Published:Updated:

"ட்ரம்ப் எங்கள் அதிபர் இல்லை!"- மக்கள் போராட்டமும் ஊடக விமர்சனங்களும்! ட்ரம்ப் தொடர் - 7

Trump | ட்ரம்ப்
Trump | ட்ரம்ப் ( Alex Brandon / AP )

வழக்கத்திற்கு மாறாக ட்ரம்ப்பின் பிரசாரத்தின்போதே அவருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.

"வாஷிங்டன் இன்று மின்னுகிறது. ஆனால், அந்தப் பொலிவும், மகிழ்ச்சியும் மக்களிடத்தில் இல்லை. அரசியல்வாதிகள் செழிப்பாக இருக்கிறார்கள். நிறுவனங்கள் மூடப்பட்டுக்கொண்டு மக்கள் வேலைவாய்ப்பின்மையால் போராடுகிறார்கள். பிறநாடுகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பல பில்லியன்கள் செலவு செய்கிறோம். ஆனா, நம் நாட்டின் இன்றைய நிலை என்ன? அடிப்படை கல்வியைக்கூடப் பெற முடியாமல் இளைஞர்கள் குற்றவாளிகளாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

Trump
Trump
Alex Brandon

அமெரிக்கப் படுகொலைகள் இன்றுடன் முடிவுக்கு வரட்டும். அரசாங்கம், வாஷிங்டனிடமிருந்து மக்களின் கைக்கு வந்துள்ளது. இன்று முதல் புதிய பார்வை அரசாங்கத்திடம் உள்ளது. இனி அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கப் போகிறது. இந்த நாள் உங்களுக்கான நாள், உங்கள் கொண்டாட்டத்துக்கான நாள். இனி, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு உரிய நாடாக இருக்கப் போகிறது. அமெரிக்கா மீண்டும் அதன் வெற்றியை நோக்கிப் பயணிக்கப் போகிறது. முன் இல்லாததைவிட, நாம் இழந்த வேலை வாய்ப்புகளைத் திரும்பப் பெறப் போகிறோம். நாம் கனவுகளை மீண்டும் வெற்றிகரமாக மாற்றப் போகிறோம்.''

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது டொனால்ட் ட்ரம்ப் பேசிய பேச்சின் சுருக்கம் இது.
ஜனவரி 20 (2017), வெள்ளியன்று நண்பகலில் பதவியேற்றார் ட்ரம்ப். கேபிடல் கட்டடத்தின் மேற்கு வெளியில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருக்க அணிவகுப்பு, உறுதிமொழி, பிறகு அரசு விருந்து, நடன நிகழ்வு என அந்த நாள் முடிந்தது.

தலைமை நீதிபதியிடம் பதவியேற்ற ட்ரம்ப், கையிலிருந்த இரண்டு பைபிள்களையும் மக்கள் முன் காட்டி வாக்குறுதி வழங்கினார். ஒரு பைபிள் அவருடையது. மற்றொன்று காங்கிரஸ் நூலகத்தில் உள்ள ஆப்ரஹாம் லிங்கனின் பைபிள். ஒபாமா அந்த பைபிளோடுதான் இரண்டு முறையும் பதவியேற்றார். முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா இவர்களுடன் ஹிலாரி கிளிண்டன் இந்நிகழ்வில் பங்கேற்றார். தனது பதவியேற்பு நாளை 'தேசபக்தி தினமாக' அறிவித்தார் ட்ரம்ப்.

Trump
Trump
Evan Vucci

ட்ரம்ப்பின் உரை சரியாக 16 நிமிடம் அமைந்தது. 'அமெரிக்காவே முதல்!', 'நாம் அமெரிக்கர்கள்!' என்ற தீவிர தேசியவாதம் ட்ரம்ப் உரையின் சாரமாக இருந்தது. தானே தயாரித்த உரை என்று அவர் கூறினாலும், 'இது ஸ்டீவன் மில்லரும், ஸ்டீவ் பேனோனும் எழுதிக்கொடுத்தது' என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' குறிப்பிட்டது. தொடர்ந்து, பிரிவினையையும் மற்ற மக்களுக்கு எதிரான வெறுப்பரசியலையும் வெளிப்படுத்திய உரை என ஊடகங்கள் விமர்சித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக 'கேவலமான உரை' என கோபப்பட்டார் முன்னாள் குடியரசு கட்சி அதிபர் ஜார்ஜ் புஷ்.

"90-களில் இருந்ததைவிட தற்போது அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்துள்ளது, வேலைவாய்ப்பின்மையும் குறைந்துவரும்போது அமெரிக்காவை மோசமாக ட்ரம்ப் குறிப்பிடுவது தன்முனைப்பானது!"
என அரசியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
ட்ரம்ப் நண்பன், ஹிலாரி எதிரி... ரஷ்யா போட்ட கணக்கும், அமெரிக்கத் தேர்தலும்! | ட்ரம்ப் தொடர் - 6

பிரிவினையைத் தூண்டி, அயல் நாட்டின் தலையீட்டில் வென்றவரின் பதவியேற்புக்கு வர மாட்டோம் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 67 அவை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு அதிபரின் பதவியேற்பின்போதும் கேபிடல் கட்டட வளாகம் நிரம்பி வழியும். ஒபாமா பதவியேற்புக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். ஆனால், ட்ரம்ப்பின் பதவியேற்பிற்கு 6 லட்சம் பேர் கூட கலந்துக்கொள்ளவில்லை, பல இடத்தில் காற்று வாங்கியது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சீன் ஸ்பைசர் கூறும்போது, "உலகத்திலேயே இதுபோன்ற மக்கள் திரள் எந்த அதிபரின் பதவியேற்பிற்கும் வந்ததில்லை. இதுதான் முதல்முறை" என்று குறிப்பிட்டு தவறான தகவல் வெளியிட்டதாக ஊடகங்களைக் கடிந்தார். ஆனால் பின்னாளில், 'கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்டு ட்ரம்ப் கோபப்பட்டார். காலியான இடங்களிலெல்லாம் கூட்டம் இருப்பது போல் எடிட் செய்து வெளியிடச் சொன்னார்' என்று அரசின் புகைப்படக்காரர் ஒருவர் கூறினார்.

Trump
Trump
வழக்கத்திற்கு மாறாக ட்ரம்ப்பின் பிரசாரத்தின்போதே அவருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. ட்ரம்ப் வெற்றிபெற்ற அடுத்த சில நாட்கள் முழுவதும் ட்ரம்ப்பிற்கு எதிரான ஹேஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களை நிரப்பின.

பதவியேற்பு நிகழ்விடத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் போராடி கைதானார்கள். அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை மறுத்தும், பெண்களுக்கு எதிரான மோசமான எண்ணம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்காகப் பெண்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலையிலிருந்தனர். வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி நடத்தினர். பதவியேற்ற மறுநாள் உலகம் முழுவதிலிருந்தும் 40 லட்சம் பெண்கள் நடை பேரணியில் கலந்துக் கொண்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு பெரிய ஒருநாள் எதிர்ப்பு பதிவானது. பலதரப்பட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் போராடிய போதும் அனைவரும் குறிப்பிட்ட ஒன்று,

"ட்ரம்ப் எங்கள் அதிபர் இல்லை!"

அடுத்த கட்டுரைக்கு