Published:Updated:

`சீர்த்திருத்தங்களைச் செய்யத் தவறிவிட்டது!’ -`WHO’வுடனான உறவைத் துண்டிப்பதாக அறிவித்த ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

சீனா குறித்து பேசிய ட்ரம்ப், `பல வருங்களாக சீனா, அமெரிக்காவின் தொழிமுறை ரகசியங்களை சட்டவிரோதமாகத் திருடி வந்துள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதலே சீனாவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் அதிபர் ட்ரம்ப். சீனாவின் வுகான் மாகாணத்தில் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், சீனாவின் ஆய்வகங்களிலிருந்து உலககுக்கு வந்ததாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் அனைத்துக் குற்றசாட்டுகளையும் சீனா மறுத்து வந்தது.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, கொரோனா பரவல் விஷயத்தில் அனைத்து நாடுகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். குறிப்பாக சீனா அமெரிக்கா இணைந்து கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸுடனான யுத்ததில் வெற்றிபெற வேண்டும் எனத் தெரிவித்தது. இதனால், அப்செட்டான ட்ரம்பின் பார்வை உலக சுகாதார அமைப்பு பக்கமும் திரும்பியது. உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதியுதவியை அமெரிக்கா வழங்கிய போதும், அந்த அமைப்பு சீனாவுடன் கரம் கோத்துள்ளதாகக் குறை சொன்னார் ட்ரம்ப்.

`உலக சுகாதார அமைப்பு கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. வைரஸ் விஷயத்தை உலக சுகாதார நிறுவனம் சரியாகக் கையாளத் தவறிவிட்டது’ எனக் கூறி உலக சுகாதார அமைப்புக்காக அமெரிக்கா வழங்கும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் ட்ரம்ப். உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காதான் அதிகப்படியான நிதியை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா மாதிரியான பேரிடர் காலத்தில் அமெரிக்கா நிதியை நிறுத்தியது பெரும் சர்ச்சையானது. என்றாலும் தனது முடிவில் உறுதியாக நின்றார் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அதன் பின்னர் உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் எழுதினார், ``சீனாவிடமிருந்து விலகி தனித்துச் செயல்படுவதை நிரூபிப்பது மட்டுமே உலக சுகாதார நிறுவனத்துக்கு இருக்கும் ஒரே வழி. இந்த நிறுவனத்தை எவ்வாறு சீர்த்திருத்துவது என்பது குறித்து எனது நிர்வாகம் உங்களுடன் ஏற்கெனவே விவாதங்களைத் தொடங்கிவிட்டது. ஆனால், நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும், தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க முடியாது. எனவே, அடுத்த 30 நாள்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் பெரிய முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்தவேண்டியிருக்கும்” என மிரட்டி இருந்தார்.

`30 நாள்களுக்குள் நிரூபிக்கத் தவறினால் முழு நிதியும் கட்’ - WHO-வுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

இப்படி, உலக சுகாதார அமைப்புக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த ட்ரம்ப், தற்போது அந்த அமைப்புடனான அனைத்து உறவுகளையும் நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ``வுகான் வைரஸ் தொடர்பான தகவல்களை சீனா மூடி மறைத்ததன் காரணமாக, இன்று உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவிஉள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை அது பலிகொள்ளக் காரணமாகிவிட்டது. உலக அளவில் மில்லியன் கணக்கிலான மக்களை அது பாதித்திருக்கிறது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் நிதி கொடுக்கும் சீனா, அந்த அமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா ஆண்டுக்கு 450 மில்லியன் டாலரை நிதியாக வழங்குகிறோம். உலக சுகாதார அமைப்பில் நாம் செய்யச் சொல்லிக் கேட்ட சீர்த்திருத்தங்களைச் செய்யத் தவறிய காரணத்தால், இன்றுமுதல் அமெரிக்கா அந்த அமைப்புடனான உறவைத் துண்டிக்கிறது” என்றார்.

தொடர்ந்து சீனா குறித்து பேசிய ட்ரம்ப், `பல வருங்களாக சீனா, அமெரிக்காவின் தொழிமுறை ரகசியங்களை சட்டவிரோதமாகத் திருடி வந்துள்ளது. அதனால், இனி நாட்டில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆராய்ச்சிகளைப் பாதுகாக்க வேண்டி, புதிய உத்தரவைப் பிறப்பிக்கிறேன். நமது பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதப்படும் சீன நபர்கள் இனி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கிறேன்’என்றார்.

அடுத்த கட்டுரைக்கு