Published:Updated:

ட்ரம்ப் அரசியலின் பிரச்னை என்ன? ஓர் அதிபர் - ஓர் உலகம் - ஒரேயொரு ட்ரம்ப்! - பகுதி 1

ட்ரம்ப்

ட்ரம்ப்பின் முக்கிய பிரச்னை அவரின் செயல்பாடுகள் யாவும் தன்முனைப்போடும், ஒன்றுக்கொன்று முரணாகவும் இருப்பதுதான். ட்விட்டரில் களமாடும் ட்ரம்ப்பின் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் விளக்கம் அளிப்பதே வெள்ளை மாளிகையின் முக்கிய வேலையாக இருக்கிறது.

ட்ரம்ப் அரசியலின் பிரச்னை என்ன? ஓர் அதிபர் - ஓர் உலகம் - ஒரேயொரு ட்ரம்ப்! - பகுதி 1

ட்ரம்ப்பின் முக்கிய பிரச்னை அவரின் செயல்பாடுகள் யாவும் தன்முனைப்போடும், ஒன்றுக்கொன்று முரணாகவும் இருப்பதுதான். ட்விட்டரில் களமாடும் ட்ரம்ப்பின் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் விளக்கம் அளிப்பதே வெள்ளை மாளிகையின் முக்கிய வேலையாக இருக்கிறது.

Published:Updated:
ட்ரம்ப்
2020 அமெரிக்க தேர்தல்தான் உலகின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கப்போகிறது என்பதால் அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே நவம்பர் 3-ம் தேதிக்காக பரபரப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'கிறுக்கன்' என கிண்டல் அடிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வென்று, நான்கு ஆண்டுகால ஆட்சியையையும் முடிக்க இருக்கிறார். அவர் அதிபராக பதவியேற்கும்போது என்ன பரபரப்பு இருந்ததோ, அதே பரபரப்பும், அதிரடி அரசியலும் இன்றும் தொடர்கிறது.

வைரலான குட்டி டொனால்ட் ட்ரம்ப்!
வைரலான குட்டி டொனால்ட் ட்ரம்ப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த நான்காண்டு அரசியலையும், உலக நாடுகளுடனான அவரின் உறவையும் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். யார் இந்த டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எப்போது அரசியலுக்கு வந்தார், அரசியலுக்கு வந்தவர் எப்படி அமெரிக்க அதிபர் ஆனார், அதிபராக என்னவெல்லாம் செய்தார், இரண்டாவது முறையாகவும் அவரே வெல்வார் என்கிற கணிப்புகள் உண்மையா, ட்ரம்ப் மீண்டும் வென்றால் என்னவெல்லாம் நடக்கும்?!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு மினி தொடர் இங்கே!

தன் மீதான பதவி நீக்கத் தீர்மானம், மாகாண கவர்னர்களுடன் மோதல், கொரோனா அச்சுறுத்தல் எனப் பல பிரச்னைகளுக்கு நடுவே அரசியல் செய்துகொண்டிருக்கிறார் ட்ரம்ப். அதே நேரத்தில், அவர் போடும் ட்விட்டர் தீர்மானங்கள், 'சீன வைரஸ்' என்ற முத்திரை பிரசாரங்கள், மருந்துப் பொருட்களுக்காக விடுத்த மிரட்டல்கள் என அனைத்தும் மொத்த உலகையும் கதிகலங்கவைக்கிறது. மொத்தத்தில் ட்ரம்ப் எது செய்தாலும் அது உலகளாவியதாகிறது.

'அமெரிக்காவை மீட்டுருவாக்குவோம்' என்று கூறி வென்றவர் ட்ரம்ப். அமெரிக்காவின் செயல்பாடுகள் அனைவராலும் கவனம் பெறுவது இயல்புதான் என்றாலும், ட்ரம்ப் அதை மேலும் நெருக்கமாக்கினார். அமெரிக்கா என்பது பரிசுத்த ஜனநாயக நாடு, யார் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவிற்குத் தாராளவாத நாடு, அனைவரும் செல்லத் துடிக்கும் கனவு நாடு என்ற பொது பிம்பம் ட்ரம்ப்பால் தகர்க்கப்பட்டது. பொருளாதார பாகுபாடு, இன மற்றும் கலாசார ஏற்றத்தாழ்வு, வெறுப்பு அரசியல், சிறுபான்மை ஒடுக்குமுறை என்று நமக்கு 'புதிய அமெரிக்காவை' அறிமுகப்படுத்தினார் ட்ரம்ப். இதுவரை மற்ற எந்த அதிபரைவிடவும் ட்ரம்ப் நெருக்கமாக உணரப்படக் காரணம், தற்போதைய புதிய உலக அரசியலின் திசைகாட்டியாக அவர் இருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

ட்ரம்ப் ஆட்சியை இரு முக்கிய கோணங்களில் கவனப்படுத்தலாம். ஒன்று அமெரிக்கத் தேசியவாதம், மற்றொன்று அதன் விளைவால் உருவாகிக்கொண்டிருக்கும் உலக அரசியல். 'நாம் அமெரிக்கர்கள்!' என்ற ரீதியில் தூய தேசிய சிந்தனையை உருவாக்கிய ட்ரம்ப் தனது பல திட்டங்களை இதன் சார்பில் நியாயப்படுத்தினார். குறிப்பிட்ட நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதித்தது, பாரிஸ் பருவநிலைமாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, குடியேறிகள் மீது கடுமை காட்டுவது என அனைத்திற்கும் அமெரிக்கா, அமெரிக்கர்கள் என்ற பதத்தைக் காரணம் காட்டினார். அதுவரை உலக அளவிலான திட்டங்களுக்கு தலைமை வகித்த அமெரிக்காவைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பசிபிக் நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பு, நேட்டோ போன்ற உலக அளவிலான திட்டங்களிலிருந்து விலக முயன்றார். பொதுவான நன்மையை விட அமெரிக்க நலனே முக்கியம் என்பது ட்ரம்பிஸத்தின் குறிக்கோள். இவையெல்லாம் ஒபாமா செயல்படுத்திய திட்டங்களின் மறுப்பு என்பதும் மறைமுக காரணம். அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு ஈரானோடு ஒபாமா போட்டுக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ட்ரம்ப். தற்போதைய அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு இது திரியாகவும் இருந்தது.

நியாயமான விலையில் மருத்துவ காப்பீடு என்று கடந்த 2010-ம் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒபாமா கேர்' திட்டத்தின் தீவிர எதிர்ப்பாளராக ட்ரம்ப் இருந்தார். மாறாக, 'அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' உருவாக்குவேன் என்றவர், இதுவரை எதையும் அமல்படுத்தவில்லை. மருத்துவத்தில் அரசின் சலுகை போன்ற பங்களிப்பை விரும்பாத ட்ரம்ப்பால், இன்று கொரோனாவிற்கு அதிக மக்களைப் பறிகொடுத்துள்ளது அமெரிக்கா.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

ட்ரம்ப்பின் முக்கிய பிரச்னை அவரின் செயல்பாடுகள் யாவும் தன்முனைப்போடும், ஒன்றுக்கொன்று முரணாகவும் இருப்பதுதான். ட்விட்டரில் களமாடும் ட்ரம்ப்பின் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் விளக்கம் அளிப்பதே வெள்ளை மாளிகையின் முக்கிய வேலையாக இருக்கிறது. குறிப்பாக, வெளியுறவுக் கொள்கைகளிலும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளைவிட தன் உள்ளுணர்வையே அதிகம் நம்பினார். அது வெளிப்படும்போது கலகமாக மாறியது. சமீபத்தில் கூட சர்வதேச போர் விதிகளை மறந்து, ஈரானின் வரலாற்றுச் சின்னங்களைத் தகர்ப்போம் என்று ட்வீட் செய்தார். பென்டகன் பதறிப்போய் இதனை மறுத்தது.

கடந்த ஆண்டு வட அமெரிக்கப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு வாட்டி வதைத்தபோது, 'புவிவெப்பமயமாதல் இப்போ எங்கே சென்றாய்' என்று கேலியாக ட்வீட் செய்தார். ட்வீட் எதிர்ப்பைப் பெற அதனை டெலிட் செய்தார். இதுபோல், ட்ரம்ப் நீக்கிய ட்வீட்களை பல ஆயிரம் பக்கங்கள்கொண்ட புத்தகங்களாகவே வெளியிடலாம்.
பாப்புலிச அரசியல்!
ஒபாமா ஆட்சிக்குப் பிறகு உருவான வலதுசாரி பாப்புலிச அரசியலில் வென்ற ட்ரம்ப், அதை வெளிப்படையாகக் கையாண்டார். வலதுசாரியமும், பழைமைவாதமும், எதிர்ப்பியக்கமும் என அமெரிக்க அரசியல் உலகளவில் தாக்கம் பெற்றது.

வெளிப்படைத்தன்மை கொண்ட ட்ரம்ப்பின் அரசியல் வெற்றி, பல உலகத்தலைவர்களுக்கு ஆதர்சமானது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனை விடுவிக்கும் பிரெக்சிட் ட்ரம்ப்பின் நேட்டோ வாதத்திற்கு பிறகு வெகு தீவிரமடைந்தது. விளைவாக, ட்ரம்ப்பை ஒத்த போரிஸ் ஜான்சனின் வெற்றிக்கு அதுவே ஆதாரமானது. குடியேறிகள் மீது ட்ரம்ப் உருவாக்கும் கடுமையான சட்டங்கள், மதச் சார்பிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை உருவாக்கும் வெளியை நரேந்திர மோடிக்கு கொடுத்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்
AP |J. Scott Applewhite

'பருவநிலை மாற்றம் என்பதே இல்லை' என்றார் ட்ரம்ப். ஆஸ்திரேலிய நாடே பற்றி எரிந்தபோது 'கடவுள் இருக்கிறார், காலநிலை மாற்றம் இல்லை' என்றார் ஆஸ்திரேலிய அதிபர் ஸ்காட் மாரிஸன். தன் நாட்டவர்களிடையே இனரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்துவதில் ட்ரம்ப்பின் தென்னமெரிக்க பிரதியாக உருவானார் பிரேசிலின் ஜேர் போல்சனேரோ. தொடர்ந்து, வலதுசாரிகள் வெல்வதற்கும், அவர்களின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும் அமெரிக்கப் பேரரசு வழிகாட்டியாக உள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகின் பொருளாதார மற்றும் அரசியல் திட்டங்களுக்குத் தலைமையேற்றது அமெரிக்கா. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியன் ஒற்றுமை, ஓரியன்டலிச அரசியல் எனப் பன்முக வெளியைத் தேடியது உலகம். இன்று, ட்ரம்ப் தேசிய அரசியலைக் கூர்மைப்படுத்தியுள்ளார்.

உலகமயமான பொருளாதார ஆதிக்கத்தை விரும்பும் அதே வேளையில், குடியேறிகள் வெறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பு, இனவாத பெருமை எனத் தேசியவாத வலதுசாரி அரசியல் உலகிற்கான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிரானவர்களை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்றும் சுலபமாக முத்திரை குத்திவிடலாம். பதவிக்கு எதிரான கோஷம் உருவானபோதும், ஈரானுடனான பதற்றத்தின் போதும் ட்ரம்ப்பின் மிகப்பெரிய ஆயுதமாகவும் அது இருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP
"உண்மையான அதிகாரம் என்பது, நான் 'பயம்' என்ற சொல்லை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பதுதான்!"
ட்ரம்ப்

போருக்கான துணிச்சலையும், இந்தாண்டிற்கான அமெரிக்கத் தேர்தலையும் எதிர்கொள்ளும் அத்தகைய தைரியத்தைக் கடந்த நான்கான்டின் அரசியல் அவருக்குக் கொடுத்திருக்கிறது.

தொழிலதிபரான ட்ரம்ப் எப்படி அரசியலுக்குள் வந்தார், அவர் அதிபரான பின்னணி என்ன? நாளை காலை விகடன் இணையதளத்தில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism