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி நம்மிடம் பேசினார்.
``கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பல கோடி ரூபாய் பணம் கேட்பது மிகுந்த வேதனையாக உள்ளது.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும்தான் மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்கின்றனர். அப்படி இருக்கையில் ஒரு மீனவர் ஒரு கோடி ரூபாய் கட்டினால் மட்டுமே ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என்ற இலங்கை நீதிமன்றம் உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. இனியும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் விஷயத்தில் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி அபராதம் கட்டாமல் படகுடன் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கூறினார்.