Published:Updated:

`ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலா?!’ - மாணவர்களை எச்சரிக்கும் சீன அரசாங்கம்

சீன மாணவர்கள்
சீன மாணவர்கள் ( RT )

``சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஊடகம், ஆய்வு ஒன்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 2-ம் தேதி முதல் சுமார் 386 இனவெறித் தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.”

அமெரிக்காவில், ஜார்ஜ் ஃப்ளாட் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இனப் பாகுபாடுகள் பற்றிய விவாதங்களும் அதற்கு எதிரான போராட்டங்களும் அதிக அளவில் எழுந்துள்ளது. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, இந்த விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இனத்தின் அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடைபெறுகிறதா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்
மாதிரிப்படம்

கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிவருவதால், இதுதொடர்பாக இனப்பாகுபாடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம். எனவே, மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என சீனாவின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ``தங்களது படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிச் செல்வது குறித்து ஆராய வேண்டும்” என கல்வி அமைச்சகமும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 10 சதவிகிதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் கட்டணமாக ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் டாலர்கள் வரை மாணவர்கள் செலுத்துகிறார்கள்.

`டிசம்பர் 27-ல் தகவல்; ஜனவரி 20-ல் அறிவிப்பு ’ - கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைச்சர் சைமன் பர்மிங்காம், எங்களது நாட்டில் இனவெறியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், ``ஆஸ்திரேலியாவில் இனவெறிக்கு எதிரான சம்பவங்கள் நடக்கவில்லை என்று நான் குறிப்பிட மாட்டேன். ஆனால், என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, பாதுகாப்பற்ற இடமாக எங்களது நாடு இருக்கும் என்று கூறுவதில் உண்மை இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பரவியது தொடர்பாக, சீனாவின் மீது சர்வதேச விசாரணையைத் தொடர வேண்டும் என ஆஸ்திரேலியா கூறியதை அடுத்து, சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. சீன அரசு, ஆஸ்திரேலியா பார்லி அரசியைத் தங்களது நாட்டில் இறக்குமதி செய்ய சுங்கவரியை விதித்துள்ளது. மாட்டிறைச்சி இறக்குமதிக்கும் குறைந்த அளவில் தடையை விதித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னையுடன் இதை இணைக்கவில்லை என சீனா விளக்கம் அளித்துள்ளது. சீன அரசாங்கம் ஹாங்காங்கில் அமல்படுத்தவுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்தும் ஆஸ்திரேலியா தனது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எனவே, இதுதொடர்பான பிரச்னைகளும் இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே சென்றுகொண்டிருக்கிறது.

சீனா
சீனா
AP

சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஊடகம், ஆய்வு ஒன்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 2-ம் தேதி முதல் சுமார் 386 இனவெறி தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உடல்ரீதியான தாக்குதல்கள், எச்சில் உமிழ்தல் மற்றும் மிரட்டுதல் ஆகிய குற்றங்களை இனவெறியாளர்கள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையே உள்ள பிரச்னை என்று கூறி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இனவெறிப் பிரச்னை தொடர்பாகத் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு