Published:Updated:

பெண்களுக்குத் தடைகள் முதல் குண்டுவெடிப்புகள் வரை... ஆப்கனில் தாலிபன் ஆட்சி எப்படி?

ஆப்கானிஸ்தானில் வாழக்கூடிய 95 சதவிகித மக்களுக்குப் போதுமான உணவு இல்லை என ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் அமைப்பும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தாலிபன் தலைவர்கள் உறுதியளித்ததுபோல் அங்கு எந்தவிதமான அமைதியும் திரும்பவில்லை. தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. பஞ்சம், பட்டினி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சீர்கேடு என எல்லாவற்றிலும் ஆப்கன் அரசு கடும்நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இடர்பாடுகளுக்கும் மத்தில் தாலிபன்களின் கடுமையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் மக்கள்மீது திணிக்கப்பட்டுதான்வருகின்றன.

தாலிபன்
தாலிபன்

ஆப்கனைவிட்டு அமெரிக்கப்ப டைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கும் தாலிபன்களுக்கும் இடையேயான போர் இறுதிப்போராக தீவிரமடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முழு ஆப்கானிஸ்தானும் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதிர்ச்சியடைந்த மக்கள் கொத்துக் கொத்தாக அண்டைநாடுகளின் எல்லைநோக்கியும், வெளிநாட்டு விமான இறக்கைகளில் தொங்கிபடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடினர். தாலிபன்களுக்கு அடிபணியாமல் கடைசிவரை போராடிய பஞ்ச்ஷிர் படையும் வீழ்ந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் தாலிபன்களின் `இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தானின்' அதிபர், அமைச்சர்கள், மதத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

`ஷரியத் சட்டத்தின்படி எங்கள் ஆட்சி இருக்கும். எங்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவோம். கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் பெண்களை அனுமதிப்போம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். மக்களின் வாழ்வை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்!" எனச் சூளூரைத்தார்கள்.

 தாலிபன்கள்
தாலிபன்கள்

ஆனால் அவர்கள் சொன்னதுபோல் அங்கு எந்த அமைதியும் எட்டப்படவில்லை. மாறாக நாட்டு மக்களின் மீது அடக்குமுறையும், தீவிரவாதமும், பஞ்சமும் பன்மடங்கு அதிகரித்தன. குறிப்பாக, தாலிபன்கள் அமைத்த ஆட்சியின் அமைச்சரவையில் பெண்களுக்கு எந்த இடமும் வழங்கவில்லை. மாறாக, ஹிஜாப் அணியாமலோ, ஆண்கள் துணை இல்லாமலோ பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் பெண்கள் இருபாலரும் படிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழக வகுப்புகளில் தீவிர கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டன. குறிப்பாக, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் வகுப்பறையில் திரைச் சீலைகளிட்டு இருபாலரும் பிரித்துவைக்கப்பட்டனர். தீவிர ஷரியத் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆப்கன் பெண்கள் போராட்டம்
ஆப்கன் பெண்கள் போராட்டம்
Twitter/@ZahraSRahimi

சட்டங்கள், கட்டுப்பாடுகள் கடுமையாகிக்கொண்டிருக்க, பெண்கள் மீதான தாலிபன்களின் அத்துமீறல்களும் நேரடியாக எல்லைமீறிச் சென்றன. பெண் அதிகாரிகள், நீதிபதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய பெண்கள் பலரும் குறிவைத்து தாக்கப்பட்டனர். பலர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். அதேபோல், வீடுவீடாக இளம்பெண்களும், சிறுமிகளும் தாலிபன்களால் தூக்கிச்செல்லப்பட்டனர். வலுக்கட்டாயமாக தாலிபன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்களின் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், அரசாங்கத்தில் புறக்கணிப்பு, பாகிஸ்தானின் தலையீடு என பல்வேறு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க அவர்கள்மீது தாலிபன்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். அவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கப்பட்டது, அவர்கள்மீது கண்ணீர்ப்புகைக்குண்டு வீசப்பட்டது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது. பெண்கள் மட்டுமல்லாமல், பொதுவெளியில் பாடல் கேட்டவர்கள் சுடப்பட்டனர். திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய 13 பேர் தாலிபன்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இறையாகினர். எல்லாத்துறைகளிலும் கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தாலிபன்களின் செயல்பாடுகளுக்கு ஐ.நா-வும், சில உலக நாடுகளும் வருத்தம் தெரிவித்திருக்கின்றன.

தாலிபன் - ஆப்கானிஸ்தான்
தாலிபன் - ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில், ஆப்கன் பெண்களின் சுதந்திரத்துக்கெதிராக மேலும் புதிதாக எட்டு கட்டுப்பாடுகளை தாலிபன்கள் விதித்திருக்கின்றனர். அதாவது, பெண்கள் நடிப்பில் வெளிவரும் தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்பக் கூடாது, பெண் நிருபர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் பேசும்போது கட்டாயம் தலை, முகத்தை மறைத்து ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாட்டுக் கலாசாரத்தைப் போற்றும் படங்கள், ஷரியத் கொள்கைக்கு எதிரான படங்களுக்கும் தடைவிதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

பெண்கள், பத்திரிகையாளர்கள் என மக்களுக்கெதிரான கொடுமைகள் அரங்கேறிக்கொண்டிருக்க, தீவிரவாதத் தாக்குதல்களும் ஆப்கனில் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், ஷியா பிரிவினர் வழிபடும் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களில், காபூல் விமான நிலையம், பேரோன் ஹோட்டல், குண்டூஸ் பகுதி என மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது போன்ற தொடர் தாக்குதல்களை தாலிபன்களுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

அதேபோல் இந்த நவம்பர் மாதமும், தலைநகர் காபூலிலுள்ள சர்தார் முகமது தாவுத்கான் ராணுவ மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழந்தனர். இது போன்ற தொடர்ச்சியான தீவிரவாதத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புச் சம்பவங்களால் ஆப்கன் மக்கள் தங்களின் உரிமை, உடைமையோடு சேர்த்து உயிரையும் கொடுத்துவருகின்றனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Wali Sabawoon

இதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானில் தீவிரமான உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வாழக்கூடிய 95 சதவிகித மக்களுக்குப் போதுமான உணவு இல்லை என ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், ஆப்கன் மக்கள் பலர் உணவுக்காகத் தங்களது உடைமைகளை விற்றும், தங்களின் குழந்தைகளை வேலைக்கு அனுப்பியும்வருகின்றனர். கொடுமையின் உச்சமாக சிலர் தங்களின் சொந்த மகளையே விற்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா-வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தாலிபன் கொடி
தாலிபன் கொடி

நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்துக்குச் சென்று, கடும் நிதி நெருக்கடியில் தாலிபன் அரசு தத்தளித்துவருகிறது. எத்தனை இழப்புகளை சந்தித்தாலும், தாலிபன்கள் தங்களின் கொடூர சட்டங்களை மட்டும் தளரவிடாமல் காப்பாற்றிவருகின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு