Published:Updated:

இலங்கையில், தமிழர்களுக்காக வாதாடிவந்த வழக்கறிஞருக்குத் தடை... ராணுவத்தின் தலையீடா?

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக ராணுவத்தினர் விசாரிக்கப்படுகிற வழக்குகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஆஜராகிவந்த வழக்கறிஞர் குருபரனுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் குருபரன்
வழக்கறிஞர் குருபரன்

இலங்கையில் காணாமல் போனவர்களின் பரிதாபகரமான நிலை பற்றி கடந்த செப்டம்பர் மாதம், ஜூனியர் விகடன் பதிவு செய்திருந்தது. போர் முடிந்து பத்தாண்டுகள் கழித்தும் இன்னும் முடியாமல் இருந்து வருகிறது ஈழத்தின் துயரம். அவர்களின் சட்டப்போராட்டமும் நீதி கிடைக்காமல் தொய்வுடனே இருந்து வருகிறது.

ஜூனியர் விகடன் செய்தி
ஜூனியர் விகடன் செய்தி
10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

1996-ம் ஆண்டு இலங்கையின் நாவற்குழியில் செயல்பட்டு வந்த படைமுகாமிற்கு துமிந்த கெப்பிட்டிவெலான என்பவர் படைத்தளபதியாக இருந்து வந்தார். அப்போது வலுக்கட்டாயமாக 24 இளைஞர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டனர். அதற்குப் பின்னர் அவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. காணாமல்போன பல்லாயிரம் பேரில் இவர்களும் இணைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை முழுவதும் அரங்கேறியுள்ளன.

காணாமல் போனவர்களை மீட்டுத்தர வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தொடுத்திருந்தனர். அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முதல் எதிர்மனுதாரராக நாவற்குழி படைத்தளபதி துமிந்த கெப்பிட்டிவெலான, 2-ம் எதிர்மனுதாரராக இலங்கை ராணுவத் தளபதி மற்றும் 3-ம் எதிர்மனுதாரராக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். துமிந்த கெப்பிட்டிவெலான நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அரசு வழக்கறிஞர் மூலம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளார்.

துமிந்த கெப்பிட்டிவெலான
துமிந்த கெப்பிட்டிவெலான
Netrigun

இதில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்காக வாதாடிவருபவர் வழக்கறிஞர், கலாநிதி குமாரவடிவேல் குருபரன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதிமன்றத்தின் மூலம் பொதுநல வழக்குகளை தொடர்ந்து வாதாடி வருகிறார். மேலும் குருபரன் யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவராகவும் இருந்துவருகிறார். இவர் ஆஜராகி வருகிற வழக்குகளின் விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது. தற்போது குருபரன் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட இலங்கை பல்கலைக்கழக மானியக்குழு தடைவிதித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் இலங்கை ராணுவத்தின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை ராணுவத் தலைமையகத்திலிருந்து இலங்கைப் பல்கலைக்கழக மானியக்குழுவுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ``யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவராக உள்ள குருபரன் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அனுமதியுண்டா எனக் கேள்வி எழுப்பி, ராணுவத்துக்கு எதிரான வழக்குகளில் வாதிடுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ.ஜி.சி
யூ.ஜி.சி

பல்கலைக்கழக மானியக்குழுவால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அக்கடிதம் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. அதற்குப் ``பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு குருபரன் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது" எனப் பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதங்களை வைத்து மேற்கொண்டு பரிசீலித்த பல்கலைக்கழக மானியக்குழு, குருபரன் நீதிமன்றங்களில் வாதிட தடைவிதிக்க முடிவெடுத்திருப்பதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருக்கிறது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதம் குருபரனிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான செய்திகள் தற்பொது ஊடகங்களில் கசியத் தொடங்கி இருக்கின்றன.

வழக்கறிஞர் குருபரன்
வழக்கறிஞர் குருபரன்
`தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!'- இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்‌சே

இதுபற்றி கருத்து கேட்க குருபரனை தொடர்புகொண்ட போது அவருடைய இணைப்பைப் பெற முடியவில்லை. குருபரனுக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், இந்தச் செய்தி உண்மை என்பதை குருபரன் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை எதிர்த்து குருபரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் ``ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் போர்க்குற்றத்திற்காக இலங்கையில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவது அரிதிலும் அரிது. அத்தகைய சொற்ப வழக்குகளில் இதுவும் ஒன்று. இலங்கை நீதியமைப்புக்கு உட்பட்டே ராணுவத்தை விசாரணைக் கூண்டில் குருபரன் ஏற்றியது, அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காகத்தான் தற்போது குறிவைக்கப்படுகிறார்" என்றனர்.