பெண்களின் உரிமைகளை அடியோடு அழித்து, அவர்களின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களின் பெரும்பாலான விதிகளும் சட்டங்களும் பெண்களையும், சிறுமிகளையும் மையப்படுத்தி, அவர்களை முடக்குவதாகவே அமைந்துள்ளன. அந்த வகையில் அந்த நாட்டின் `பொது விவகாரங்கள் மற்றும் தாலிபன் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம்’ ஒரு புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது.

அதில், `ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் மருத்துவர்கள் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடாது. இதை ஒவ்வொரு மருத்துவமனையும் கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கான கல்வி இல்லை எனில், பெண் மருத்துவர்களும் இனி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நடவடிக்கை உலக நாடுகள் முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது.
பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில், `தாலிபன்கள் கூடிய விரைவில் பள்ளிகளைத் திறக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான மரியாதையை அழிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை விரைவாக மாற்றவும் வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

என்னதான் எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தங்களின் அடக்குமுறைகளைப் பெண்கள் மீது கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கின்றனர்.