Published:Updated:

`எம்.பி-க்குப் பதிலாக தேர்வெழுதிய இளம்பெண்!’ - வங்கதேசத்தையும் விட்டு வைக்காத ஆள்மாறாட்டம்

சமீபத்தில் நரசிங்கிடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக எழுத்துத்தேர்வில் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.

தமன்னா நஸ்ரத்
தமன்னா நஸ்ரத்

இந்தியாவில் நீட் தேர்வில் நடைபெறும் ஆள் மாறாட்டம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், வங்கதேச நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல்கலைக்கழகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தில் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் தமன்னா நஸ்ரத். இவரின் கணவர் லோக்மான் ஹுசேய்ன் தாகாஸ், நரசிங்கிடி மாவட்டத்தின் மேயராக இருந்து, 2011-ம் ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்.

தமன்னா நஸ்ரத்
தமன்னா நஸ்ரத்

தமன்னா வங்கதேச திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், பி.ஏ இளநிலை படிப்புக்கு தன்னைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நரசிங்கிடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக எழுத்துத்தேர்வில் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேட்டை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும், இதுவரை நான்கு பருவங்களாக, 13 தேர்வுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இவற்றில் ஒன்றுகூட தமன்னா வந்து எழுதவில்லை, அனைத்துமே ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதுதான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகையில், ``தமன்னா குற்றம் செய்தவர் என்பதால், அவரின் பல்கலைக்கழகப்பதிவை ரத்து செய்துள்ளோம். அவர் மறுபடியும் பல்கலைக்கழகத்தில் சேர முடியாது. தேர்வு எழுத முடியாது. தமன்னா மீதும், ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீதும், இதை அனுமதித்த அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்

தமன்னா நஸ்ரத்
தமன்னா நஸ்ரத்
Twitter

வங்கதேச திறந்த நிலை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை எம்.பி-யின் அடியாட்கள் பாதுகாப்பார்கள். ஆள்மாறாட்டம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எதிர்க்க யாரும் முன்வரவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து தமன்னா நஸ்ரத் எந்தக் கருத்தையும் கூற முன்வரவில்லை. ஆள்மாறாட்டம், கேள்வித்தாள் கசிவது என தேர்வில் முறைகேடுகள் நடப்பது தற்போது வங்கதேசத்தில் பரவலாக உள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் அவ்வப்போது ரத்து செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.