Published:Updated:

`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?

இலங்கை - சீனா

இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் திட்டம் என்ன?

`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?

இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் திட்டம் என்ன?

Published:Updated:
இலங்கை - சீனா

இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்குப் பல்லாயிரக் கணக்கில் கடன் வழங்கியிருக்கிறது சீனா. இந்தக் கடனைக் கட்ட முடியாமல் திக்குமுக்காடி வருகிறது இலங்கை அரசு. தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்கும் கடன் சுமையால், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புதல், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்காக இலங்கை அரசுக்கு 6,150 கோடி இலங்கை ரூபாயைக் கடனாக அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சீனா.

சீனா - ஜின்பிங்
சீனா - ஜின்பிங்
Ng Han Guan

இலங்கையில் கொரோனா பரவலால், கடந்த மார்ச் மாதம் முதலே சுற்றுலாத்துறை முடங்கியிருக்கிறது. ``நாட்டின் முக்கிய வருமான வழியான சுற்றுலாத்துறை முடங்கியிருப்பதால் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் இலங்கை இருக்கிறது. இதர வருமான வழிகளும் முடங்கியிருக்கின்றன. பலரும் வேலை இழந்து நிற்கிறார்கள். எனவே, வளர்ச்சிப் பணிகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தவே சீனாவிடம் கடன் பெற்றிருக்கிறோம்'' என்கிறது இலங்கை அரசு. சமீபகாலமாக மட்டுமே சீனாவிடம் இலங்கை கடன் பெறுகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகச் சீனாவின் கடன் வலையில் சிக்கித் தவித்துவருகிறது இலங்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனா விரித்த கடன் வலை!

2009-ம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, தனது சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் துறைமுகமும், விமான நிலையமும் அமைக்க அடிக்கல் நாட்டினார். கொழும்பிலுள்ள துறைமுகம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் நிலையில் புதிதாகத் துறைமுகம் அமைத்தால் நாட்டுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதனால் இலங்கையின் இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடனுதவி வழங்க மறுத்தன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு துறைமுகம் அமைப்பதற்கான மொத்த செலவில், 85 சதவிகிதத்தைக் கடனாக வழங்கியது சீனா. தொடர்ந்து 2014-ல் கொழும்பில் மிகப்பெரிய பொருளாதார நகரம் அமைக்கும் ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கையெழுத்திட்டனர்.

மகிந்த ராஜபக்‌சே  - கோத்தபய ராஜபக்‌சே
மகிந்த ராஜபக்‌சே - கோத்தபய ராஜபக்‌சே

தொடர்ந்து அதற்கடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற, ஆட்சியைக் கைப்பற்றினார் மைத்ரிபாலா சிறிசேனா. இதனிடையில் இலங்கையின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போனது. சிறிசேனா பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் 50 சதவிகிதம் கடனாகவே இருந்தது. இதனால் வழியின்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்குச் சீனாவிடம் குத்தகைக்குவிட்டார் சிறிசேனா.

குத்தகைக்கான ஒப்பந்தத்தில், `அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 சதவிகித உரிமையாளராகச் சீனாவும், 30 சதவிகித உரிமையாளராக இலங்கையும் செயல்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், `சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்தக் கூடாது' என்றும் ஒப்பந்தமிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொழும்பு துறைமுக நகரம்!

முன்னதாக ஒப்பந்தம் செய்தபடி, 2015-ல் `கொழும்பு துறைமுக நகரம்' அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும், அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவின் சீன எதிர்ப்புக் கொள்கைகளால் பெரிதாக பணிகள் நடைபெறவில்லை. 2020-ல் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். அவரின் தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபரானார். இதையடுத்து கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் பணிகளை வேகப்படுத்தினார் ராஜபக்சே.

கொழும்பு துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகரம்
2020 நிலவரப்படி இலங்கையின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் 80 சதவிகிதம் கடனாக மாறியிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கொழும்பு துறைமுக நகரத்தை முழு அதிகாரத்துடன் 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கோரியது சீனா.

இதற்கிடையில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிவந்தது. கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது இலங்கை. அதனால் வேறு வழியின்றி கொழும்பு துறைமுக நகரத்தைச் சீனாவுக்கு வழங்கும் முடிவுக்கு வந்தது இலங்கை அரசு. கொழும்பு துறைமுக நகரத்தின் முழு அதிகார உரிமையையும் சீனாவுக்கு வழங்கும் `கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய மசோதா'வை அமலுக்குக் கொண்டுவந்தார் கோத்தபய ராஜபக்சே. இந்த மசோதாவைக் கொண்டுவந்தபோது பேசிய ராஜபக்சே, ``இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடாகவும், இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதனால் இந்த மசோதா நிறைவேற்றப்படுவது அவசியம்'' என்றார்.

இந்த மசோதாவை எதிர்த்த எதிர்க்கட்சிகள், `மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித்தான் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்று கூறினர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், ``நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடுதான் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களில் 149 பேரின் ஆதரவோடு இந்த மசோதாவைக் கடந்த மே மாதத்தில் நிறைவேற்றியது இலங்கை அரசு. இந்த மசோதாவால் இலங்கையின் இறையாண்மைக்கே களங்கம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இந்தநிலையில், இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``பொதுவாக ஒரு நாடு, உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிக மிகக் குறைவு. அதே ஒரு நாட்டிடமிருந்து இன்னொரு நாடு கடன் பெறும்போது அதற்கான வட்டித் தொகை மிகவும் அதிகம். சீனா இலங்கைக்கு வழங்கியிருக்கும் கடனுக்கு வட்டித் தொகை மிக மிக அதிகம். அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்தில் கடனை திருப்பியளிக்க வேண்டுமென்றும் சீனா ஒப்பந்தம் செய்திருக்கிறது. அப்படித் திருப்பிச் செலுத்தத் தவறினால் நாட்டின் ஒரு பகுதியை சீனாவின் பெயருக்கு மாற்றி எழுதும் அளவுக்குக்கூடச் செல்லலாம். அல்லது கொழும்பு துறைமுக நகரத்துக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தைப்போல, பல்வேறு ஒப்பந்தங்களைப் போட வேண்டிய சூழலுக்கு இலங்கை தள்ளப்படும். அதுவும் கிட்டத்தட்ட தங்களது நாட்டை இன்னொரு நாட்டுக்கு எழுதிக் கொடுப்பதற்குச் சமம்தான்.

சீனாவின் திட்டமே திருப்பியளிக்க முடியாத அளவுக்கான கடனை அளித்து, இலங்கையில் அதிகாரம் செலுத்த வேண்டுமென்பதுதான். அப்படிச் செலுத்தும் பட்சத்தில், ஆசிய நாடுகளுடன் சாலை, கடல்வழி போக்குவரத்துகளை அதிகரிக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப் பன்மடங்கு பெருக்கலாம். பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இதுபோலவே அதிக அளவில் முதலீடுகளைச் செய்துவருகிறது சீனா.

இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை

சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உற்று கவனித்து வருகிறது. ஆசிய நாடுகளில் தனது கைகளை ஓங்கச் செய்து, அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் சவாலாக திகழ்வதுதான் சீனாவின் திட்டம். அப்படிச் செய்வதன் மூலம் மொத்த ஆசியாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்கிற திட்டத்திலிருக்கிறது சீனா. அதன்பிறகு ஆசியாவில் சீனா வைத்ததுதான் சட்டமாக இருக்கும் நிலை ஏற்படலாம். எனவேதான் இந்தியா, சீனாவின் இது போன்ற நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகிறது'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism