Election bannerElection banner
Published:Updated:

"இந்த சொர்க்க பூமியில் நாங்கள் மட்டும் ஏன் நரக வாழ்க்கை வாழ்கிறோம்?"- காங்கோவில் என்ன நடக்கிறது?!

காங்கோ
காங்கோ

நாடு மிகவும் பலவீனமான வளர்ச்சியடையாத நிலையிலேயே இன்னும் இருந்தாலும் ஆயுத குழுக்கள், பல்கிப்பரவும் நோய்கள், பாலியல் வன்முறைகள், கொலை கொள்ளை, வறுமை, பசி, பட்டினி என எல்லாமே மிகவும் செழிப்பாகவே வளர்ந்துள்ளது.

உலகின் இளம் வெளிநாட்டு தூதர், இத்தாலிய ராஜதந்திரத்தின் இளம் அடையாளம், மிகச்சிறந்த மனிதாபிமான முகம் போன்ற பல அடைமொழிகளால் வர்ணிக்கப்பட்ட காங்கோ நாட்டுக்கான இத்தாலிய தூதர் லூகா அட்டனசியோ சமீபத்தில் (Luca Attanasio) காங்கோ நாட்டில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனத்தில் பாதுகாப்பு பரிவாரங்களோடு பயணம் செய்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதுதான் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

43 வயதான லூகா அட்டனசியோ, அவரது மெய்ப்பாதுகாப்பாளரான 30 வயதான இத்தாலி நாட்டின் துணை ராணுவ போலீஸ் அதிகாரி, மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் என மூவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

காங்கோவில் பணியாற்றும்போது கொல்லப்பட்ட இரண்டாவது ஐரோப்பிய தூதர் அட்டனசியோ. தூதர்கள் கொல்லப்படுவதுபோல தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையினத்தவர்கள் தொடர்ந்து காங்கோவில் கொல்லப்படுகிறார்கள்.

Luca Attanasio
Luca Attanasio
EPA-EFE/ITALIAN FOREIGN MINISTRY

இதற்கான காரணம் என்ன?!

இருண்ட பூமி!

ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா போன்ற உலகெங்கிலும் உள்ள மற்ற ஹாட்ஸ்பாட்கள் மேல் அடிக்கப்பட்ட ஸ்பாட்லைட் வெளிச்சத்தில் தெரியாமல் மறைந்து போன இன்னுமொரு இருண்ட பூமி காங்கோ.

உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய கண்டம், பரந்த பாலைவனங்கள், வெப்பமண்டல மழைக்காடுகள், கரடுமுரடான மலைகள், வளமான புல்வெளிகள், கிளிமஞ்சாரோ மலை, விக்டோரியா ஏரி, சகாரா பாலைவனம், எங்கும் காணமுடியா வன விலங்குகள், கணக்கிலடங்கா கனிய வளங்கள் என உலகின் அதிசயங்கள் அனைத்தையும் தன்னுள்ளே அடைத்துக்கொண்ட ஆப்பிரிக்காவின் மையப்புள்ளி டி.ஆர்.சி (Democratic Republic of the Congo). சுருக்கமாக காங்கோ.

ஆப்பிரிக்கா கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு. இதன் தலைநகர் கின்ஷாசா மத்திய ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம். பெல்ஜியம் மன்னரான King Paul Leopold-II ன் சொத்தாக பல தசாப்தங்களாக இருந்த காங்கோவிலிருந்து தங்கம், வைரம், யுரேனியம் போன்ற பல கனிம வளங்களை மொத்தமாக சுரண்டியது பெல்ஜியம். காங்கோ மக்கள், மன்னனின் கட்டளைப்படி தினமும் ஒரு குறிப்பிட்டளவு தங்கம், வைரம் போன்றன எடுத்துவர வேண்டும். அதில் ஒரு பருக்கை அளவு குறைந்தாலும் அவர்கள் கைகள் துண்டிக்கப்பட்டன. மந்தைக் கூட்டமாக மாற்றப்பட்ட மக்களில் யாருக்கும் கல்வி கற்பிக்கப்படவில்லை. கல்வி உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்குப்பிறகு 1960-ல் காங்கோ மக்களுக்கு ஐரோப்பியர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. நரியூரிடம் இருந்து தப்பித்து புலியூரில் மாட்டிக்கொண்ட கதையாக காங்கோவை சுரண்டி சூறையாடிக்கொண்டிருந்த பெல்ஜியத்திடம் இருந்து தப்பி, சுயநல அரசியல்வாதிகளின் கைகளில் போய் மாட்டிக்கொண்டார்கள் காங்கோ மக்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு புறம் நாட்டை அந்நியர்களுடன் சேர்ந்து பங்கு போட, இதை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர்கள் மறுபுறம் மக்களை கொன்று குவித்தனர்.

காங்கோ குடியரசு
காங்கோ குடியரசு
காங்கோ ஜனநாயக குடியரசு
காங்கோ ஜனநாயக குடியரசு

காங்கோ குடியரசு Vs. காங்கோ ஜனநாயக குடியரசு!

பூமத்திய ரேகையினால் பிரிக்கப்படும் இரண்டு காங்கோ அண்டை நாடுகளிடையேயும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) மக்கள் தொகை மற்றும் பரப்பளவு இரண்டிலும் மிகப் பெரியது. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 கோடி. தமிழ்நாட்டைவிட கொஞ்சம் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு. இன்னொரு நாடான காங்கோ குடியரசில் (Republic of the Congo) வெறும் 40 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.

பொதுவாக எங்கு பரபரப்பாக ஒரு விஷயம் நடக்கிறதோ அங்குதான் மீடியா வெளிச்சம் பாய்ச்சப்படும். அங்கு அடிக்கும் ஸ்பாட்லைட்டுக்கு பின்னால் அதை சுற்றி உள்ள பல விஷயங்கள் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விடும். காங்கோ ஜனநாயக குடியரசும், இவ்வாறு இருளுக்குள் மூழ்கிப்போன துயரம்தான். 'கும்கி' திரைப்படத்தில் ஒரு காட்சியில் தம்பி ராமையாவிற்கு ஜாதகம் சொல்லும் ஜோதிடன், “உங்க 52 வயது வரை அவமானப்பட்டு கஷ்டப்பட்டு துன்பப்பட்டு அசிங்கப்பட்டு கேவலமா வாழ்க்கை இருக்கும்” என்பார். தம்பி ராமையா மிகவும் நம்பிக்கையோடு “அதுக்கு அப்பறம்?" என கேட்க “அதுவே பழகிடும்” என்பார் அந்த ஜோதிடர். அதேபோலதான் காங்கோ நாட்டு வறுமையும், கொடுமையும் அங்கு நிகழும் அவலங்களும் அங்குள்ள மக்களுக்குப் பழகிவிட்டது. வெளிச்சம் படாத கருப்பு நிழலுக்குள் அந்தப் பூமி மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது.

நாடு மிகவும் பலவீனமான வளர்ச்சியடையாத நிலையிலேயே இன்னும் இருந்தாலும் ஆயுத குழுக்கள், பல்கிப்பரவும் நோய்கள், பாலியல் வன்முறைகள், கொலை கொள்ளை, வறுமை, பசி, பட்டினி என எல்லாமே மிகவும் செழிப்பாகவே வளர்ந்துள்ளது.
காங்கோவிலுள்ள பிட்டோபோலோ கிராமம்
காங்கோவிலுள்ள பிட்டோபோலோ கிராமம்

இயற்கை வாரி வழங்கியுள்ள வளங்கள்!

ஒரு காலத்தில் கடவுள் ஒரு கூடையில் தன்னிடம் உள்ள எல்லா வளங்களையும் போட்டு உலகை வலம் வந்தாராம். வழியில் பார்த்த நாடுகளுக்கு எல்லாம் அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து கொடுத்தாராம். ஒரு கட்டத்தில் நடந்து நடந்து கடவுளுக்கே களைப்பானதில் ஓர் இடத்தில் நின்று விட்டாராம். கூடையில் மீதமிருந்த அத்தனையையும் அந்த நாட்டுக்குள் அள்ளித் தூவினாராம். அதுதான் காங்கோ என்பார்கள்.

24 பில்லியன் USD-க்கும் மேற்பட்ட மதிப்புள்ள கனிம வளங்கள் காங்கோ நாட்டின் மண்ணுக்கு அடியே புதைந்துள்ளன. தங்கம், வைரம், யுரேனியம், காப்பர் என உலகில் உள்ள அத்தனை கனிம வளங்களும் கொட்டிக்கிடக்கும் நிலம். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மொபைல் போன், லேப்டாப் முதல் ஜெட் இன்ஜின் வரை உற்பத்தி செய்யத் தேவையான Coltan கனிம வளத்தின் 65 சதவிகிதம் காங்கோ நிலத்துக்கடியிலேயே நிறைந்து கிடக்கிறது. உலகிலேயே இயற்கை வளம் செழித்த பணக்கார பூமியில்தான், மிகவும் கையறு நிலையில் ஏழ்மையான மக்கள் வாழ்கிறார்கள்.

ஆயுதக் குழுக்களின் மோதல்களும் கொரில்லா தாக்குதல்களும்!

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மோதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகிலேயே, காங்கோ ஜனநாயக குடியரசில்தான் அதிகம். யுத்தம் அந்த நாட்டின் வளர்ச்சியை குழி தோண்டிப் புதைத்துவிட்டது. காங்கோவின் மிகப்பெரிய பிரச்னை அதன் சுயநல அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ருவாண்டாவிலிருந்து வெளியேறிய ஹுட்டு இனப்படுகொலை தீவிரவாதிகளின் தொடர்ச்சியான ஆதிக்கமும்தான்.

அங்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் மிருகத்தனமான மோதல்கள் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாகி தங்கள் வீடுகளிலிருந்து பிடுங்கப்பட்டு திக்குத் தெரியாத திசைகளுக்குள் வீசப்பட்டுள்ளனர். 2020-ம் ஆண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த புதிய வன்முறைகள் காரணமாகக் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் மோசமான சுகாதார வசதிகளுடன் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்.

வடக்கு காங்கோவில் நடந்த கலவரம் ஒன்றிலிருந்து பிணங்களை மீட்கும் பணியிலிருக்கும் ஐக்கிய நாடுகளின் படையினர்
வடக்கு காங்கோவில் நடந்த கலவரம் ஒன்றிலிருந்து பிணங்களை மீட்கும் பணியிலிருக்கும் ஐக்கிய நாடுகளின் படையினர்
AP | Justin Kabumba

பசி, பட்டினி!

உலக உணவுத் திட்டத்தின் (WFP) அறிக்கைபடி, டி.ஆர்.சி-யில் பத்தில் ஆறு பேர் உணவின்றி தவிக்கிறார்களாம். ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக நாட்டின் கிழக்கில் பரவலாக உள்ளது. சுமார் ஒன்றரை கோடி பேர் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். களிமண்ணை ரொட்டியாக சுட்டு சமைத்து உண்டு, சேறு கலந்த நீரைக் குடித்து வயிற்றுப்பசியை ஆற்றுகிறார்கள்.

பாதிக்கப்படும் இளம் பெண்கள்!

இங்கு பல மொட்டுகள் விரியும் முன்னரே கசக்கி வீசப்படுகின்றன. பல குழந்தைகள் ஆயுதக் குழுக்களில் போராளிகளாக பலவந்தமாக இணைக்கப்படுகின்றனர். புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் ஆயுதம் ஏந்துவதால் உலகின் மிகவும் கல்வி அறிவு குறைந்த இரண்டாவது நாடக DRC உள்ளது. ஆயுதக் குழுக்களிடமிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்ற அச்சத்தாலேயே வீடு திரும்புவதற்கு மறுக்கின்றனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம் உலகிலேயே அதிகமாக உள்ள நாடுகளில் காங்கோவிற்கு முதலிடம் உள்ளது. வறுமை காரணமாக பல குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என காங்கோ அழைக்கப்படுகிறது. பட்டப் பகலில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகிறார்கள். சரியான பாலியல் அறிவு, குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இல்லாததால் மிக இளம் வயதிலேயே பெண் குழந்தைகள் கர்ப்பமாகிறார்கள்.

சுரண்டப்படும் உழைப்பு, சூறையாடப்படும் செல்வம்!

சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் நடந்து கனிம வள சுரங்கங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் மக்கள். முழு நாளும் பசியிலேயே இவர்கள் வேலை செய்கிறார்கள். அதில் வரும் சொச்ச காசில் தம் பிள்ளைகளாவது ஒரு வேளை உணவு உண்ணட்டும் என எண்ணி மிச்சப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக 20 மணி நேரத்திற்கும் மேல் வேலை. 70 அடி சுரங்கங்களுக்குள் சென்று உயிருடன் திரும்பினாலே பெரிய அதிர்ஷ்டம். இவற்றிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா என்றால் இல்லை. உலக சந்தையில் கிலோ 120 டாலர்களுக்கு போகும் Coltan கனிமவளம் இவர்களிடம் இருந்து கிலோ 5 டாலர்களுக்கு என மிகக்குறைந்த விலைக்கு வெளிநாட்டவர்களால் கொள்முதல் செய்யப்படுகின்றது.

காங்கோ பாரம்பர்ய நடனம்
காங்கோ பாரம்பர்ய நடனம்

உலக நாடுகளின் அபிவிருத்திக்கு காங்கோ மிகப் பெரியளவில் பங்களிக்கிறது. காங்கோவின் பங்களிப்பு இல்லாத உலகப் பொருளாதாரம் பெரிய சரிவை நோக்கி நகரும். காங்கோவின் வளங்கள் இல்லாமல் ஒரு நாளைக் கூட வளர்ந்த அடைந்த நாடுகள் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் இம்மக்களின் வளர்ச்சியோ கானல் நீராகவே உள்ளது.

அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற விடை தெரியா கேள்வி கண் முன் வைக்கப்படும் போது மனிதன் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகிறான். விபச்சாரம், போதை வியாபாரம், கொள்ளை, திருட்டு, ஆயுத மோதல், சிறுவர் கடத்தல், லஞ்சம், ஊழல், அரசியல் துரோகங்கள் என அத்தனைப் பாவங்களும் இந்தப் பூமிக்குள் கொட்டிக் கிடக்கின்றன.

விடை தெரியாத கேள்விகள்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கறுப்பா இருக்கிறவன் களவாடுவான் என்பது வெள்ளையர்களால் பரப்பப்பட்ட பொய் பிரசாரம். இது பொய் பிரசாரம் என்பதற்கு சான்று காங்கோ. கறுப்பின மக்களின் செல்வத்தைத் திருடி, அவர்கள் சந்ததியையே மீண்டு வர முடியாதொரு தீ குழிக்குள் தள்ளி, குளிர் காய்கிறது வெள்ளையர்கள் சூழ்ந்த வளர்ந்த நாடுகள்.

காங்கோ மக்களுக்கு இன்றுவரை விடை தெரியாத கேள்வி ஒன்றே ஒன்றுதான் “இந்த சொர்க்க பூமியில் நாங்கள் ஏன் நரக வாழ்க்கை வாழ்கிறோம்?''
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு