கடந்த பிப்ரவரி, 24-ம் தேதி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியது. இதனால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரஷ்யப் படைகள் போர் தொடங்கிய நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. முதன்முதலில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டபோது, நானும் என் மனைவியும் எங்கள் 17 வயது மகள், 9 வயது மகனை ஆறுதல்படுத்தியதும் நினைவில் இருக்கிறது. அந்தச் சத்தம் இன்னும் எனக்குக் கேட்கிறது. மேலும், எனக்கு அதிபர் அலுவலகம் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னையும், எனது குடும்பத்தினரையும் கொல்வதற்காகவோ அல்லது கைதுசெய்து பிடிப்பதற்காகவோ ரஷ்ய ராணுவக் குழுவொன்று கீவ் நகருக்குள் பாராசூட் மூலம் நுழைந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு, நாங்கள் இதையெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம். எனது தலைமை அதிகாரியான அன்ட்ரி யெர்மக் (Andriy Yermak) அதிபர் மாளிகை வளாகத்தின் பின்புற நுழைவாயில் போலீஸ் தடுப்புகள் மற்றும் பிளைவுட் பலகைகளின் குவியலால் தடுத்தார்.

கோட்டை போன்ற ஜனாதிபதி அலுவலகம் குப்பைமேட்டைப்போல இருந்தது. ரஷ்யத் தாக்குதலின் முதல் இரவில், விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, எனது வளாகத்துக்குள் இருந்த காவலர்கள் குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் துப்பாக்கிகளை எனக்கும், என் உதவியாளர்களுக்கும் கொண்டுவந்தனர். மேலும் என் மனைவி, குழந்தைகள் மட்டும் தனிமையிலிருந்தபோது ரஷ்ய ராணுவம் இரண்டு முறை எங்கள் வளாகத்தைத் தாக்க முயன்றது" எனக் கூறியுள்ளார்.