Published:Updated:

`ட்ரம்ப் ஆட்சியில் ஹீரோ; பைடன் ஆட்சியில்?' - மோடியின் அமெரிக்க டைரிக் குறிப்புகள் சொல்வது என்ன?

கண்டுகொள்ளாத அமெரிக்கப் பத்திரிகைகள், ட்வீட் செய்யாத கமலா ஹாரிஸ், அறிவுரை வழங்கிய ஜோ பைடன், `கோ பேக் மோடி' முழக்கம் - மோடியின் அமெரிக்கப் பயணம் எப்படியிருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஒராண்டுக்கு மேலாக, கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணம் ஏதும் மேற்கொள்ளாமலிருந்தார் பிரதமர் மோடி. நீண்ட நாள்களுக்குப் பிறகு மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு குவாட் மாநாடு தொடங்கி ஐ.நா பொதுக்கூட்டம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்துப் பேசினார் மோடி.

அமெரிக்காவில் பிரதமர் மோடி
அமெரிக்காவில் பிரதமர் மோடி

முன்னதாக 2019-ம் ஆண்டில், டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார் மோடி. அந்தச் சமயத்தில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்ற இடங்களிலெல்லாம் மோடியைக் காண மக்கள் குவிந்தனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் `ஹெளடி மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நல்லுறவு நிலவிய காரணத்தால், அந்த நிகழ்ச்சியில் இருவரும் மாறி மாறிப் புகழ்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் முன்பு பேசிய மோடி, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப்பை வெளிப்படையாகவே ஆதரித்தார்.

ஆப்கிபார் ட்ரம்ப் சர்க்கார்!
பிரதமர் மோடி

பதிலுக்கு ட்ரம்ப்பும் மோடியை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளினார். பிரதமர் மோடி நியூயார்க் சென்றிருந்தபோதும், அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான மக்கள் அங்கு கூடியிருந்தனர். ​`ஹெளடி மோடி' நிகழ்ச்சி குறித்தும், மோடியின் அமெரிக்க வருகை குறித்தும் அமெரிக்க ஊடகங்களும் செய்தித்தாள்களும் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டன. ஒருசில செய்தித்தாள்களில் மட்டும், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்றும், மோடியை `இந்தியாவின் ட்ரம்ப்' என்றும் விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

ஆனால், கடந்த முறை அமெரிக்கா சென்றபோது மோடிக்குக் கிடைத்த வரவேற்பும் முக்கியத்துவமும் இந்த முறை கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. கடந்த முறையோடு ஒப்பிடும்போது, எல்லாமே அப்படியே தலைகீழாக மாறிவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

வெள்ளை மாளிகை சந்திப்பு!

மோடி, அமெரிக்க அதிபர் பைடனைச் சந்திக்கச் சென்றபோது, வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து பைடன் அவரை வரவேற்கவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் மோடியை வரவேற்று, நேரடியாக ஓவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் பைடன், மோடியை வரவேற்றார். கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்த மோடியை, அப்போதைய அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலனியாவும் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து வரவேற்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மோடி - பைடன்
மோடி - பைடன்
ஜோ பைடன்: சோகம் நிறைந்த பர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் - அதிபரானது எப்படி?

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு வெளியில் வந்து நின்று சிறப்பான வரவேற்பளித்தனர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ராஜீவுக்குக் குடைபிடித்தார். இந்தச் சம்பவங்களையெல்லாம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது நினைவுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமலா ஹாரிஸுடனான சந்திப்பு!

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸைச் சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது உரையாற்றிய கமலா ஹாரிஸ், ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துவதன் அவசியம் பற்றிப் பேசினார். ``இதன் மூலம், மோடிக்கு மறைமுகமாக ஜனநாயக மாண்புகள் பற்றி கமலா ஹாரிஸ் பாடம் எடுத்திருக்கிறார்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நரேந்திர மோடி - கமலா ஹாரிஸ்
நரேந்திர மோடி - கமலா ஹாரிஸ்

யாரைச் சந்தித்தாலும், எந்த நிகழ்வில் கலந்துகொண்டாலும் அது தொடர்பாக மறக்காமல் உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார் கமலா ஹாரிஸ். சிறிய நாடான ஜாம்பியாவின் அதிபரைச் சந்தித்தது குறித்துக்கூடக் கமலா ஹாரிஸ் ட்வீட் செய்திருந்தார். ஆனால், பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து எந்தவொரு பதிவும் கமலா ஹாரிஸின் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறவில்லை. இதையடுத்து இது குறித்துப் பல்வேறு கோரிக்கைகள் எழ, மோடியுடனான சந்திப்பு குறித்து மறுநாள் ட்வீட் செய்தார் கமலா ஹாரிஸ். ``இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்த பின்னரே கமலா ஹாரிஸ் கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். ​

கண்டுகொள்ளாத பத்திரிகைகள்!

அமெரிக்கப் பத்திரிகைகள் பலவும் மோடியின் அமெரிக்க வருகை பற்றி எந்தவொரு பெரிய செய்தியும் வெளியிடவில்லை. கடந்த முறை அமெரிக்கக் காட்சி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்த மோடியின் அமெரிக்க வருகை, இந்த முறை துளியும் கண்டுகொள்ளப்படவில்லை. ஒருசில பத்திரிகைகள், `அதிபரும், துணை அதிபரும் மோடிக்கு ஜனநாயக மாண்புகள் குறித்து அறிவுரை வழங்கினர்' என்று செய்தி வெளியிட்டிருந்தன. `லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை, `கமலா ஹாரிஸ், இந்தச் சந்திப்பின்போது இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான அழுத்தத்தைப் பிரதமர் மோடிக்கு உணர்த்தினார்' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவில் மோடி
அமெரிக்காவில் மோடி

`கோ பேக் மோடி!'

மோடி, வெள்ளை மாளிகைக்கு வந்த சமயத்தில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் பதாகைகளுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியில் காத்திருந்தனர். அதேநேரத்தில், மோடிக்கு எதிரான முழக்கங்களோடும் பதாகைகளோடும் பல பேர் வெள்ளை மாளிகைக்கு அருகில் குவிந்திருந்தனர். அவர்களில் பலரும் சீக்கியர்கள் எனச் சொல்லப்படுகிறது. மோடிக்கு எதிராகக் கோஷமிட்டவர்களின் கைகளில் `கோ பேக் மோடி' என்பது போன்ற பல்வேறு பதாகைகள் இருந்ததையும் காண முடிந்தது. ஐ.நா பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியிலும் மோடிக்கு எதிராக கோஷமிட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

மோடிக்கு எதிராக போராடிய அமெரிக்கவாழ் இந்தியர்கள்
மோடிக்கு எதிராக போராடிய அமெரிக்கவாழ் இந்தியர்கள்
Twitter/@ShayarAmir
`தேநீர் கடை சிறுவன், இன்று ஐ.நா-வில் 4-வது முறையாக உரையாற்றுகிறான்!´ -பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், ``2019-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த மோடி வெளிப்படையாகவே ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்தார். 2020-ம் ஆண்டு நடந்த பிரசாரங்களில் ஜோ பைடனும் கமலா ஹாரிஸும் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். `ஹெளடி மோடி' நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்தியாவில் `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்தினார் மோடி. டரம்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால்தான், மோடிக்கு பைடன் அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

ட்ரம்ப், மோடிதான் மிகச் சிறந்த தலைவர் எனும் வகையில் பாராட்டித் தள்ளினார். ஆனால், பைடன் மோடிக்குச் சிறந்த தலைவர், சக்திவாய்ந்த தலைவர், எளிமையான தலைவர் என்று எந்தவொரு பட்டமும் வழங்கவில்லை. மாறாக, காந்திய சிந்தனைகள் பற்றி மோடியிடம் பேசியிருக்கிறார். `மகாத்மா காந்தியின் அகிம்சை, மரியாதை, சகிப்புத்தன்மை போன்றவை இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை' என்று பைடன் மோடியிடம் கூறியிருக்கிறார். அமெரிக்க ஊடகங்கள் பலவும், `காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, விவசாயிகள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் மனித உரிமைகளையும், ஜனநாயக மாண்புகளையும் இந்தியா மீறிவிட்டது. அதன் காரணமாகத்தான் இதையெல்லாம் மோடியிடம் பைடன் வலியுறுத்தியிருக்கிறார்' எனச் சொல்கின்றன. ஒட்டுமொத்தத்தில், மோடிக்குக் கடந்த முறை அமெரிக்கப் பயணத்தில் கிடைத்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இந்த முறை மிஸ்ஸிங் என்றே தெரிகிறது!'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு