Published:Updated:

`இருக்கிறாரா; இல்லையா?' - மர்மங்களுக்கு மத்தியில் உச்சபட்ச தாலிபன் தலைவர் - யார் இந்த ஹிபத்துல்லா?!

ஹிபத்துல்லா - தாலிபன் தலைவர்
ஹிபத்துல்லா - தாலிபன் தலைவர்

`ஹிபத்துல்லா கோவிட் தொற்றில் இறந்துவிட்டார்' என்ற வதந்தி ஒருபுறம் பரவ, `கடவுள் விருப்பப்படி அவரை விரைவில் சந்திப்பீர்கள்' என்று தாலிபன்கள் மறுபுறம் தெரிவிக்க, நீங்காத மர்மமாகவே இருந்துவருகிறார் ஹிபத்துல்லா. யார் இவர்... எப்படி தாலிபன்களின் தலைவரானார்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து, பல்வேறு தாலிபன் தலைவர்களும் காபூல் நகருக்குள் வந்துவிட்டனர். ஆனால், தாலிபன்களின் உச்சபட்ச தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸடா மட்டும் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்துவருகிறது.

``ஹிபத்துல்லா எங்கு இருக்கிறார்... ஏன் வெளி உலகுக்கு வரவில்லை?'' என்ற கேள்விகள் தாலிபன்களைச் சுற்றிக்கொண்டேயிருந்தன. கடந்த வாரம் ஹிபதுல்லா பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, பின்வருமாறு பதிலளித்தார் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்...
கடவுளின் விருப்பப்படி அவரை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்!
ஜபிஹுல்லா முஜாஹித்

கடந்த சில நாள்களாகவே ஹிபத்துல்லாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலவிவந்தன. ``ஆப்கனில் வசித்துவரும் ஹிபத்துல்லா, கோவிட் தொற்று அல்லது குண்டுவெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம். அதனால்தான் அவர் பொதுவெளிக்கு வரவில்லை'' என்று வதந்திகள் பரவின.

தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்
தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்
வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜபிஹுல்லா முஜாஹித், ``ஹிபத்துல்லா இப்போது கந்தஹாரில்தான் இருக்கிறார். நீண்டகாலமாக அவர் அங்குதான் வாழ்ந்துவருகிறார்'' என்றார். தாலிபன்களின் துணை செய்தித் தொடர்பாளரான பிலால் கரீமி, ``ஹிபத்துல்லா மிக விரைவில் பொதுவெளியில் தோன்றுவார்'' என்று சொல்லி, பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா யார்?

தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா. எந்தவொரு விஷயத்திலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக்கொண்டிருப்பவர். 2016-ம் ஆண்டு, அமெரிக்கர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார் அப்போதைய தாலிபன்கள் தலைவர் அக்தர் மன்சூர். அவர் உயிரிழப்பதற்கு முன்பாக எழுதிய உயிலில், ஹிபத்துல்லாவைத் தனது வாரிசாக அறிவித்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், மன்சூரின் மறைவுக்குப் பின்னர் தாலிபன்களின் தலைவரானார் ஹிபத்துல்லா. 2016-ல் அக்தர் மன்சூர் மறைவுக்குப் பிறகு, முல்லா ஒமரின் மகன் என்ற முறையில், முல்லா முகமது யாகூப்தான் தாலிபன்களின் தலைவராக்கப்படவிருந்தார் என்கிறார்கள். ஆனால், அப்போது முகமது யாகூப்புக்கு சிறு வயது என்ற காரணத்தால், ஹிபத்துல்லாவைத் தலைவராக முல்லா யாகூப்பே முன்மொழிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய அறிஞரான ஹிபத்துல்லா, ஆப்கனின் கந்தஹார் பகுதியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக நம்பப்படும் ஹிபத்துல்லா, இஸ்லாமிய மதம் சார்ந்து பல்வேறு புத்தகங்களை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

தாலிபன் உருவாவதற்கு முன்பாகவே, ஹிபத்துல்லா பல்வேறு கிளர்ச்சிகளில் முக்கியப் பங்காற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஆப்கன் கிளர்ச்சியில் பங்கேற்றவர் ஹிபத்துல்லா. போர் வீரனாக அறியப்படுவதைவிட, மத அறிஞராகவே அறியப்படுகிறார் இவர்.

மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா
மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா
`விசுவாசிகளின் தலைவர்' என தாலிபன்களால் புகழப்படும் ஹிபத்துல்லா, ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டும் வெளியில் தலைகாட்டுவாராம். சுமார் 60 வயதாகும் இவர், இதுவரை ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்துவந்திருக்கிறார்.

முந்தைய தாலிபன் ஆட்சியில், ​​ஹிபத்துல்லா தாலிபன் உச்ச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார் என்றும், 2001-க்குப் பின்னர், ஆப்கனில் தலிபான்களின் வீழ்ச்சியை அடுத்து, அவர் மத அறிஞர்கள் குழுவின் தலைவரானார் என்றும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிபத்துல்லா மறைந்து வாழ்வது ஏன்?

தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் என்பதால், பல்வேறு பாதுகாப்புக் காரணங்களால் அவர் மறைந்து வாழலாம் என்று சொல்லப்படுகிறது. ``ஆப்கன் மண்ணில் வெளிநாட்டுப் படைகள் இருக்கும் வரை, தாங்கள் ஜிஹாத் நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் தாலிபன்கள். அதனால் வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை தங்கள் தலைவரை தாலிபன்கள் மறைத்துவைத்திருப்பார்கள். இந்தக் காரணத்தால்தான் தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் வெளியே தலைகாட்டவில்லை'' என்கிறார் பாகிஸ்தானில் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இம்தியாஸ் குல் (Imtiaz Gul).

தாலிபன் நிறுவனர் முல்லா முகமது ஒமர்
தாலிபன் நிறுவனர் முல்லா முகமது ஒமர்
`முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

இது குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள், ``தாலிபன்களின் தலைவர்கள் மறைந்து வாழ்வது ஒன்றும் புதிதல்ல. தாலிபன்கள் அமைப்பின் நிறுவனர் முல்லா ஒமரும் மர்ம மனிதராக, வெளி உலகுக்குத் தலை காட்டாமலேயே வாழ்ந்தார். முல்லா ஒமர் 2013-ம் ஆண்டே பாகிஸ்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இறந்துவிட்டார். ஆனால், அது குறித்து 2015-ம் ஆண்டில்தான் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அந்தச் சமயத்திலும் `ஒமர் எங்கே இருக்கிறார்... இருக்கிறாரா, இல்லையா?' என்பது போன்ற கேள்விகள் சுற்றிக்கொண்டேயிருந்தன.

தற்போது ஹிபத்துல்லாவும் `இருக்கிறாரா, இல்லையா?' என்ற சந்தேகம் வலம் வந்துகொண்டிருக்கிறது. முல்லா ஒமர் மறைந்து வாழ்ந்தபோது தாலிபன்கள் ஆட்சியில் இல்லை. ஆனால், தாலிபன்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும்போது ஹிபத்துல்லா மறைந்து வாழ்வது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது. ஹிபத்துல்லாவின் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே இதுவரை உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள் தாலிபன்கள். அதனால் ஹிபத்துல்லாவைச் சுற்றியிருக்கும் வதந்திகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவர் பொதுவெளியில் தோன்றினால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு