Published:Updated:

`இங்கு வசதியில்லை.. சீனாவிலேயே இருங்கள்!’ -கலங்கும் மாணவர்கள்; கைவிரித்த பாகிஸ்தான் அரசு #corona

பாகிஸ்தான் மாணவர்கள்
பாகிஸ்தான் மாணவர்கள்

சீனாவின் வுகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் மாணவர்களைத் தாயகம் அழைத்து வரமுடியாது எனப் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் உள்ள இறைச்சிக் கடை சந்தையிலிருந்து தொற்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் மொத்த சீனாவும் நிலைகுலைந்து காணப்படுகிறது. போக்குவரத்து, தொழில்கள், கல்வி, வேலை, உணவு உள்பட மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பினால் சீனாவின் பொருளாதாரம் முன்பைவிட சற்று நலிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனா
சீனா

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்குத் தேவையான முறையான சிகிச்சை, மருத்துவ வசதி, மருத்துவர்கள் போன்றவற்றுக்கு அதிக அளவில் செலவு செய்து வருகிறது அந்நாட்டு அரசு. அங்கு நிலைமை இப்படியிருக்க, சீனாவில் இருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணியில் அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

`நேரத்துடனான போராட்டம்; சொன்ன தேதிக்கு முன்னரே முடிப்பு!' - தயாரானது சீனாவின் `ஃபைர் காட் மவுன்டைன்'

நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் என இரு நாள்களும் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுச் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களைக் காக்கச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், மீட்பு அறிகுறியே இல்லாமல் வுகானில் தவித்து வருகின்றனர் பாகிஸ்தான் மாணவர்கள்.

பாகிஸ்தான் மாணவர்கள்
பாகிஸ்தான் மாணவர்கள்

`உணவு மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் ஒரே இடத்தில் அடைந்துள்ளோம். எங்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸ் செய்தி வெளியாகி 10 நாள்கள் ஆகியும் இதுவரை எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என வுகான் நகரில் இருக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

`செர்னோபில் ஹீரோக்கள்; தற்கொலைப் படை!’ - உயிரைப் பணயம் வைக்கும் சீன மருத்துவர்களின் பயணம் #corona

இந்நிலையில் சீனாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் மற்றும் மாணவர்களை தற்போதைக்கு மீட்க முடியாது எனக் கைவிரித்துள்ளார் சீனாவின் பாகிஸ்தான் தூதர் நக்மனா ஹஷ்மி. ``சீனாவில் அதிக அளவிலான பாகிஸ்தானியர்கள் உள்ளனர். அதனால் அவர்களை மீட்பது எளிதான விஷயம் இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது உருவாகியுள்ள புதிய கொரோனா வைரஸுக்குத் தேவையான சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் பாகிஸ்தானில் இல்லை. எனவே, பாகிஸ்தான் மக்களும் மாணவர்களும் சீனாவிலேயே இருப்பது நல்லது.

நக்மனா ஹஷ்மி
நக்மனா ஹஷ்மி

பாகிஸ்தான் தூதரகமும் சீன அரசாங்கமும் இணைந்து சீனாவில் இருக்கும் பாகிஸ்தான் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதைப் பாகிஸ்தான் மக்களுக்கு நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வுகான் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு செல்ல யாருக்கும் அனுமதியில்லை. அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் அங்கிருக்கும் பாகிஸ்தான் மக்களை மீட்டு தாயகம் அனுப்புவதே எங்கள் முதல் வேலையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பின் செல்ல