Published:Updated:

இலங்கையில் மக்கள் கிளர்ச்சி... ஓடி ஒளிகிறாரா அதிபர் கோத்தபய ராஜபக்சே?!

கோத்தபய ராஜபக்‌சே

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு போன்ற பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் கொந்தளிப்பில் இருக்கும் இலங்கை மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

இலங்கையில் மக்கள் கிளர்ச்சி... ஓடி ஒளிகிறாரா அதிபர் கோத்தபய ராஜபக்சே?!

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு போன்ற பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் கொந்தளிப்பில் இருக்கும் இலங்கை மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

Published:Updated:
கோத்தபய ராஜபக்‌சே

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சந்தித்துவருகிறது. உணவு, அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளை சரியாகக் கையாளாத இலங்கை அரசைக் கண்டித்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் உச்சமாக, தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை கடந்த மார்ச் 31-ம் தேதி இரவு மக்கள் முற்றுகையிட்டனர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உட்பட சுமார் 5,000 பேர், ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுறுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோத்தபய ராஜபக்சே மட்டுமின்றி, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இலங்கை ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே அந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார். இளைய சகோதரரான பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருக்கிறார். மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே வேளாண் அமைச்சராகவும், மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள்.

இலங்கை
இலங்கை

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஐந்து காவலர்கள் காயமடைந்ததாகவும், ஒரு ஜீப்பும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் டீசல் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. பெட்ரோல் நிலையங்கள் எதிலுமே டீசல் கிடைக்கவில்லை. அதனால், இலங்கையில் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. அந்த நாட்டின் பஸ் போக்குவரத்தில், மூன்றில் இரண்டு பங்கு தனியார் பஸ்கள். டீசல் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை.

இலங்கையில் மார்ச் 31-ம் தேதி 12 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், 12 மணி நேர மின்வெட்டு என்பது இருந்ததே இல்லை. தற்போது, ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு டீசல் இல்லாத காரணத்தால் மின்வெட்டு ஏற்பட்டது. சாலைகளில் உள்ள மின் விளக்குகள்கூட எரியவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சாரத்தை மிச்சப்படுத்த தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன என்று ஓர் அமைச்சர் கூறியதாகவும் செய்தி வெளியானது.

ராஜபக்ச சகோதரர்கள்
ராஜபக்ச சகோதரர்கள்

பல இடங்களில் மருந்துகள் பற்றாக்குறையால் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறவில்லை என்றும், அரசு மருத்துவமனைகளில் மின்தடையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் விநியோகம் தடை காரணமாக, செல்போன் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் செல்போன் கோபுரங்களை இயக்குவதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. செல்போன் தொலைத்தொடர்பு விநியோக சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்தின் முன்பாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டடம் நடைபெற்றபோது, வீட்டில் கோத்தபய ராஜபக்ச இல்லை என்று செய்திகள் கூறுகின்றன.

இலங்கை
இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் பல்வேறு காரணங்களால் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்நிய செலாவணி வரத்து குறைந்துவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் அமெரிக்க டாலர்களைக் காண முடியவில்லை. இலங்கையின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. சரிந்துள்ள பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த அரசு என்ன செய்யப்போகிறது என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கேள்வியாக இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு, சாத்தியமுள்ள கடன் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றிரவு (ஏப்ரல் 1-ம் தேதி) அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதிபர் இல்லத்தின் வாசல் வரை வந்துவிட்ட மக்கள், தங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எத்தனை நாளைக்கு நாட்டின் அதிபரால் ஓடி ஒளிய முடியும்?