Published:Updated:

ட்ரம்ப் வெளியேற்றம், பைடன் குடியேற்றம்... வெள்ளை மாளிகையின் 5 மணி நேர ஆச்சர்யம்! #TrumpLastDay

பைடன், ட்ரம்ப்
பைடன், ட்ரம்ப் ( Julio Cortez )

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பழைய அதிபர் வெளியேறி, புதிய அதிபர் குடியேறும் நடைமுறை, ஒரே நாளில் ஐந்து மணி நேர இடைவெளியில் நடந்து முடிந்துவிடும் என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று!

சாதாரண வீட்டை மாற்றவே ஒரு வீக் எண்டே காலியாகும் நிலையில், வெள்ளை மாளிகையில் பழைய அதிபர் வெளியேறி, புதிய அதிபர் குடியேறும் நடைமுறை வெறும் 5 மணி நேரத்தில் நடந்துமுடிகிறது... நம்பமுடியவில்லையா?! மிஸ் செய்யாமல் தொடர்ந்து படியுங்கள்!

இன்று அமெரிக்க நேரப்படி மதியம் 12.01க்கு வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்டு ட்ரம்ப் வெளியேறுகிறார். மாலை ஐந்து மணிக்கு புதிய அதிபர் ஜோ பைடனின் குடும்பம் அங்கு குடியேற இருக்கிறது. வெள்ளை மாளிகையில் மொத்தம் 6 மாடிகளில், 132 அறைகள் உள்ளன. இந்த இடைப்பட்ட ஐந்து மணி நேரத்துக்குள், அத்தனை அறைகள், வராண்டாக்கள், மாடிப் படிகளின் கைப்பிடிகள் உள்பட எல்லாவற்றையும் சுத்தம் செய்து, முடிப்பார்கள். இது கொரோனா காலம். ட்ரம்ப் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டனர். எனவே, இரட்டை கவனத்துடன் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
அதிபர் குடும்பம் வந்ததும் ஓய்வெடுப்பதற்கான அறைகள் முதல், அவர்கள் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் பொருட்கள் வரை எல்லாமே இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் தயாராகிவிடும். இந்த எல்லாப் பணிகளையும் செய்வது, வெள்ளை மாளிகை பராமரிப்புப் பணியில் இருக்கும் 90 ஊழியர்கள் மட்டுமே.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
Rich Pedroncelli

* வழக்கமாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில், பதவி விலகும் அதிபர்கள் பங்கேற்பதுண்டு. எல்லா நடைமுறைகளையும் அலட்சியம் செய்யும் ட்ரம்ப், இந்த விழாவையும் புறக்கணிக்கிறார். ஜோ பைடன் பதவியேற்கும் அதே நேரத்தில் ட்ரம்ப் தன் குடும்பத்துடன் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் சொகுசு ரிசார்ட்ஸ் செல்கிறார். அங்குதான் அவர் குடும்பம் இனி வசிக்க உள்ளது.

* அதிபராகப் பதவியேற்கும் வரை, வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள 'பிளேர் ஹவுஸ்' என்ற விருந்தினர் மாளிகையில் ஜோ பைடன் குடும்பம் தங்கியுள்ளது. ஜோ பைடன் குடும்பத்தின் பொருட்கள் அனைத்தும் வாஷிங்டன் வந்து சேர்ந்துவிட்டன. ஆனால், அவர் அதிபராகப் பதவியேற்கும் வரை அவற்றை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அவை கன்டெய்னரில் வைக்கப்பட்டு அங்கேயே காத்திருக்கும். விழாவில் அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் அதே நேரத்தில், அந்த கன்டெய்னர்கள் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்கப்படும்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
Carolyn Kaster

* வெள்ளை மாளிகையின் இரண்டாவது மாடியில்தான் அதிபர் குடும்பம் வசிக்கும். 16 அறைகளும், 6 குளியலறைகளும் கொண்ட இந்த இரண்டாவது மாடியை, கிட்டத்தட்ட ஜோ பைடனின் வீடு போல தோற்றமளிக்கும் விதத்தில் மாற்றுவது வெள்ளை மாளிகை ஊழியர்களின் கடமை.

* வெள்ளை மாளிகை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கும், அதிகாரிகளுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளவும், வெற்றி பெற்ற அதிபர் குடும்பத்தை பதவியேற்புக்கு முன்பாக அழைப்பது ஒரு மரபு. ஒபாமா பதவியேற்பதற்கு முன்பாகவே, ஒபாமா குடும்பத்தை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இரண்டு முறை தேநீர் விருந்துக்கு அழைத்தார். வெள்ளை மாளிகையில் தங்களுக்குத் தேவைப்படும் மாற்றங்களை அப்போதே அவர்கள் சொல்லிவிட்டனர். ஒபாமாவும் இப்படி ட்ரம்ப்பை அழைத்து வெள்ளை மாளிகை நடைமுறைகளையும் அதிகார மாற்றத்தையும் சுலபமாக்கினார். ஆனால், ஜோ பைடனை ட்ரம்ப் அழைக்கவே இல்லை. என்றாலும், ஒபாமா ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை அமைப்பு நன்கு தெரியும் என்பதால், அவர்கள் தயாராகிவிட்டனர்.

Joe Biden Inauguration
Joe Biden Inauguration
Susan Walsh

* பொதுவாக தேர்தல் முடிந்ததுமே, அதிபர் வெளியேறுவது மற்றும் புதிய அதிபர் வருகைக்கான நடைமுறைகள் தொடங்கிவிடும். ஆனால், தன் தோல்வியை ட்ரம்ப் நீண்ட காலம் மறுத்து சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அதனால், வெள்ளை மாளிகையை காலி செய்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர் மனைவி மெலனியா ட்ரம்ப் மனதளவில் தயாராகி தங்கள் குடும்பப் பொருட்களை மூட்டை கட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

அமெரிக்கா: கமலா ஹாரிஸ், செலினா கவுண்டர், விவேக் மூர்த்தி..! -ஜோ பைடன் அரசில் இந்தியர்கள்

* ஓர் அதிபர் வெளியேறும்போது, அவரின் தனிப்பட்ட குடும்பப் பொருட்களை மட்டுமே வெளியில் எடுத்துப்போக முடியும். அவர் காலத்தில் வெள்ளை மாளிகையில் வாங்கிய பொருட்கள் அனைத்தும் அங்கேயே இருக்கும். புதிய அதிபர் வரும்போது, அவற்றில் தேவைப்படுபவற்றை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். அறைகளையும் தங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம். வரவேற்பு அறையை படுக்கை அறையாகவும், படுக்கை அறையை வரவேற்பு அறையாகவும் மாற்றிய அதிபர்கள் உண்டு. சில அதிபர்கள் கட்டில் முதல் சோஃபா வரை எல்லாவற்றையும் தங்கள் வீட்டிலிருந்தே எடுத்து வருவதும் உண்டு. ஆனால், ஜோ பைடன் சிம்ப்பிளாக சில பொருட்களை மட்டுமே எடுத்துவந்து வெள்ளை மாளிகையில் குடியேறுகிறார்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
Rebecca Blackwell

* ட்ரம்ப் அதிபராக இருந்த நான்கு ஆண்டு காலத்தில் வகுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பான ஆவணங்கள், பேச்சுவார்த்தை விவரங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பாக தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படும். இவை 12 ஆண்டுகளுக்கு ரகசியமாகவே இருக்கும். புதிய அதிபர் விரும்பினால், அவற்றிலிருந்து சிலவற்றை வெளியிடலாம்.

* வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் குடியேறும் அதே நேரத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது மாளிகையில் குடியேறுவார். வெள்ளை மாளிகையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்படை கோளரங்க மைதானத்தில் உள்ள 19-ம் நூற்றாண்டு மாளிகை அது. பழைய துணை அதிபர் மைக்கேல் பென்ஸ் அதை காலி செய்து கொடுக்க, கமலா ஹாரிஸும் கணவர் டக் எம்ஹாஃபும் அதில் குடியேறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு