Published:Updated:

உக்ரைன் போர் விவகாரத்தில் முரண்டு பிடிப்பது ரஷ்ய அதிபர் புதினா... அமெரிக்காவா?!

 ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாமீது மறைமுகப் போர் நடத்துகிறதா அமெரிக்கா?

உக்ரைன் போர் விவகாரத்தில் முரண்டு பிடிப்பது ரஷ்ய அதிபர் புதினா... அமெரிக்காவா?!

உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாமீது மறைமுகப் போர் நடத்துகிறதா அமெரிக்கா?

Published:Updated:
 ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

கடந்த 2021-ம் ஆண்டில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் நெருக்கம் காட்டிய உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பிலும் இணைய முடிவெடுத்தது. உக்ரைனின் இந்த முடிவால், எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறி, அந்த நாட்டின்மீது போர் தொடுத்தது ரஷ்யா. பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போர் 300 நாள்களுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், `அமெரிக்கா, ரஷ்யா மீது மறைமுகப் போரை நடத்தி வருகிறது' என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து எந்தவொரு வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளாமலிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசினார். போர் குறித்து இருவரும் விவாதித்தாகச் செய்திகள் வெளியாகின. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பேசினார் ஜெலன்ஸ்கி. அங்கு, ``உக்ரைனுக்கு நீங்கள் செய்யும் நிதியுதவியை வெறும் தானம் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. எவ்வளவோ பிரச்னைகள் வந்தும், உக்ரைன் வீழவில்லை. ஒருபோதும் ரஷ்யாவிடம் நாங்கள் சரணடைய மாட்டோம். அமெரிக்காவும், அதிபர் ஜோ பைடனும் எங்களுடன் துணை நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

புதின் - உலகச் செய்திகள்
புதின் - உலகச் செய்திகள்

ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது ரஷ்யாவை மேலும் கோபமடையச் செய்யும் என்றும், இதையடுத்து புதின் போரை மேலும் தீவிரப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதினோ, `நான் இந்தப் போரை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். இது குறித்து விரிவாகப் பேசிய புதின், ``உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரவே ரஷ்யா விரும்புகிறது. கூடிய விரைவில், திருப்திகரமான முறையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். ஆனால், உக்ரைன் அதை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

உக்ரைனைப் பயன்படுத்தி எங்கள் நாட்டை பலவீனப்படுத்த நினைக்கிறது அமெரிக்கா. இது அமெரிக்கா மறைமுகமாக நடத்தும் போர். உக்ரைன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் நாங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை'' என்று பேசிப் பரபரப்பைக் கிளப்பினார். எப்போதும், இந்தப் போரைப் பற்றிக் குறிப்பிடுகையில், `உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்றே கூறுவார் புதின். ஆனால், இந்த முறை `போர்' என்றே கூறியிருந்ததும் கவனிக்கப்பட்டது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி
Carolyn Kaster

மேலும், ``உக்ரைனுடனும் அவர்களது அனைத்து தரப்புடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை'' என்றும் கூறியிருக்கிறார் புதின். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைகைலோ (Mykhailo), ``புதின் யதார்த்தத்துக்குத் திரும்ப வேண்டும்... பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை... இந்தப் போருக்கும், உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் ஏராளமான உயிரிழப்புகளுக்கும் தாங்கள் பொறுப்பில்லை என்று உலக நாடுகளிடம் காட்டிக்கொள்ளவே புதின் இவ்வாறு சொல்கிறார்'' என்றிருக்கிறார்.

இந்த மாதத் தொடக்கத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்காவுக்குச் சென்று அந்த நாட்டு அதிபர் பைடனைச் சந்தித்துப் பேசினார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக இருவரும் பேசியதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல்கள் வெளியாகின. அந்தச் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், ``புதின் போரை முடிக்க விரும்பினால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``ஆரம்பம் முதலே உலக அரங்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்க, உக்ரைன் மூலம் இந்தப் போரை மறைமுகமாக நடத்தி வருகிறது அமெரிக்கா என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. ஏராளமான ஆயுதங்களையும், எக்கச்சக்கமான நிதியுதவிகளையும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, இந்தப் போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்துக் கொண்டிருப்பதே பெரும் சந்தேகங்களைக் கிளப்பின. சமீபத்தில், `புதின் விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்தத் தயார்' என்று சொல்லியிருந்தார் பைடன். தற்போது புதினும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று சொல்லியிருக்கும் நிலையில், பைடன் வாய் திறக்காமல் இருப்பது அமெரிக்கா மீதான சந்தேகங்களை அதிகரிக்கின்றன. இந்தப் போரால், அமெரிக்கா சுயலாபமடைகிறதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை'' என்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பைடன் பதில் சொல்வார்... புத்தாண்டிலாவது இந்தப் போர் முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!