Published:Updated:

போரிஸ் ஜான்சனின் `இந்தியப் பாசம்' - இங்கிலாந்து அமைச்சரவையில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்!

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் ( twitter )

`இந்தியப் பாச'த்தின் அடிப்படையிலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் கூறிவருகின்றன.

ஐரோப்பிய கூட்டமைப்பிலி-ந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாததால், தெரசா மே இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெறும் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் அவரது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்க்கொள்வது என அனைத்து முக்கிய விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கக்கூடிய பொறுப்பு உள்துறை அமைச்சருக்கு உண்டு.

ப்ரீத்தி படேல்
ப்ரீத்தி படேல்
twitter

அப்படிப்பட்ட பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் தேர்வாகியுள்ளார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர் ப்ரீத்தி. இவரின் பெற்றோர்கள், பணி நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேறி, பிற்காலத்தில் அங்கேயே செட்டில் ஆகினர். 47 வயதான ப்ரீத்தி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். இதற்கு முன் கேமரூன் அமைச்சரவையிலும், தெரசா மே அமைச்சரவையிலும் ப்ரீத்தி அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. தெரசா மே அமைச்சரவையில் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றிய பிரீத்தி, ஒருசில அரசியல் அழுத்தங்கள் காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தும் மீண்டும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதற்குக் காரணம், போரிஸ் ஜான்சனின் தலைமைப் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததே. இவருக்கு அடுத்தபடியாக கேமரூன், தெரசா மே அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த அலோக் சர்மா தற்போது கேபினட் அந்தஸ்துடன்கூடிய சர்வதேச (வெளிவிவகார) மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆக்ரா பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர். இங்கிலாந்து அரசியலில் கோலோச்சிவரும் இந்திய வம்சாவளியினரில், பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர். சி.ஏ முடித்து வங்கிப்பணிகளில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்து வெற்றிகண்டார். இவரும் ப்ரீத்தி படேலைப் போல 2010 -ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

அலோக் சர்மா
அலோக் சர்மா
twitter

மூன்றாவது நபர், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டவர்தான் இந்த ரிஷி சுனக். தன் மாமனாரைப் போல் பிசினஸ்மேனாக அறியப்பட்டாலும் இங்கிலாந்தின் முக்கிய கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிவந்தார். அதன்பயனாக, வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்ட் பகுதி மிகப்பெரிய கிராமங்கள் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக அக்கட்சியின் எம்.பி-யாகச் செயல்பட்டவர், இதற்கு முன்  வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை இணை அமைச்சக இருந்தார். தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செயலாளர் பதவி என்றாலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. எந்த முறையும் இல்லாத வகையில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில்தான் இந்திய வம்சாவளியினர் மூவர் கேபினெட் அந்தஸ்துடன் இடம்பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
twitter

இதற்குக் காரணம் போரிஸ் ஜான்சனின், `இந்தியப் பாசம்' தான் என்கிறார்கள். போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரினா வீலர் என்பவரை மணந்து, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இருந்தாலும் அப்போதிருந்து இப்போது வரை தன்னை இந்திய மருமகன் எனக் கூறிக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த `இந்தியப் பாச'த்தின் அடிப்படையிலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு