Published:Updated:

`தாலிபன்களை வளர்த்துவிட்டது முதல் ஆப்கன் மக்களைக் கைவிட்டது வரை!' - அமெரிக்காவின் அரசியல்தான் என்ன?

தாலிபன்

தாலிபன்கள் ஏந்தி நிற்கும் ஆயுதங்களில் யார் யாரின் கைரேகைகள் பதிந்திருக்கின்றன எனும் வரலாற்றை வட்டமிட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எங்கு பார்த்தாலும் தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றிய செய்திகளே நிரம்பி வழிகின்றன. ஆப்கன் மக்களைத் தாண்டி பிற நாட்டு மக்களும் பீதியில் உறைந்துள்ளனர். 20 ஆண்டுகளாக ஆப்கனில் காலூன்றியிருந்த அமெரிக்கப் படையினர் நாடு திரும்பிவிட்டனர். ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானியும் தப்பி ஓடிவிட்டார். ஒருபுறம், 'அமெரிக்கா எங்களைக் கைவிட்டுவிட்டது' என்ற ஆப்கன் மக்களின் ஆதங்கத்துக்கு, மறுபுறம் 'நாங்கள் ஆப்கனை மறுகட்டமைப்பதற்காக ஒன்றும் அங்கு செல்லவில்லை, அது எங்கள் நோக்கமும் இல்லை. எங்களுக்கு எங்கள் ராணுவ வீரர்களின் உயிர்தான் முக்கியம்' என்ற அமெரிக்க அதிபரின் பதிலடி வாதமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா எடுத்த முடிவு சரியா... ஜோ பைடன் சொல்வதில் நியாயம் இருக்கிறதா... தாலிபன்களை வளர்த்துவிட்டவர்கள் யார்... ஆப்கன் போரில் அமெரிக்காவின் பங்கு என்ன... வரலாறு என்ன சொல்கிறது? விரிவாக அலசுவோம்!
ஜோ பைடன் |
ஜோ பைடன் |
Andrew Harnik

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது என்ன?

``ஆப்கானிஸ்தானைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை. அல்-கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமா பின் லேடனைப் பிடிக்கவுமே இந்தப் போர் நடைபெற்றது. எப்போது அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்கியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இன்னும் எத்தனை தலைமுறை அமெரிக்கப் பிள்ளைகளை ஆப்கன் உள்நாட்டுப் போருக்கு நாங்கள் அனுப்ப வேண்டும்? கடந்த காலத்தில் நடந்த தவறுகளை நான் தொடர விரும்பவில்லை'' என்றிருக்கிறார். இவற்றையெல்லாம் இப்போதைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அமெரிக்காவின் பக்கம் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால், வரலாற்றை ஆராயும்போதுதான் இதற்கெல்லாம் முழுமுதற் சூத்ரதாரி யார் என்ற உண்மை புலப்படும்.

உலக நாடுகள்
உலக நாடுகள்

வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா..?

1945, இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபோது, உலக நாடுகள் பலவும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லாதிக்க நாடுகளின் தலைமையில் இரு அணிகளாகப் பிளவுபட்டன. அவற்றில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அணிசாரா நாடுகளாக ஒதுங்கிக்கொண்டன. அமெரிக்கா முதலாளித்துவத்தையும், ரஷ்யா கம்யூனிசத்தையும் முன்னிறுத்தி கருத்தியலில் முரண்பட்டன. விளைவு, 1947-ல் இரண்டே ஆண்டுகளில் மீண்டும் போர் மூண்டது. ஆனால் அது மூன்றாம் உலகப்போராக இருக்கவில்லை. காரணம், இந்தப் போர் சற்று வித்தியாசமானது. அதாவது, பனிப்போர். புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால், முதல்-இரண்டாம் போர்களில் நேரடியாக பங்கேற்று கோடிக்கணக்கில் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் சந்தித்துப் பாடம் கற்ற வல்லரசு நாடுகள், இம்முறை சற்று சுதாரித்துக்கொண்டன. தாங்கள் நேரடியாகப் போரில் பங்கேற்காமல், தங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி களத்தை மாற்றிக்கொண்டன. அதாவது, இரண்டாம் கட்ட நாடுகளைத் தங்கள் போர்க்களங்களாகவும், அந்நாட்டு ராணுவம் அல்லது புரட்சிக்குழுவை தங்களின் பகடைகளாகவும் பயன்படுத்திக்கொண்டு, மறைமுகமாகத் தங்களுக்குள் போரிட்டன.

ஐரோப்பிய - ரஷ்ய அடையாளங்கள்
ஐரோப்பிய - ரஷ்ய அடையாளங்கள்

உலகில் கம்யூனிசம் எந்த மூலையில் தலைதூக்கினாலும், அங்கு அமெரிக்கா சென்று எதிர்க்கும், முடக்கும் என்பதை வெளிப்படையாகவே அந்நாடு அறிவித்தது. இதை அடியொற்றித்தான், கிழக்கு ஐரோப்பிய (East bloc) நாடுகளில் (போலந்து, பல்கேரிய..,) உள்ள கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்து, அங்கு தனக்குச் சார்பான அரசை ரஷ்யா ஏற்படுத்தியபோது, அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய (West block) நாடுகளை (இங்கிலாந்து, பிரான்ஸ்...) ஒன்றிணைத்து ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்பிவிட்டது. அதில் அமெரிக்கா வெற்றியும் கண்டது. அதேபோல் கியூபாவின் பக்கம் ரஷ்யா திரும்பியபோதும் அங்கு முட்டுக்கட்டைபோட்டது. கருத்தியலைக் கடந்து, தொழில்நுட்பம், படைபலம், விண்வெளிக்குச் செல்லும் போட்டி என எல்லாவற்றிலும், யார் உலக டான் என்ற அதிகாரப் போட்டியாக முற்றியது.

ரஷ்யா
ரஷ்யா

அமெரிக்கா Vs ரஷ்யா இடையே முற்றிய உரசல், தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கும் தங்களின் களத்தை விரிவாக்கிகொண்டே சென்றது. வடக்கு வியட்நாமுக்கு ரஷ்யா, தெற்கு வியட்நாமுக்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு ரஷ்யா, தென்கொரியாவுக்கு அமெரிக்கா என பிளவுபட்ட நாடுகளிலும் தங்கள் சதுரங்க ஆட்டத்தை நடத்திக்கொண்டன. (அதில் வியட்நாம் ஒன்றிணைந்து, அமெரிக்காவை ஓடவிட்டது தனிக்கதை.) இது மாதிரியான போரைத்தான் வரலாறு பனிப்போராகப் பதிவு செய்கிறது. அப்படியான ஒரு போரில், பகடையாக மாட்டிக்கொண்ட நாடுதான் ஆப்கானிஸ்தான்!

அமெரிக்க - ரஷ்ய பனிப்போரில் பலிகடாவான ஆப்கன்:

1970-களின் பிற்பகுதியில், `ஆப்கன் குடியரசு’ (Republic of Afghanistan) எனும் பெயரில் ஒரு கம்யூனிச ஆட்சியை வழிநடத்திவந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர் தாவுத் கான். அவரின் அரசியல் படுகொலைக்குப் பிறகு, அதிபரான நூர் முகமது தாராகி (Noor Mohammad Taraki), `ஆப்கன் ஜனநாயகக் குடியரசு’ (Democratic Republic of Afghanistan) எனும் பெயரில், ரஷ்ய ஆதரவுள்ள ஒரு கம்யூனிச ஆட்சியே நடத்திவந்தார். இருவருமே, ஆப்கன் அரசை மத அடிப்படையில் கொண்டு செல்லாமல், நிலச் சீர்திருத்தங்கள், பேச்சுரிமை, பெண்ணுரிமை என கம்யூனிசக் கொள்கைகளையே வழிமொழிந்தனர். எதிர்க்கும் இஸ்லாமிய மதவாதிகளைச் சிறையிலடைத்தனர். அவர்களுக்குப் பிறகு வந்த அடுத்தடுத்த அதிபர்களும் ஆப்கானிஸ்தானை ஒரு கம்யூனிச நாடாக்கவே முயன்றுவந்தனர். இது போன்ற செயல்பாடுகளால் எரிச்சலைந்த மத அடிப்படைவாதிகள், கம்யூனிச அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். இது போதாதா அமெரிக்காவின் பார்வை ஆப்கன் மண்ணில் விழுவதற்கு!

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1
கம்யூனிசம் - முதலாளித்துவம்
கம்யூனிசம் - முதலாளித்துவம்

ரஷ்யா அரசுப் பக்கம் நின்றால், அமெரிக்கா புரட்சிக்குழுக்கள் பக்கம் நிற்கும். ரஷ்யா புரட்சிக்குழுக்கள் பக்கம் நின்றால் அமெரிக்கா அரசு பக்கம் நிற்கும். அவர்கள் யாராக இருந்தாலும் அது பற்றி அமெரிக்காவுக்குக் கவலையில்லை, ரஷ்யாவுக்கு எதிரணியில் இருந்தாலே போதும்.

ஆப்கன் கம்யூனிச அரசுக்கெதிராக ஒன்று சேர்ந்தவர்கள் `முஜாஹிதீன்’ எனும் அமைப்பாக அணி திரண்டனர். இதை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, முஜாஹிதீன்களுக்கு ஆயுத உதவியையும், பொருளாதார உதவியையும் குறைவில்லாமல் கொட்டிக்கொடுத்தது. மேலும், அவர்களுக்கு ஏதுவாக அண்டை நாடான பாகிஸ்தானில் பயற்சி முகாம்களை அமைத்துக்கொடுத்து, முறையான ராணுவப் பயிற்சியும் அளித்தது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் இணைந்து ஆப்கன்-பாக் எல்லைப் பகுதிகளில் மதரஸாக்களை ஏற்படுத்தி, அங்கு மத குருமார்களைக்கொண்டு, இஸ்லாமிய மத போதனைகளும் வழங்கப்பட்டன. தாலிபன்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் பிறப்பிடமே அந்த மதரஸாக்கள்தான்.
சிஐஏ - ஐஎஸ்ஐ - முஜாகிதீன்கள்
சிஐஏ - ஐஎஸ்ஐ - முஜாகிதீன்கள்

தாலிபன்களை வளர்த்துவிட்டது யார்?

அமெரிக்கா, தனது பரம எதிரியான ரஷ்யாவை வீழ்த்துவதற்கு, தனது முஜாஹிதீன் அம்புகளை உடலளவிலும், மனதளவிலும் கூர்தீட்டியது. `தூய இஸ்லாத்தைக் காக்க, நாத்திக கம்யூனிச அரசை வீழ்த்துவது ஒன்றே வழி’ என்ற முறையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் உந்துதலில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் முஜாஹிதீன்களை ஆதரித்தன. ரஷ்யாவுடன் இருந்த எல்லைப் பிரச்னையின் காரணமாக, கம்யூனிச நாடான சீனாவும் முஜாஹிதீன்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஒருபடி மேலே சென்று, முஜாஹிதீன்களின் முக்கியத் தளபதிகளை தனது நாட்டுக்கே அழைத்துச் சென்று பயிற்சியும் வழங்கிய விநோதமும் நடந்தேறியது. சாதாரண புரட்சிக்குழுக்களாக இருந்த முஜாஹிதீன்களை, சக்திவாய்ந்த ஆயுதபாரிகளாக மாற்றிய பெரும்பங்கு அமெரிக்காவையே சாரும். முஜாஹிதீன் அமைப்புக்குத்தானே அமெரிக்கா உதவியது... இதில் தாலிபன் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி எழலாம். கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்கிறது. அதைப் பின்னால் பார்ப்போம்.

முஜாஹிதீன்கள்
முஜாஹிதீன்கள்

1979 போர் தொடங்கியது. முஜாஹிதீன்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், ஆப்கன் கம்யூனிச அரசு தடுமாறிக்கொண்டிருந்தது. இனியும் தாமதித்தால் ஆப்கன் அரசு வீழும் என்பதை உணர்ந்த ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசு, 1978-ல் ரஷ்யாவுடன் ஆப்கன் போட்ட போர் உதவி ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவை உதவிக்கு அழைத்தது. 1979, அக்டோபர் 31-ல் ரஷ்யப் படைகள் ஆப்கன் விரைந்தன. மலைக்குன்றுகளிலிருந்து மறைந்து தாக்கும் முஜாஹிதீன்களின் கெரில்லா போர்முறையில், ரஷ்யப்படைகளின் வேகத்தைக் குறைத்தன. ரஷ்யத் தரப்பில் மேலும் ஒரு லட்சம் படையினர் ஆப்கனில் குவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் ரஷ்யப் படைகளின் வருகையை வரவேற்ற ஆப்கன் மக்கள், போரில் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ரஷ்யாவுக்கு எதிராக மாறினர்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒசாமா பின்லேடனும் அமெரிக்கா ஆதரவுடன் களமிறங்கினார். ரஷ்யப் படைகள் மீதான எதிர்ப்பலை, மத்திய ஆசியாவிலிருக்கும் ஏனைய இஸ்லாமிய நாடுகளின் இளைஞர்கள மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விளைவு, 1985-ம் ஆண்டுவாக்கில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் முஜாஹிதீன் அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர். சிறு சிறு குழுக்களாகச் செயல்பட்டுவந்த ஏழு முஜாஹிதீன் அமைப்பினர் கூட்டமைப்பாக வலுப்பெற்றனர். இன்னும் அதிகமான ஆயுதங்களும், பொருளாதார உதவியும் தொடர்ந்து அமெரிக்க அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.

தொடர்ந்து தீவிரமடைந்துவந்த போரில், சுமார் பல லட்சக்கணக்கான அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் லட்சக்கணக்கானோர் கை கால்களை இழந்து முடமாகினர். ரஷ்யப் படை மற்றும் அமெரிக்க ஆதரவு முஜாஹிதீன் படை இருதரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

இந்தநிலையில்தான், 1987-ல் ஐ.நா தலையிட்டு ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தது. இதன் விளைவாக, ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. இதற்கிடையில், 1988-ம் ஆண்டு ஒசாமா பின்லேடன், தனித்தனியாக பிரிந்துகிடந்த முஜாஹிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுதம் தாங்கிய குழுக்களை, `அல்கொய்தா’ எனும் புதிய அமைப்பை உருவாக்கி ஒன்றிணைத்தார். 1989-ம் ஆண்டு ரஷ்யா தனது முழுப்படைகளையும் ஆப்கனிலிருந்து விலக்கிக்கொண்டது.

ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

ரஷ்யப் படைகள் வெளியேறிய பிறகும், ஆப்கன் அரசுக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையேயான போர் நின்றபாடில்லை. ஆப்கன் கம்யூனிச அதிபர் நஜிபுல்லா, புதிய தேசிய மறுமலர்ச்சி திட்டத்தைக் கொண்டுவந்து, புதிய அரசில் முஜாஹிதீன்களையும் பங்கெடுக்க அழைத்தார். அதை ஏற்க மறுத்த முஜாஹிதீன்கள், ஆப்கனை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றுவதே தங்கள் இலக்கு என்றார்கள். 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா உடைந்து, பல நாடுகளாகப் பிரிந்து பலவீனமடைந்தது. அதேவேளையில், 1992-ம் ஆண்டு ஆப்கனின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார்கள் முஜாஹிதீன்கள். அதன் பின்னர், முஜாஹிதீன்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளால், அதிலிருந்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அமெரிக்கா- பாகிஸ்தான் இணைந்து உண்டாக்கிய மதரஸாக்களில் பயின்ற ஆயிரக்கணக்கான புதிய மாணவர்கள் அதில் இணைந்தனர். அவர்கள்தான் தற்போது உலகமே அஞ்சி நடுங்கும் தாலிபன்கள்!

அமெரிக்காவின் பேராதரவுடன் முஜாஹிதீன் அமைப்பிலிருந்து கருவாகி, உருவானதுதான் ஒசாமா பின்லேடனின் 'அல்கொய்தா' அமைப்பும், முல்லா ஒமரின் தாலிபன் அமைப்பும் என்பதை இப்போது விளங்கிக்கொள்ளலாம்.

தாலிபன்
தாலிபன்
அமெரிக்க வரலாற்றிலேயே, மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தை, முஜாஹிதீன்களை உருவாக்குவதிலேயே செலவிட்டது சி.ஐ.ஏ.

முல்லா ஒமரால் உருவாக்கப்பட்ட தாலிபன் அமைப்பு, 1996-ல் முன்னாள் அதிபர் கம்யூனிச நஜிபுல்லாவைக் கொடூரமாகக் கொலை செய்து, இத்தாலியின் முசோலினியைப்போல ஆப்கன் மக்கள் முன்னிலையில் உடலைக் கம்பத்தில் தொங்கவிட்டது. அதே ஆண்டு, ஆப்கன் தலைநகர் காபூலையும் கைப்பற்றி, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் முதன்முதலாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. கம்யூனிச ஆப்கன் குடியரசை முழுவதுமாகத் துடைத்தெறிந்து, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan) என்ற இஸ்லாமிய நாடாக மாற்றியது.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்
pixabay
பழைமைவாதிகளாக அறியப்பட்ட தாலிபன்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதைத் தடுத்து நிறுத்தினர். பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுத்தனர் . பெண்கள் புர்கா அணிந்துகொள்வதும், ஆண்கள் தாடி வளர்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டன. ஆண் துணையில்லாமல் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது. ஆடல், பாடல், இசை, வெளியுலகத் தொடர்பு என ஆப்கன் மக்களின் மகிழ்ச்சிக்கான அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடைவிதித்தனர். அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டில் ஏற்படுத்தப்பட்ட மதரஸாக்களில், பழைமைவாத இஸ்லாமிய மதகுருமார்களால் பயிற்றுவிக்கப்பட்ட, கடுமையான இஸ்லாம் ஷரியத் சட்டங்களை அமல்படுத்தினர். சட்டத்துக்கு கட்டுப்படாதவர்கள், தவறுதலாகத் தவறிழைத்தவர்கள் என ஷரியத் சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும், பொதுவெளியில் நிறுத்தி தலையைத் துண்டிப்பதையே தண்டனையாக்கினார்.
தூக்குத் தண்டனை
தூக்குத் தண்டனை

இதுமட்டுமின்றி, இஸ்லாமிய மசூதிகள் தவிர்த்து, வேற்று மத அடையாளங்களும் சுக்குநூறாக உடைக்கப்பட்டன. தொன்மையின் இலக்கணமாக, உலகப் புகழ்பெற்ற சின்னமாக விளங்கிய பாமியன் புத்தர் சிலை 2001-ம் ஆண்டு அவ்வாறே சிதைக்கப்பட்டது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!

இத்தனை கொடுமைகள் அங்கு நடந்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் திரும்பிக்கொண்டது அமெரிக்கா. அதில் தனக்கிருந்த பங்கை மறந்து திரிந்துகொண்டிருந்தது. `கம்யூனிச ஆட்சியும் வீழ்த்தப்பட்டது. தனக்குத் தலைவலியாக இருந்த ரஷ்யாவும் உடைந்து முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. இனி ஆப்கன் அரசியலில் நமக்கென்ன வேலை, தாலிபன்கள் அங்கு என்ன செய்தாலும் தனக்குக் கவலையில்லை’ என்ற மனநிலையில் அலட்சியப் போக்குடன் இருந்தது அமெரிக்கா. ஆனால், தான் விதைத்த வினை தன்னையே பலி கேட்கும் என்பதை அப்போது அமெரிக்கா எதிர்பார்த்திருக்கவில்லை. காத்திருந்தது அதிர்ச்சி வைத்தியம்.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு நடவடிக்கை
அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு நடவடிக்கை

2001, செப்டம்பர் 11-ம் நாள் உலகின் மிக உயரமான உலக வர்த்தக மையமான, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம், அமெரிக்க விமானத்தைக்கொண்டே தகர்த்தெறியப்பட்டது. சுமார் 3,000 அமெரிக்க மக்களை உயிர்பலியாக்கி, உலகையே பரிதவிக்கவிட்ட இந்தச் சம்பவத்தைச் செய்தவர்கள், ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பினர். இதற்குக் களம் தந்து, உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கியவர்கள் தாலிபன்கள். (ஆனால் இது அமெரிக்க சி.ஐ.ஏ-வுக்குத் தெரியாமல் நடந்திருக்காது என அமெரிக்கா மீதே சந்தேகம் கிளப்பி வாதிடுகின்றனர் ஒரு தரப்பினர்!)

வளர்த்த கடா நெஞ்சில் பாய்ந்த காரணம் என்ன?

ரஷ்யாவை, கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காக மட்டுமே அமெரிக்கா பிற நாடுகளை பயன்படுத்திக்கொள்வதில்லை. தனது நாட்டுநலன், ராணுவப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவை, அரசியல் ஆதிக்கம் எனப் பல்வேறு காரணங்களாக அது நீள்கிறது. அப்படியான ஒரு அரசியல் விளையாட்டில், அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் சிக்கியதுதான் இஸ்லாமிய வளைகுடா நாடுகளில் இருக்கும் எண்ணெய் வளம். பெட்ரோலை டாலரில்தான் விற்க வேண்டும் என்பதில் தொடங்கி, வளைகுடா நாடுகளுக்கிடையே இருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்னைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் நிரம்பியது. இதன் விளைவாக,இரான்,இராக், சிரியா, லிபியா போன்ற எண்ணெய் வளம்மிக்க வளைகுடா நாடுகளில் எப்போதும் அசாதாரணச் சூழல் நிலவியது. அவ்வப்போது போர் நிகழ்வதும், தலைவர்கள் கொல்லப்படுவதும், அரசுகள் கவிழ்க்கப்படுவதுமாக இருந்தது. (குறிப்பாக,இராக் சதாம் உசேனை தானே வளர்த்துவிட்டு, பின் தானே தூக்கிலிடவும் செய்தது அமெரிக்கா. இது போன்ற செயல்பாடுகள் அமெரிக்காவின் `எண்ணெய் அரசியல்’ என்று உலக அரசியல் நோக்கர்களால் இன்றளவும் விமர்சிக்கப்படுகின்றன.)

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இஸ்லாமிய வளைகுடா நாடுகளில் ஏற்படும் குழப்பத்துக்கும், இஸ்லாமிய நாடுகள் ஒன்றுக்கொன்று போர் செய்துகொண்டு, மக்கள் மாண்டு போவதற்கும் முக்கியக் காரணம் அமெரிக்காவின் தலையீடு எனக் கருதினார் ஒசாமா பின்லேடன். குறிப்பாக, 1990-ல் அமெரிக்கா முன்னெடுப்பில் இராக் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையால், பெருமளவிலான இராக் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தனர். உணவும் மருந்தும் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல், பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது, இஸ்ரேலிய யூத அரசு மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளைக் கண்டிக்காமல், தொடர்ந்து இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தது; ரஷ்ய- அமெரிக்கப் போரில் ஆப்கானிஸ்தானைக் களமாகப் பயன்படுத்திக்கொண்டது போன்றவையே அமெரிக்கா மீதான தங்களின் எதிர்ப்புக்குக் காரணம் என அல்-கொய்தா அமைப்பு திட்டவட்டமாக அறிவித்தது.

ஒசாமா பேட்டி
ஒசாமா பேட்டி
இணையம்

அமெரிக்காவை எதிர்க்கும் காரணம் குறித்து ஒசாமா பின்லேடன் சொன்னது:

`` அமெரிக்கா எங்கள் நாடுகளை ஆக்கிரமிக்க நினைக்கிறது. எங்கள் வளங்களைக் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் ஏஜென்ட்டுகள்தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் எங்களைச் சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், எங்களைத் தீவிரவாதிகள் என்கிறது. பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்புப் பகுதியில் கல் எறிந்தால் அவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லும் அமெரிக்கா, லெபனான் நாட்டின் ஐ.நா கட்டடத்தில் குழந்தைகளும் பெண்களும் இருக்கும்போது, இஸ்ரேல் அதை குண்டுவைத்து தகர்க்கும்போது மட்டும் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் எல்லா இஸ்லாமியர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது!"
ஒசாமா பின்லேடன் ( சிஎன்என் ஊடகத்துக்கு அளித்த பேட்டி)

தனக்கு வரும் வரை எல்லாமே வேடிக்கைதான்!

உலக அரங்கில் அமெரிக்காவுக்கு பெரும் தலைகுனிவாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் விளங்கிய இந்தச் சம்பவத்தால், தாலிபன்களுக்கெதிராகக் கொதித்தெழுந்தது அமெரிக்கா. பெரும்பாலும், அமெரிக்கா தனது ராணுவத்தின் உயிர்ச்சேதத்தை தவிர்க்கும் பொருட்டு தரைப்படையைப் பிற நாட்டுப் போர்களில் ஈடுபடுத்த விரும்பாது. ஆகவேதான் பனிப்போரிலும்கூட பகடையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நாடுகளின் படைவீரர்களைத் தரையில் நிற்கவைக்கும். அதிகபட்சமாக, தன் விமானங்கள் மூலம் தொலைவிலிருந்து குண்டுமழை பொழிவதை வழக்கமாகக்கொள்ளும். ஆனால், இம்முறை அதோடு மட்டும் நிற்கவில்லை. நேரடியாக ராணுவ வீரர்களை ஆப்கன் களத்தில் இறக்கியது. காரணம், எதிரி தொட்டது அமெரிக்க ஆதரவு படைகளை அல்ல... நேரடியாக அமெரிக்க மண்ணில் வைத்து அமெரிக்காவையே சீண்டியது. எனவே, `எந்த விலை கொடுத்தும் தன்மீது கைவைத்த அல் கொய்தா, தாலிபன்களை பழிதீர்க்காமல் விட மாட்டோம்’ என்று சூளுரைத்து ஆப்கானிஸ்தான் மண்ணில் கால் பதித்தது.

அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவம்
Twitter

அமெரிக்காவின் தீவிர தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தது தாலிபன். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனும், தாலிபன் தலைவர் முல்லா ஒமரும் எல்லை கடந்து பாகிஸ்தானுக்குத் தப்பினர். சில மாதங்களிலேயே, ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி தூக்கி வீசப்பட்டது.

அமெரிக்க ஆசியுடன் 1996 முதல் 2001 வரை நீண்ட தாலிபன்களின் ஆட்சியை, அமெரிக்காவே முடிவுக்குக் கொண்டுவந்தது! 2004-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் ஹமித் கர்ஸாய் ஆப்கன் அதிபரானார்.

ஆப்கன் ராணுவத்துக்குப் பயிற்சியளித்தபடியே, அமெரிக்க ராணுவம் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் நேட்டோ படையினரும் ஒசாமா பின்லேடனுக்காகத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிடிகொடுக்காத தாலிபன்களும், அல்கொய்தாவினரும் தொடர்ந்து எதிர்த் தாக்குதல் நடத்திவந்தனர். இந்தநிலையில், 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் புதிய அதிபரான ஒபாமா, ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கான தாக்குதலைத் தீவிரப்படுத்தினார். எங்கும் இல்லாத அளவுக்கு சுமார் 1,50,000 வீரர்களை ஆப்கனில் இறக்கியது அமெரிக்கா. விளைவு, பத்தாண்டு தேடுதலுக்குப் பிறகு, 2011, மே 2-ம் நாள் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது அமெரிக்கா.

நேட்டோ கூட்டு நாடுகள்
நேட்டோ கூட்டு நாடுகள்

அந்த நிகழ்வு, அமெரிக்காவைப் பகைத்தால் என்ன கதியாகும் என்பதை உலகுக்கு இன்னும் ஆழமாக உணர்த்தியது. அதன் பின்னர், 2013-ம் ஆண்டு தாலிபன் தலைவர் முல்லா ஒமரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தகவல், இரு ஆண்டுகள் கழித்து 2015-ல் வெளியானதும் அமெரிக்கா மகிழ்ந்தது. இதையடுத்து, தாலிபன்களின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அக்தர் மன்சூரை, 2016-ம் ஆண்டு வான்வழி ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றது அமெரிக்கா.

ஒசாமா பின்லேடன் - முல்லா உமர்
ஒசாமா பின்லேடன் - முல்லா உமர்

வந்த வேலை முடிந்துவிட்டது என மனச் சமாதானம் அடைந்தது. படிப்படியாக, நேட்டோ படையினரும் ஆப்கனிலிருந்த தங்கள் கூடாரத்தை காலிசெய்துவிட்டுக் கிளம்பினர். அமெரிக்காவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் இருந்தது. அதேவேளையில் தாலிபன்களின் தலைதூக்கல் வேகமெடுத்தது, அமெரிக்கப் படையினரின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

அமெரிக்கா, தாலிபன்களுடனான போரில் மட்டும் சுமார் 60 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்ததாகக் கணக்கு காட்டப்பட்டது. 2001 முதல் சுமார் 3,500 அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் மண்ணில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆப்கன் ராணுவத்தினர் சுமார் 69,000 பேர் வரை மாண்டுபோயிருந்தனர்.

இந்தநிலையில்தான், கடந்த 2020-ம் ஆண்டு கத்தாரிலுள்ள தோஹாவில் தாலிபன்களை வரவழைத்து, அமெரிக்கா அவர்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது. அதில், அல் கொய்தாவுக்கு மீண்டும் ஆப்கன் மண்ணில் தாலிபன்கள் இடமளிக்கக் கூடாது, அமெரிக்க ராணுவத்தினர் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும், இவற்றைச் செய்தால் சரியாக 14 மாதங்களுக்குள் ஆப்கன் மண்ணைவிட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தின் மூலம் கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்ட தாலிபன்கள், அமெரிக்க ராணுவத்தினர் மீதான தாக்குதலை நிறுத்திக்கொண்டனர். மாறாக, ஆப்கனிலிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரத்திலிருக்கும் பெண்கள் எனத் தனிமனிதர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்காவின் வெற்றிகரமான தோல்வி?!

இதற்கிடையில், 2021-ல் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கடந்த ஏப்ரல் மாதம், `அமெரிக்கா செப்டம்பர் 11-க்குள் முற்றிலுமாகத் தனது படையினரைத் திருப்பப் பெற்றுக்கொள்ளும்' என அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவின் அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், உடனே தாலிபன்கள் தங்களின் ஒட்டுமொத்த படைபலத்தையும் களமிறக்கி, ஆப்கன் அரச ராணுவத்துக்கெதிராக தீவிர தாக்குதலை நடத்தினர். அதுவே இறுதிப்போராக உருவெடுத்தது. அதேவேளையில், ஆப்கன் அரசைக் கைகழுவிவிட்டு, 90% அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது அமெரிக்கா.

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம்
அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம்

தாலிபன்களின் கொடூரமான தாக்குதலில், ஆப்கன் அரச ராணுவத்தினர் திசைதெரியாமல் சிதறடிக்கப்பட்டனர். அதுநாள் வரை கேடயமாக இருந்த அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின்னர், தனித்துவிடப்பட்ட ஆப்கன் அரசு கையறுநிலைக்குத் தள்ளப்பட்டது. தாலிபன்கள் தாக்குதலில் ஆப்கன் ராணுவத்தினர் பலர் சண்டையிட்டு உயிரிழந்தனர், பலர் மண்டியிட்டு சரணடைந்தனர். இதற்குமேல் தாமதித்தால், அன்று நஜிபுல்லாவுக்கு எற்பட்ட நிலைதான் இன்று தனக்கும் ஏற்படும் என்ற கருதிய ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி நாட்டைவிட்டே தப்பியோடினார். ஆப்கன் தலைநகர் எதிர்ப்பின்றி தாலிபன் வசம் வந்தது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர் தாலிபன்கள்.

அதன் பின்னர், ஆப்கன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பியோடியதும், விமானத்தின் இறக்கைகளில் பறந்து கீழே விழுந்து மாண்டதும், உயிர்பயத்தில் கண்ணீர்விட்டுக் கதறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. பல்வேறு நாடுகள் தூதரகங்களைக் காலிசெய்துவிட்டு ஓட்டமெடுத்தன. இத்தனைக்கும் காரணம் தாலிபன்கள்! தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றிவிட்டார்கள் என்பதுதான். இப்படியொரு பழைமைவாதிகளிடம் சிக்கிக்கொண்டு ஆப்கன் மக்கள் எப்படி வாழப்போகிறார்கள்... அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என உலக மக்கள் வேதனைப்படுகிறார்கள். ஆனால், அத்தனை கொடுமைவாய்ந்த பழைமைவாதிகளை ஊட்டி வளர்த்தவர்கள் யார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் புதைந்து கிடக்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கன் மக்களை அமெரிக்கா கைவிட்டதற்குக் காரணம் இயலாமையா, லாப அரசியலா?

போர் என்று சொல்லி, ஆப்கனில் கால்வைத்த ரஷ்யா, பிரிட்டன் போன்ற எல்லா நாடுகளும் அவமானத்துடன்தான் வெளியேறியிருக்கின்ற்ன. அதுதான் வரலாறு. அமெரிக்கா சற்று முந்திக்கொண்டது. தோல்வியைச் சமாதானமாக்கிக்கொண்டது. 20 ஆண்டுகள் முழுமையாக நிலைகொண்டும், தாலிபன்களையும், அல் கொய்தாவையும் அதனால் அடியோடு அழிக்க முடியவில்லை. இனியும் ராணுவ உயிர்ச்சேதம், பெரும் பொருள் சேதங்களையெல்லாம் தாக்குப்பிடிக்கும் சக்தியில்லை. தான் இன்னமும் கால்பதித்திருக்கும் மற்ற வளைகுடா நாடுகளைப்போல, ஆப்கானிஸ்தானில் எடுப்பதற்கு எண்ணெய் வளமெல்லாம் இல்லை. அரபிக்கடலில் ஆதிக்கம் செலுத்த ஆப்கனில் கடற்கரையும் இல்லை. அங்கு விவசாயம்தான் பிரதான தொழில்.

