Published:Updated:

`ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113; பால் ரூ.140 !' - பாகிஸ்தானில் உச்சத்தைத் தொட்ட நிதி நெருக்கடி

சத்யா கோபாலன்

பாகிஸ்தானில், ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.140 -க்கு விற்கப்படுவதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Milk
Milk

பாகிஸ்தானில், மொஹரம் பண்டிகை நாள்களில் பாலின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, அந்தச் சமயங்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டின் மொஹரம் பண்டிகை நேற்று பாகிஸ்தான் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Muharram
Muharram

ஆனால், அங்கு ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலின் விலை அதைவிட அதிகரித்துள்ளது, அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``கேரளாவால முடியுது... நம்மால முடியாதா?'' - பால் விலைக்கு எதிராகக் கொதிக்கும் பெண்கள்

குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சி, சிந்த், இஸ்லாமாபாத் போன்ற பெரிய மாகாணங்களில்தான் இவ்வளவு அதிக விலைக்கு பால் விற்கப்பட்டுள்ளது. ”இந்த வருடம் பாலின் வரத்து குறைந்துள்ளதால், கராச்சி போன்ற இடங்களில் ஒரு லிட்டர் பால் 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது” என ஒரு வியாபாரி ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக விலைக்கு பால் வாங்கியதில்லை எனப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Milk
Milk

பாகிஸ்தானின் மிகவும் சரிவடைந்த பொருளாதார நிலையை இந்தப் பால் விலை காட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, ஆலோசனை வழங்க, தங்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளதாக, சமீபத்தில் பன்னாட்டு நிதியம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பால் விலையைக் கட்டுப்படுத்தும் கராச்சி கமிஷனர் இப்திகார் ஷல்வானி நிர்ணயித்த விலை ரூ.94 என கூறப்படுகிறது. அதையும் தாண்டி, 140 ரூபாய்க்கு பால் விற்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.