Published:Updated:

"ட்ரம்பால் நிச்சயம் அதிபராக முடியாது!"- ஓர் அதிபர், ஓர் உலகம்... ஒரேயொரு ட்ரம்ப்! பகுதி 3

Donald Trump
Donald Trump ( AP / Alex Brandon )

ட்ரம்ப் தனது பாலிசியின் சாரமாகத் தேசியத்தையே வைத்திருந்தார். ஒபாமா அரசிற்கு எதிரான உத்தியாகவும், அதேநேரத்தில் பாப்புலிச எதிர்ப்பு பிரசாரத்திற்கான அறுவடையாகத் தேசியம் சிறந்த கருவியாக அமைந்தது.

குடியரசு கட்சி ஜூன் 16, 2015 அன்று தனது அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பை அறிவித்தது. பறக்கும் பறவைகளும், கடல் அலைகளும் ஒரு நிமிடம் நின்றது போன்ற ஆச்சர்யம் மொத்த அமெரிக்காவுக்கும்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற 'பழைமைவாத செயல்பாட்டு மாநாட்டில்' தனது பேச்சின் மூலம் முக்கிய கவனம் பெற்றார் ட்ரம்ப். டீ பார்ட்டி இயக்கம் உள்படப் பல இயக்கங்களில் தனது பாலிசியை முன்வைத்தார். 'USA Today' பத்திரிகை மற்றும் 'Gallup' என்ற அரசியல் அனாலிடிக்கள் நிறுவனம் இணைந்து வெளியிட்ட '2011ம் ஆண்டின் பாராட்டத்தக்க 10 ஆண் மற்றும் பெண்கள்' பட்டியலில் ட்ரம்ப்பும் குறிப்பிடப்பட்டார். இருந்தும் 2012-க்கான அதிபர் தேர்வில் ட்ரம்ப்பால் இடம்பெற முடியவில்லை. ஆனால், 2016ல் 16 போட்டியாளர்கள் வரை குடியரசு கட்சியில் கடும் போட்டியிலிருந்தபோது, அதுவரை எந்தப் பதவியிலும் இருந்திராத ட்ரம்ப்பின் தேர்வு என்பது பெரிய புதிராகவும் மர்மமாகவும் இருந்தது.

US President Donald Trump speaks during a campaign rally at Orlando Sanford International Airport
US President Donald Trump speaks during a campaign rally at Orlando Sanford International Airport
AP Photo/Evan Vucci

ட்ரம்ப் தனது பாலிசியின் சாரமாகத் தேசியத்தையே வைத்திருந்தார். ஒபாமா அரசிற்கு எதிரான உத்தியாகவும், அதேநேரத்தில் பாப்புலிச எதிர்ப்பு பிரசாரத்திற்கான அறுவடையாகத் தேசியம் சிறந்த கருவியாக அமைந்தது. எனவே, பிரசாரம் முழுக்க அதனைச் சுற்றியே பயணித்தது. ராணுவத்தைப் பெருக்குவது, வர்த்தகத்தில் பன்னாட்டு இறக்குமதிகளைக் குறைப்பது, இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, அமெரிக்கர்களை மையப்படுத்திய வேலை வாய்ப்பு, குறிப்பாக இடம்பெயர்தலைக் காட்டமாக எதிர்ப்பது போன்ற கொள்கைகளைத்தான் ஒரு சிறந்த தேசியவாதி என்ற அடையாளத்தின் கீழ் வழங்கினார்.

அமெரிக்க - மெக்சிகோ இடையிலான தடுப்புச் சுவர் திட்டம் ட்ரம்ப்பின் பிரதான அறிவிப்புகளில் ஒன்று. மேலும், அதிபர் ஒபாமாவின் குடியுரிமை குறித்துப் பல முறை கேள்வி எழுப்பும் அளவிற்கு ட்ரம்ப்பின் தேசிய சிந்தனை இருந்தது.

மறுபுறம் ஹிலாரியின் பிரசாரம் எதிர் விகிதத்தில் இருந்தது. வலதுசாரி அலையின் காரணமாக குடியரசு கட்சி சார்பாக பெரும் பணக்காரர் ட்ரம்ப் போட்டியிட முடிந்தது. ஆதலால், ஹிலாரியின் பிரசாரம் மத்தியத்தர மக்களைக் குறிவைத்து அமைந்தது. 'நம் நிலையை உணராத பில்லியனருக்கா உங்கள் வாக்கு?' என வினவினார் ஹிலாரி. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள் உரிமை சார்ந்து கரிசனம் காட்டினார். அமெரிக்க வரலாற்றிலேயே அதிபராகப் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன். ஆதலால், அவர் பிரசாரம் பெண் வாக்காளர்களின் மீது அதிகம் கவனம் செலுத்தியது. "இந்தக் காலத்திலும் சுயவிருப்பத்தோடு வாழும் பெண்களிடத்தில், கருக்கலைப்பு, விருப்பப் பாலுறவு போன்றவை கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கும் பழைமைவாதியையா தேர்ந்தெடுப்பீர்கள்?" என நடுநிலை வாக்காளர்களைக் கவர்ந்தார் ஹிலாரி.

Hillary clinton
Hillary clinton
Andrew Harnik

ஹிலாரியைவிட ட்ரம்ப் பிரசாரத்திற்கு அதிகப் பின்னடைவாக அமைந்தது அவரது வாய்தான். கட்டுப்பாடில்லாத பேச்சு, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மனநிலை போன்றவை ட்ரம்ப்பின் குறைகள். இதனால், பத்திரிகையாளர்களைக்கூட எளிதில் தாக்கிவிடுவதால் இன்றுவரை ட்ரம்ப்புக்கும் மீடியாவுக்கும் ஜென்ம பகை உள்ளது. தனது பிரசாரத்தின் முதல் நாளிலேயே மெக்சிகர்கள் அனைவரும் 'ரேப்பிஸ்ட்' என்றார். தொடர்ந்து, திருடர்கள், போதை வியாபாரிகள், குற்றம் புரிவதற்காகவே உள்ளவர்கள் என்று குறிப்பிட்ட மக்கள் மீது வன்மத்தைப் பொழிந்தார். இதனைக் குடியரசு கட்சியே சமாளிக்க முடியாமல் திணறியது. அப்படிப்பட்ட வாய் முகூர்த்தம் மொத்த பிரசாரத்திற்கு எதிராகவும் திரும்பியது.

2005-ம் ஆண்டு NBC தொலைக்காட்சியில் 'Access Hollywood' என்ற நிகழ்ச்சியில் பெண்களை பாலியல் சார்ந்து மிகவும் இழிவாகப் பேசியிருந்தார் ட்ரம்ப். அதை பிரசாரத்தின் நடுவே 'வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது. ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஒரு நாட்டின் அதிபராகக்கூடியவரின் மனநிலை பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்கிறதா என்பதுதான் ட்ரம்ப் மீதான சர்ச்சைக்குக் காரணம்.

இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கையில், ''அது ஓர் அறையில் நடந்த தனிப்பட்ட உரையாடல். அதுவும் பல வருடங்களுக்கு முன்பு பேசியது. பில் கிளிண்டனெல்லாம் இதைவிட மோசமாகப் பொதுவெளியில் பேசியுள்ளார். நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்'' என்று சரணடைந்தார்.

ஹிலாரி
ஹிலாரி

பிறகு, ''நான் என்றும் என்னை ஓர் முழுமையான நல்லவன் என்று சொன்னதில்லை. நான் தவறு செய்திருக்கிறேன், அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். நாளை நான் ஒரு சிறந்த அதிபராக இருந்து யாரையும் கைவிட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்'' என்று வீடியோ வெளியிட்டார். பதிலுக்கு, பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டினார். தான் ஆடியோவில் பேசிய பெண்ணை பத்திரிக்கையாளர்கள் முன் வரவைத்து சம்பவத்தை விளக்கினார். அதே நேரத்தில் ஹிலாரி பிரசாரத்தின் தலைவர் ஜான் போடெஸ்டாவின் (John Podesta) பிரசாரம் தொடர்பான தனிப்பட்ட இ-மெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். இந்த நிகழ்விற்குப் பிறகு ட்ரம்ப் பிரசாரத்திற்கான ஸ்பான்சர்கள் வெகுவாக குறைந்தனர்.

அமெரிக்க அதிபராவது எப்படி? ஓர் உலகம்... ஓர் அதிபர்... ஒரேயொரு ட்ரம்ப்! பகுதி 2

காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள் முதல் குடியரசு கட்சி தேசிய கமிட்டி வரை ட்ரம்ப்பின் தேர்வை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தனர். தற்போது அவருக்கு இரண்டு வாய்ப்புதான் இருந்தது. ஒன்று தேர்தலிலிருந்து விலகுவது அல்லது அமெரிக்க வரலாற்றிலேயே மோசமாகத் தோற்ற அதிபர் வேட்பாளர் என்றப் பெயரை வாங்குவது என்று சொந்த கட்சியே அவநம்பிக்கையானது. மொத்தத்தில் ட்ரம்ப்பால் நிச்சயம் அதிபராக முடியாது என நினைத்தார்கள். கட்சியினரின் பார்வையே இவ்வாறு இருக்கும்போது அமெரிக்க மக்களும், ஊடகங்களும் என்ன நினைத்தார்கள் எனத் தனியாக குறிப்பிட வேண்டியதில்லை.

ஆனால், ட்ரம்ப் எப்படி அதிபரானார், 2020 தேர்தலுக்கு என்னென்ன யுக்திகள் வைத்திருக்கிறார்? நாளை படிக்கலாம்!
அடுத்த கட்டுரைக்கு