Published:Updated:

`அதிகார உடையில் உள்ள தீவிரவாதி!’ - அமெரிக்க அதிபரை விளாசிய இரான் அமைச்சர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகார உடையில் இருக்கும் ஒரு தீவிரவாதி என இரான் அமைச்சர் அஸாரி ஜோஹ்ரோமி குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு பக்கம் இரு நாட்டு வீரர்களும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தால், மறுபுறம் இரு நாட்டுத் தலைவர்களும் வார்த்தைகளால் போர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனால் இரான் மற்றும் இராக்கில் பதற்றம் நீடிக்கிறது.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

இரான் மற்றும் அமெரிக்கா இடையே சில ஆண்டுகளாகவே பிரச்னை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரான் ராணுவப்படை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் இரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

இரானின் சக்திவாய்ந்த தலைவர் கொலை செய்யப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்குத் தக்க பதிலடி தரப்படும் என இரான் மூத்த தலைவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இரான். இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அஸாரி ஜோஹ்ரோமி ட்வீட்
அஸாரி ஜோஹ்ரோமி ட்வீட்

``இரான் மற்றும் இராக்கில் உள்ள ஒரு அமெரிக்கர் அல்லது அமெரிக்காவின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டால் அதற்கு ஈடாக 52 இரானிய இடங்கள் குறிவைக்கப்படும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கு இரான் நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இரான் நாட்டு அமைச்சர் அஸாரி ஜோஹ்ரோமி, ``ஐ.எஸ். ஐ.எஸ், ஹிட்லர், மங்கோலிய அரசர் செங்கிஸ் கான் ஆகியோர் கலாசாரங்களை வெறுத்தனர். அதிகார உடையில் இருக்கும் தீவிரவாதி அதிபர் ட்ரம்ப். பெரிய இரானிய தேசத்தையும் கலாசாரத்தையும் யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற வரலாற்றை மிக விரைவில் அவர் கற்றுக்கொள்வார்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஸாரி ஜோஹ்ரோமி
அஸாரி ஜோஹ்ரோமி

இதையடுத்து, நேற்று மீண்டும் கருத்து பதிவிட்டிருந்த ட்ரம்ப், ``அமெரிக்கா, ராணுவ உபகரணங்களுக்காக 2 ட்ரில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகிலேயே நாங்கள்தான் மிகப் பெரிய மற்றும் சிறந்த ராணுவப்படையைக் கொண்டுள்ளோம். அமெரிக்கப் படையை இரான் தாக்கினால் அல்லது ஒரு அமெரிக்கர் இறந்தாலும் நாங்கள் தயக்கமின்றி புத்தம் புதிய ரக அழகான ராணுவ கருவிகளை அனுப்பிவைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.