Published:Updated:

தாலிபன்களின் ஓராண்டுகால ஆட்சி... எப்படி இருக்கிறது ஆப்கானிஸ்தான்?

தாலிபன்

ஆப்கானிஸ்தானில், தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது அந்த நாடு?

தாலிபன்களின் ஓராண்டுகால ஆட்சி... எப்படி இருக்கிறது ஆப்கானிஸ்தான்?

ஆப்கானிஸ்தானில், தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது அந்த நாடு?

Published:Updated:
தாலிபன்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியது தாலிபன் படை. அன்றிலிருந்து ஓரிரு நாள்களில் ஆப்கனின் பெரும்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை விமர்சையாகக் கொண்டாடிவருகின்றனர் தாலிபன்கள். கடந்த திங்கட்கிழமை, தாலிபன்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆப்கானிஸ்தானின் தெருக்களில் கருப்பு வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு சென்றனர். இந்த நாளை தேசிய விடுமுறையாகவும் அறிவித்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றதும் `நாங்கள் பழைய மாதிரி இல்லை; மாறிவிட்டோம்' என்று முழங்கிய தாலிபன்கள், அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்தனர். பழைமைவாதத்தை நோக்கி நாட்டை நகர்த்திச் சென்றனர். நாட்டில் வறுமை, வறட்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மத்தியில் மங்கிப் போகும் நம்பிக்கை போன்றவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஓராண்டு தாலிபன் ஆட்சியில் ஆப்கனின் நிலை எப்படியிருக்கிறது?

தாலிபன் | Taliban fighters patrol in Kabul, Afghanistan
தாலிபன் | Taliban fighters patrol in Kabul, Afghanistan
AP

நலிவடைந்த பொருளாதாரம்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பவை ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் 30-40% சுருங்கியதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, 2021-ன் மூன்றாம் காலாண்டில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் வேலையை இழந்திருக்கின்றனர். அங்கு 2022-ம் ஆண்டின் மத்தியில், ஏழு முதல் ஒன்பது லட்சம் பேர் வரை வேலை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கனின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கான அணுகல் முடக்கம் மற்றும் பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தம் நாட்டுக்குக் கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரச் சரிவைக் கட்டுக்குள் கொண்டுவர வரி வருவாயையும், நிலக்கரி ஏற்றுமதியையும் அதிகரிக்க திட்டம்தீட்டி வருவதாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்கள் பாதுகாப்பு, கல்வி!

பெண்களின் ஆடைகளுக்குத் தீவிரக் கட்டுப்பாடு, ஆண்கள் துணையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடை என கடுமையான விதிமுறைகளை தாலிபன்கள் அமல்படுத்தியிருக்கின்றனர். மார்ச் மாதம் புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆரம்பப் பள்ளிகளில் பெண்கள் கல்வி பெற அனுமதிக்கப்பட்டது. இருந்தும், பெண்களுக்கு மேல்நிலை கல்வி பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் 11 லட்ச மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறுகிறது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, தொழிற் பிரிவில் பெண்களின் பங்கு குறைத்திருப்பதாகச் சொல்கிறது உலக வங்கி. தொழிற் பிரிவில் 1998 -ம் ஆண்டு 15 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு, 2019 ஆம் ஆண்டு 21 சதவிகிதமாக உயர்ந்தது. தாலிபன் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, 2021-ம் ஆண்டு மீண்டும் 15 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

ஆப்கன் பெண்கள்
ஆப்கன் பெண்கள்

உணவு நெருக்கடி!

`சுமார் 25 மில்லியன் ஆப்கானியர்கள் வறுமையில் வாழ்கின்றனர். நாட்டின் பாதி மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர்' என ஐ.நா சபை கூறுகிறது. சர்வதேச மீட்புக் குழுவின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 43% பேர், நாளொன்றுக்கு ஒரு வேளை உணவுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 90 சதவிகித மக்கள் உணவைத் தங்களது முதன்மை தேவையாக முன்வைக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையின்மை, பசி, வறுமை உள்ளிட்டவை குளிர்காலம் தொடங்கும்போது இன்னும் மோசமாகிவிடும்.

ஆப்கானைச் சேர்ந்த மருத்துவர் அமேனா அரேசோ, "நாம் அனைவரும் இருள், துரதிர்ஷ்டத்தை நோக்கிச் செல்கிறோம். ஆப்கனில் வாழும் மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு எதிர்காலமே இல்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

பசிக் கொடுமையில் ஆப்கன் மக்கள்
பசிக் கொடுமையில் ஆப்கன் மக்கள்

தாலிபன்களின் ஓராண்டுக்கால ஆட்சியில், நாட்டின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தலையிட்டு ஆப்கனின் நிலையைச் சரி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது!