Published:Updated:

தாலிபன்களின் ஓராண்டு ஆட்சி... உச்சமடையும் மக்களுக்கெதிரான கொடுமைகள்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஆப்கனில், தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேகத்தில் அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளாகவே இருந்தது

தாலிபன்களின் ஓராண்டு ஆட்சி... உச்சமடையும் மக்களுக்கெதிரான கொடுமைகள்!

ஆப்கனில், தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேகத்தில் அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளாகவே இருந்தது

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிய தாலிபன்களின் அரசாட்சி இந்த ஆகஸ்ட்டுடன் ஓராண்டைக் கடக்கிறது. “நம்புங்கள் நாங்கள் மாறிவிட்டோம்” என்று ஆட்சிக்கு வந்ததும் சொன்னவர்கள், அடுத்தடுத்து அறிவித்த புதிய சட்டதிட்டங்களால், ‘பழைய பழைமை வாதிகள்தான் நாங்கள்’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தனர். இப்போது அவர்களது கொடுங்கோல் ஆட்சி உச்சத்தைத் தொட்டிருக்கிறது!

தாலிபன்களின் ஆட்சியை விமர்சிப்பவர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில், ஆப்கனின் பிரபல யூடியூபரும், மாடலுமான அஜ்மல் உள்ளிட்ட மூன்று பேரை தாலிபன்கள் கைதுசெய்து, சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தச் சூடு தணிவதற்குள், `தாலிபன் களின் அரசையோ, அரசு ஊழியர்களையோ சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்; ராணுவ வீரர்களைத் தொடுவதும், அவர்களிடம் தவறாகப் பேசுவதும் தண்டனைக்குரிய குற்றம்’ எனக் கூறி மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தாலிபன் அரசு.

தாலிபன்களின் ஓராண்டு ஆட்சி... உச்சமடையும் மக்களுக்கெதிரான கொடுமைகள்!

பெண்களுக்கு எதிராக இறுகும் சட்டங்கள்...

ஆப்கனில், தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேகத்தில் அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளாகவே இருந்தது. ‘பெண் கல்விக்கு எதிராக எதையும் செய்யமாட்டோம்’ என்று கூறியவர்கள், தொடக்கத்தில் ஆண்கள்-பெண்கள் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளின் வகுப்பறைகளை திரையிட்டுப் பிரித்தனர். படிப்படியாகக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தவர்கள், இப்போது பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கே தடை விதித்திருக்கின்றனர். புதிய விதிப்படி, பெண்கள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாது.

தொடக்கத்தில் பெண்கள் தலை மற்றும் கழுத்துப் பகுதியை மறைக்கும் ஹிஜாப்பைக் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர். முகம் உட்பட முழு உடலையும் மறைத்து கண்கள் மட்டும் வெளியில் தெரியும்படி யாக இருக்கும் நிகாப், பர்தா உடைகள் அணிவது கட்டாயம் என்பது கடந்த மே மாதம் முதல் கட்டாயமாகியிருக்கிறது. இவற்றைக் கண்காணிக்க எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய தாலிபன்கள் வீதிகளில் ரோந்துவருகின்றனர். மேலும், அரசுப் பணிகள், செய்தி வாசிக்கும் பணிகளில் இருக்கும் பெண்கள் இந்த உத்தரவை மீறினால் பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களையும் பணிநீக்கம் செய்து, அவர்களுக்கு மூன்று நாள்கள் சிறைத்தண்டனை வழங்கும் விநோத உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றனர்.

இதுதவிர பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்கத் தடை, ஆண் துணையில்லாமல் வெளியில் வருவதற்குத் தடை, டிரைவிங் லைசென்ஸ் பெறத் தடை என பெண்களுக்கெதிரான தடை உத்தரவுகள் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆண்களையும் விட்டுவைக்கவில்லை; `அந்நிய உடைகளை உடுத்தக் கூடாது, தலைப்பாகையில்லாமல் வெளியில் தோன்றக் கூடாது, அலுவலகம் வருபவர்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும்’ என ஆண்களுக்கும் புதிய கெடுபிடிகளை அடுக்கியிருக்கிறது ஆப்கன் அறநெறி அமைச்சகம்.

பழைய ரொட்டித்துண்டுகளே உணவு!

ஆப்கனில் பொருளாதார நிலையின்மையும், உணவுத் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது. ஏற்கெனவே, `ஆப்கானிஸ்தானில் வாழும் 95 சதவிகித மக்களுக்குப் போதுமான உணவு இல்லை. சுமார் 2.3 கோடி மக்கள் பட்டினியில் சிக்கித் தவிக்கிறார்கள். குறிப்பாக 50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா வெளியிட்டது. மேலும், `இதே நிலை நீடித்தால், வரும் பனிக்காலத்துக்குள் லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும், குழந்தைகளும் பட்டினியால் உயிரிழக்கக்கூடும்’ எனவும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், ஆப்கனில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. கூடவே பசிக்கொடுமையும் அதிகரித்திருக்கிறது. இதனால், கால்நடைகளுக்கு உணவாக வைக்கப்படும் பழைய ரொட்டித்துண்டுகளை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் ஆப்கன் மக்கள். குறிப்பாக, தலைநகர் காபூலில் உணவகங்கள், மருத்துவமனைகளிலிருந்து மீதமான பழைய ரொட்டித்துண்டுகளை சாக்கில் சேகரிக்கும் சிலர், அதைச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். உணவுக்கு வேறு வழியற்ற மக்கள் பூஞ்சை பிடித்த பழைய ரொட்டித்துண்டுகளை வாங்கி, அவற்றைச் சூடுபடுத்தி உண்டு உயிர்பிழைத்துவருகின்றனர்.

தாலிபன்களின் ஓராண்டு ஆட்சி... உச்சமடையும் மக்களுக்கெதிரான கொடுமைகள்!

இயற்கையின் சதி...

இயற்கையின் கோர முகமும் மக்களின் தலைமேல் அடித்துக்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22-ம் தேதி ஆப்கனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பக்டிகா மாகாணத்தில் மட்டும் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. அதேபோல, கடுமையான பனிப்பொழிவால் ஆப்கனின் 15 மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பரிதவித்துவருகின்றனர். ஜூன் மாத இறுதியில் மட்டும் 42 பேர் உயிரிழந்ததாகவும், 76 பேர் காயமடைந்ததாகவும், 20 நாள்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆப்கன் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது தவிர, நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவருகின்றன. கடந்த ஜூன் 18-ம் தேதி, காபூல் நகரிலுள்ள குருத்வாராவில் நடந்த குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூட்டில் சீக்கியர்கள் உட்பட பலர் பலியானதும், இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் அவ்வப்போது உதவினாலும், “இந்த வறுமைத் துயரிலிருந்து விடுபட நாங்கள் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கண்ணீர் வடிக்கின்றனர் ஆப்கன் மக்கள்!