வளைகுடா நாடுகள்
வளைகுடா நாடுகள்

அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆப்கன் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள ஓர் இடம் மட்டுமே. அதற்கு அமெரிக்காவிடம் சவுதி அரேபியா, அரபு அமீரகம்,இராக் என எண்ணெய்வளமும், பூலோக முக்கியத்துவமும் வாய்ந்த பல வளைகுநாடுகள் கைவசம் இருக்கின்றன. இனி ஆப்கனில் இருப்பதில் எந்த லாபமும் இல்லை, மாறாக இழப்புதான் மிஞ்சும்! தாலிபன்களிடம் போரிட்டு வெற்றிகொள்வது இப்போது சாத்தியமல்ல, சமாதானம் செய்து பின்வாங்குவதுதான் சாதுர்யம் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது. ஆக, ஆப்கன் மக்களை அமெரிக்கா கைவிட்டதற்குக் காரணத்தில் இயலாமை, லாப அரசியல் இரண்டுமே இருக்கின்றன என்பதுதான் இதன் மூலம் வெளிப்படுகிறது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

(மேலும், ஆப்கனில் இப்போது ரஷ்ய ஆதிக்கம் இல்லை, அமெரிக்கா Vs ரஷ்யா என்ற போட்டி இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலே முடிந்துவிட்டது. இருபத்தோறாம் நூற்றாண்டான இன்று ஆமெரிக்கா Vs சீனாதான்! இப்போது தாலிபன் ஆட்சியை முதல் ஆளாக ஆதரித்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி வைத்திருக்கிறது சீனா. இனி அமெரிக்கா அமைதி காக்குமா, மீண்டும் என்ட்ரி கொடுக்குமா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும்.)

அமெரிக்கா என்ன சொல்கிறது..?

இந்தநிலையில்தான், அமெரிக்கா ஆப்கன் மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டது எனக் கூறுபவர்களுக்கு, பதிலடி தரும்விதமாகப் பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பழைய வரலாற்றை மூடிமறைக்கும்படி,``இன்னும் எத்தனை தலைமுறை அமெரிக்கப் பிள்ளைகளை ஆப்கன் உள்நாட்டுப் போருக்கு நாங்கள் அனுப்ப வேண்டும்?" என்று ஆதங்கப்படுகிறார்.

இத்தனை ஆண்டுக்காலம் தாலிபன்களிடம் சிக்கிக்கொண்டிருந்த, ஆப்கன் மக்களை அமெரிக்கா மீட்டதாகவும், `ஆப்கன் ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தால் அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை; ராணுவ வீரர்கள் எதிர்த்து சண்டையிடவில்லை; ஆப்கன் அதிபர் கோழைத்தனமாக தப்பியோடிவிட்டார்’ என விமர்சன வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் ஜோ பைடன்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம், காரணகர்த்தா யார் என்ற உண்மை, உரக்கக் கத்துவதால் மட்டும் மூடி மறைந்துபோய் விடாது. தாலிபன்கள் பிடித்திருக்கும் ஆயுதங்களில் யார் யாரின் கைரேகைகள் பதிந்திருக்கின்றன என்பதை வரலாறு வட்டமிட்டு காட்டிக்கொண்டுதான் இருக்கும்!

வெளியேறும் அமெரிக்க ராணுவத்தினர்
வெளியேறும் அமெரிக்க ராணுவத்தினர்

தாலிபன்கள் என்ன சொல்கிறார்கள்...

தாலிபன்கள், ``இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் இல்லை; கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் பெண்களை அனுமதிப்போம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டோம். அரசு ஊழியர்கள் இனி வழக்கம்போல் பணிக்குத் திரும்பலாம். எங்கள் மண்ணிலிருந்து இனி எந்த நாட்டுக்கும் ஆபத்து ஏற்படாது. அமைதியாக ஆட்சி செய்ய விரும்புகிறோம். உலக சமுதாயம் எங்களை நம்ப வேண்டும்!" எனச் செய்தியாளர் சந்திப்பில் உறுதியளித்துள்ளனர்.

உலகம் என்ன சொல்கிறது..?

ஆனால், பழைமைவாதம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் என்பது சந்தேகம்தான். இதே மனநிலையில்தான் இன்று ஒட்டுமொத்த உலக சமுதாயமும் ஆப்கனை பதற்றத்தோடு உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு