Published:Updated:

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள்! - அத்தியாவசியப் பொருள்களுடன் களம் இறங்கிய இந்தியத் தூதரகம்

ஈரான்
ஈரான்

ஈரானில் சிக்கியுள்ள தமிழகம், கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இத்தாலியும் மூன்றாவதாக ஈரானும் உள்ளது. கொரோனா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவி அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான்
ஈரான்

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 206 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய நகரங்களில் தலா ஒருவர் என இதுவரை ஐந்து பேர் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியிலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக சீனாவில் சிக்கிய பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இந்திய மக்கள் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து ஈரானில் சிக்கிய 389 இந்தியர்கள் ஐந்து கட்டங்களாக விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இப்படி அனைத்து நாடுகளிலிருந்தும் இதுவரை 1,444 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஈரானின் பல்வேறு தீவுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் எனப் பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஈரானில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு பல்வேறு நகரங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தாங்கள் உணவு இல்லாமல் தவிப்பதாகவும் உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என்றும் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் தொடர்ந்து வீடியோ மூலம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மீனவர்களை மீட்பதில் கடும் சவால் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரானின் பண்டார் அப்பாஸ் நகரங்களில் (Bandar Abbas) உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஈரானின் தெற்கு மாகாணங்களான புஷேர் மற்றும் ஹார்மோஸ்கானில் சிக்கியுள்ள தமிழ்நாடு, குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இந்திய மீனவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு