Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமுக்கு வந்த வெப்பப் பந்து | பகுதி - 16

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

தப்பியோடிய அகுனா, எங்கு ஓடுவது என்று தெரியாமல் முகாமுக்கு மிக அருகிலிருந்த `மெக் டொனல்ட்ஸ்’ உணவகத்தில் போய் நின்று பர்கர் வாங்கியிருக்கிறான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமுக்கு வந்த வெப்பப் பந்து | பகுதி - 16

தப்பியோடிய அகுனா, எங்கு ஓடுவது என்று தெரியாமல் முகாமுக்கு மிக அருகிலிருந்த `மெக் டொனல்ட்ஸ்’ உணவகத்தில் போய் நின்று பர்கர் வாங்கியிருக்கிறான்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

அகதி முகாமிலிருந்து வேலி பாய்ந்து கடந்துவிடுவது சுலபமென்றாலும், ஆஸ்திரேலியாவுக்குள் எந்த வீதியால் எங்கு ஓடுவது என்ற தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த சந்தியில்வைத்தே பொலீஸார் அமுக்கிவிடுவார்கள். ஏனெனில், மெல்போர்ன் அகதிகள் முகாமுக்கு மிக அருகிலேயே ஒரு பொலீஸ் நிலையமிருக்கிறது. தப்புவதற்கு முடிவெடுத்தவர்கள், வெளியில் நண்பர்களின் துணையோடு தப்பியோடினால், அவர்கள் காத்திருந்து கூட்டிக்கொண்டு ஓடுவார்கள். அப்படி ஓடுபவர்கள்கூட, அதிக காலம் ஒளிந்து வாழ்வது என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடினமானதுதான்.

ஐரோப்பிய நாடுகள் என்றால், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் கள்ளமாக நுழைந்து, ஆண்டுக்கணக்கில் அதிகாரத்தரப்பின் கண்களில் பட்டுவிடாமல், வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் என்னதான் செய்வது? சுற்றிவரக் கடல்.

இது புரியாமல், இடம் - வலம் தெரியாமல், மொக்குத்தனமாகத் தப்பியோடிய பல அகதிகள், இரண்டு மூன்று மணி நேரத்திலேயே பொலீஸாரிடம் பிடிபட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், மெல்போர்ன் முகாமுக்கு மிக அருகிலேயே ரயில் நிலையமொன்று உள்ளது.

தப்பியோடுபவர்கள் அந்த ரயிலில் ஏறி எங்காவது ஓடலாம் என்று அங்கு காத்திருக்கும்போதே பொலீஸார் சென்று அமுக்கிவிடுவார்கள்.

ஆக, இந்த தடவையும் பொலீஸார் சம்பிரதாயபூர்வமாக அகுனாவின் புகைப்படத்தோடு ரயில் நிலையத்துக்குத்தான் போவார்கள் என்று முகாம் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

அன்றைய தினம் எனக்கு வேலையிருக்கவில்லை என்ற காரணத்தால், இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பின்னர்தான் அறிந்துகொண்டேன்.

அகுனா தப்பியோடி இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அகதிகள் தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தாங்கள் ராதாவையும் குழந்தையையும் வழியனுப்பிவைக்கும் நேரம் பார்த்து, அப்பாவிபோல முகாமில் திரிந்த ஒருத்தன், மொத்த அதிகாரிகளுக்கும் விபூதி அடித்துவிட்டானே என்ற ஆச்சர்யம் எல்லோரது முகத்திலும் தெரிந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அடுத்து என்ன? முகாம் அதிகாரிகள் அனைவரையும் குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகள் அழைத்துப்போய் அம்மிக்கல்லில் போட்டு இஞ்சிபோல இடித்துத் தள்ளப்போகிறார்கள் என்று அகதிகள் தங்களுக்குள் பேசிச் சிரித்தார்கள்.

அடுத்த தடவை அகதிகள் யாராவது விடுதலையாகும்போது, தாங்களும் அகுனாவின் ஸ்டைலைப் பின்பற்றினால் என்ன என்பதுபோல, சில அகதிப் பெடியன்கள் சார்ளி கம்பவுண்டின் கிழக்குப் பக்க வேலியைப் போய் கண்களால் அளந்துகொண்டு நின்றார்கள். தங்களுக்குள்ளிருந்து ஒரு புரட்சியாளன் வெற்றிகரமாகப் பாய்ந்து ஓடிய வேலித்தடங்களைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்த அகதிகளை, அங்கு வந்த அதிகாரிகள் கலைத்தார்கள்.

``ம்… உங்கட வீரத்தை எங்களிடம் காட்டுங்கோ, அங்க ஒருத்தன் உங்கள் எல்லாருக்கும்வெச்சான் பாருங்க ஆப்பு. அப்ப எங்க போனது உங்கட வீரம்?”

அதிகாரிகளின் காதுபட அவர்களை அகதிகள் காறி உமிழ்ந்தார்கள்.

``உங்கட நாட்டுக்குள்ள கடலாலயும் கள்ளமாக வந்து, தரையாலயும் கள்ளமாக ஒருத்தன் ஓடிட்டான். உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா?”

பாதுகாப்பு அதிகாரியை இரான் கிழவி ஒருத்தி உடைந்த ஆங்கிலத்தில் நிறுத்திவைத்துக் கேட்டாள்.

அதிகாரிகளைக் கண்ட இடங்களிலெல்லாம் கூட்டமாக நின்று சில சிறுவர்கள் கூச்சலிட்டார்கள். கேலியாகச் சிரித்தார்கள்.

ஒரு பாதுகாப்பு அதிகாரி தனது தடித்த தோலை இறுகப் போர்த்துக்கொள்ளவேண்டிய தருணங்களாக, அந்த மாலை நேரம் முகாமின் ஒவ்வொரு மூலையிலும் நின்று மிரட்டியபடியிருந்தது.

முகாமின் ஒவ்வோர் அறையாகச் சென்ற அதிகாரிகள், அகதிகளின் படங்களுடன் ஒப்பிட்டு ஒவ்வொருவரையும் சோதனை செய்தார்கள். இன்னும் வேறு யாராவது தப்பியோடியிருக்கிறார்களா அல்லது ஒருத்தன் மட்டும்தானா என்று உறுதி செய்துகொண்டார்கள்.

குடிவரவுத்துறை அலுவலகத்தில் அவசர சந்திப்பு நடைபெற்றது. விசாரணைகள் ஆரம்பித்தன.

ஆஸ்திரேலியாவில் எந்த வதிவிட உரிமையும் இல்லாத ஒரு நபர், சட்டவிரோதமாக நுழைந்திருக்கிறார் என்றால், அந்தச் சம்பவம் தலைநகர் கன்பரா வரைக்கும் முறைப்பாடு செய்யப்படவேண்டிய முக்கியக் குற்றச்செயல். தப்பியோடிய நபரால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது தப்பியோடிய நபருக்கு ஏதாவது ஆபத்து இடம்பெற்றுவிட்டாலோ அதற்கு எப்படி, எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட பல சிக்கலான விடயங்களைக் கையாள்வது தலைநகர் கன்பராவில் உள்ள குடிவரவுத்துறையின் தலைமை அதிகாரிகளே.

அகுனா, நைஜீரியாவைச் சேர்ந்த அரசியல் போராளி. அங்கு அவன்மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலால், அவன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்தான் இந்தோனேசியா வந்து, அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தான் என்பது ஆஸ்திரேலியக் குடிவரவுத்துறையிடம், அகுனா பற்றிக் கையிருப்பிலுள்ள தகவல்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட, தொலைக்காட்சி நிகழ்ச்சியைக்கூடக் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தொடர்ச்சியாகப் பார்க்கமுடியாத,

உளச்சிக்கல் மிகுந்த அகுனா, எவ்வாறு முகாம் அதிகாரிகள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, வேலி பாய்ந்து ஓடினான்?

ஏன் ஓடினான், எங்கு ஓடினான் என்பது குறித்து குடிவரவுத்துறையினரால் ஆரூடம் கூற முடியவில்லை.

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டவர்களையெல்லாம் வலைபோட்டுப் பிடித்து, மணிக்கணக்காக விசாரணை நடத்தி, தகவல் கறப்பதற்குத் தெரிந்த ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் தரப்புக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட அகதி ஒருவனின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்து எதுவுமே தெரியாமலிருந்திருக்கிறது என்றால், அது எவ்வளவு ஏளனமான முரண்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

தங்களுக்கு இடையிலான உயர்மட்ட, இடைமட்ட, அடிமட்டச் சந்திப்புகளை நிறைவு செய்துகொண்டு, முகாமின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பை ஆரம்பித்தார்கள் குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகள்.

அகுனா கடைசியாக அணிந்திருந்த ஆடை முதற்கொண்டு, சாப்பிட்ட உணவு, பேசிய சக அகதிகள், உட்கொண்ட மருந்து, கடைசியாக எங்கு நின்றுகொண்டிருந்தான் என்று அவனது அத்தனை நடவடிக்கைகளையும் முகாம் அதிகாரிகளிடமிருந்து கறந்து, தனது கோப்புக்களில் சேகரித்துக்கொண்டது குடிவரவுத்துறை அமைச்சு.

தன்னிடம் மீதமிருந்த பழங்கள், விருந்தினர்கள் கொண்டுவந்து கொடுத்த புத்தகங்கள் போன்றவற்றை, முகாமிலுள்ளவர்களுக்கு அகுனா பகிர்ந்து கொடுத்திருக்கிறான். தாஸ்தவஸ்கி எழுதிய `மரண வீட்டுக் குறிப்புக்கள்’ நாவலைப் பல நாள்களாக தனது அறையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டிருக்கிறார்கள். அவன் தப்பியோடுவதற்கு முதல்நாள், அந்தப் புத்தகத்தை முகாம் நூலகத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறான்.

இரண்டு நாள்களுக்கு முன்னர், தனக்குப் புதிய சப்பாத்து வேண்டுமென்று அல்பா கம்பவுண்டில் பாதுகாப்புக்கு நின்ற அதிகாரி ஒருவரிடம் ஒழுங்கு செய்து தருமாறு கேட்டிருக்கிறான். அந்த அதிகாரியும் முகாமின் அகதிகளுக்கான களஞ்சியத்திலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

இரண்டு நாள்களாக சார்ளி கம்பவுண்டின் கிழக்கு வேலிப் பக்கமாகப் புதிய சப்பாத்தை அணிந்துகொண்டு, சாவகாசமாக நடந்து திரிந்திருக்கிறான்.

எல்லாத் தகவல்களையும் புள்ளிகளாக எழுதிக் கோர்த்துப் பார்த்தபோது,

அகுனாவின் திட்டம் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முகாமுக்குள் கச்சிதமாக முகிழ்ந்திருக்கிறது என்பது அதிகாரிகளுக்குப் புரியத் தொடங்கியது.

ஆஸ்திரேலிய அகதி முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு குடிவரவுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், முகாமிலிருந்து யாராவது அகதி தப்பியோடினால், பாதுபாப்பு நிறுவனமான `ரூடோ’இ குடிவரவுத்துறை அமைச்சுக்கு ஒரு லட்சம் டொலர்களுக்கு மேல் அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வளவுக்கு, முகாமிலிருக்கிற ஓர் அகதியின் இருப்புக்கும், அவனது பாதுகாப்புக்கும் மிகப்பெரிய பெறுமதியிருந்தது.

அன்றைய நாள் `ரூடோ’ நிறுவனம், வாயிலும் வயிற்றிலும் அடிக்காத குறையாகத் தனது அதிகாரிகளை அவசர அவசரமாக அழைத்து, இந்தச் சிக்கலில் தங்களது தலை உருளாமல் எவ்வாறு தப்பிக்கலாம் என்று திட்டங்கள் போட்டது.

அகுனாவின் மனநிலை குறித்து குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு எத்தனையோ தடவை எடுத்துக் கூறி, அவனை வைத்தியசாலையில் சேர்க்க வேண்டும் என எவ்வளவோ அறிக்கைகள் எழுதிக் கொடுத்தபோதும், அவனை முகாமில் தடுத்துவைக்கலாம் என்ற முடிவை குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகளே வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

மருத்துவரீதியில்கூட, அவனது மனநிலை சிகிச்சை குறித்துப் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவனை உரிய உளவள மேம்பாட்டு வைத்திய மையங்களில் சேர்ப்பித்து, குணமாக்குவதற்கு முகாம் மருத்துவர்களே யோசனை தெரிவித்தனர். அதற்கு குடிவரவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சம் இசைந்திருந்தனர். இறுதிக்கட்ட முடிவுகளை மேற்கொண்டு, அவனை வைத்தியசாலை ஒன்றுக்கு அனுப்புவதற்குப் பேச்சுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அதற்குள் அவன் வேலி பாய்ந்தது, அத்தனை அதிகாரத் தரப்புகளுக்கும் கன்னத்தில் அறைந்ததுபோலாகிவிட்டது.

முகாமில் இருள் சூழ்ந்து, அன்றைய தினம் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு மர்மம் புகைத்தெழுந்து வேலிகளின் வழியாக உலாத்திக்கொண்டிருந்தது. அன்றிரவு அகதிகள் எல்லோரும் நேரத்தோடு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தத்தமது அறைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

அதிகாரிகளும் மேலதிக கவனத்தோடு, மணிக்கொரு தடவை வேலிகளின் வழியாக நடந்து சென்று, சோதனை செய்து, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது இருளைக் கிழித்துக்கொண்டு முகாமுக்கு வந்த பொலீஸ் வாகனம், அகுனாவை மெதுவாக முகாம் வாசலில் இறக்கியது.

கைவிலங்கிடப்பட்ட அகுனாவை, பொலீஸார் முகாமுக்குள் நடத்தி அழைத்துவரவும், முகாமின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஜெரமி வாசல் வழியாக பொலீஸ் வாகனத்தை நோக்கிப் பாய்ந்து ஓடிப்போனார்.

அகுனாவின் முகம் வியர்த்து, வாசல் வெளிச்சத்தில் மின்னியது. குனிந்தபடி பொலீஸின் பக்கத்தில் நடந்து வந்தான். அல்பா கம்பவுண்டின் மேல் மாடியில் நின்றுகொண்டிருந்த அகதிகள், வெளியில் அகுனா அழைத்துவரப்படுவதைக் கண்டு, கூச்சலிட்டார்கள்.

அன்றிரவு, அகுனா அல்பா கம்பவுண்டிலுள்ள தனியறையில் இரண்டு அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டான்.

அடுத்தநாள் காலை, அகுனா பிடிபட்டு முகாமுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டான் என்ற செய்தியோடுதான் முகாம் புலர்ந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அகதிகளுக்கு ஏதோவொரு செய்தியைச் சொல்லுகிற தோரணையில், கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.

தப்பியோடிய அகுனாவுக்கு, எங்கு ஓடுவது என்று தெரியாமல், முகாமுகு மிக அருகிலிருந்த `மெக் டொனால்ட்ஸ்’ உணவகத்தில் போய் நின்று பர்கர் வாங்கியிருக்கிறான்.

சிக்கன் பர்கரொன்றை அழுது அழுது சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு போன பொலீஸாரிடம் எந்த எதிர்ப்புமின்றி சரணடைந்துவிட்டான்.

குடிவரவுத்துறை அமைச்சின் முக்கிய அதிகாரிகள் அவனைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு முன்னர், அகுனா தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையின் பக்கமாகச் சென்ற நீதனை, அகுனா பெரிய குரலில் அழைத்தான். பேச வேண்டும் என்றான். வாசல் கதவுப் பக்கமாக ஓடினான்.

பாதுகாப்புக்கு நின்ற இரண்டு அதிகாரிகளும் அவனை இழுத்து விழுத்தினார்கள். எங்கும் அசைய முடியாது என்று அவனை இழுத்துச் சென்று சோபாவில் போட்டார்கள். அதைக் கண்ட நீதனுக்கு முகமெங்கும் ஆத்திரம் கொப்பளித்தது. அதை அதிகாரிகளும் கவனித்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

மனம் குழும்பிய ஒருவனை இவ்வாறு நடத்த வேண்டாம் என்று கோரிய நீதன், அறைக்குள் வந்து அகுனாவுக்கு ஒரு தேநீர் ஊற்றிக் கொடுத்து, சிறிது நேரம் பேசிவிட்டுப்போக அனுமதிக்குமாறு கேட்டான். அதிகாரிகள்மீது உள்ளே பொங்கிய ஆத்திரத்தை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக்கொண்டு நீதன் அந்தக் கோரிக்கையை முன்வைத்தான். அதிகாரத் தரப்புகளை வளைக்கிற முக்கிய ஆயுதமே பணிவுதான். எதிரே கேள்வி கேட்பவன் தங்களது அடிமைதான் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால், எந்த அதிகாரத் தரப்பும் பாதி வளைந்துவிடுவான்.

நீதனை உள்ளே அனுமதித்தார்கள். சற்று தூரத்திலிருந்து இருவரையும் அவதானித்தபடியிருந்தார்கள் அதிகாரிகள்.

நீதனைக் கட்டியணைத்துக்கொண்டு அகுனா சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதான். அவனால் பேச முடியாத சொற்கள் அனைத்தும் கண்ணீராகக் கரைந்து, நீதனின் தோள்களில் வடிந்தன.

சிறிது நேரத்துக்குப் பின்னர் எழுந்து, ததும்பிய கண்களோடு, ``என்னுடைய அண்ணா செத்துவிட்டாராம் நீதன். இவங்கள் இவ்வளவு நாளும் எனக்கு சொல்லயில்லை” என்றான்.

அகுனாவின் கண்ணீரால் தோய்ந்திருந்த நீதனின் தோள்கள் திடீரென்று குளிரில் உறைந்ததுபோலானது.

``இமிகிரேஷன் ஒபீஸேர்ஸ் என்னைப் பார்க்க வரப்போகினமாம். இப்ப பார் என்ன செய்யப்போறன் எண்டு...”

அகுனா சொன்ன அந்த வசனம் அவன் உதடுகளால், இரைந்துகொண்டு வந்து விழுந்தது. அகுனா ஒரு வெப்பப் பந்தாகக் கனன்றுகொண்டிருந்தான்.

(தொடரும்)